Wednesday, 22 July 2020

விவிலிய கைம்பெண்ணுக்கு கருணைப் பரிசு

இயேசு அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர் லூக்கா 7:12

நயீன் ஊரைச் சேர்ந்த கைம்பெண்ணின் மகனுக்கு இயேசு உயிர்தரும் புதுமை நிகழ்ந்த இடம், சூழல் ஆகியவற்றில், நம் தேடலைத் துவக்குவோம்.
ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான்


லூக்கா நற்செய்தியில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ள 5 தனித்துவம் மிக்க புதுமைகளில்,  கெனசரேத்து ஏரியில் நிகழ்ந்த பெருமளவு மீன்பிடிப்பு என்ற புதுமையை, கடந்த சில வாரங்கள் நாம் சிந்தித்துவந்தோம். இன்று, நயீன் ஊரைச் சேர்ந்த கைம்பெண்ணின் மகனுக்கு இயேசு உயிர்தரும் புதுமையில் நாம் தேடலைத் துவக்குகிறோம். லூக்கா நற்செய்தி 7ம் பிரிவின், 11 முதல் 17 முடிய உள்ள ஏழு இறைவாக்கியங்களில் கூறப்பட்டுள்ள இப்புதுமை நிகழ்ந்த இடம், சூழல் ஆகியவற்றில், நம் தேடலைத் துவக்குவோம்.
லூக்கா நற்செய்தி, 6ம் பிரிவில், இயேசு வழங்கிய 'சமவெளிப் பொழிவு' என்ற உரை பதிவாகியுள்ளது. 20 முதல் 49 முடிய உள்ள 30 இறைவாக்கியங்களில் வழங்கப்பட்டுள்ள அந்த உரையைத் தொடர்ந்து, 7ம் பிரிவில், 'நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைதல்' மற்றும், 'நயீன் ஊரைச் சேர்ந்த கைம்பெண்ணின் மகனை உயிர்பெறச் செய்தல்' என்ற இரு புதுமைகளை, நற்செய்தியாளர் லூக்கா, ஒன்றன்பின் ஒன்றாக, தொடர்ந்து பதிவுசெய்துள்ளார்.
நூற்றுவர் தலைவரின் பணியாளர், அல்லது, மகன் குணமடையும் புதுமை, லூக்கா, மத்தேயு மற்றும் யோவான் ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளதால், இப்புதுமையை நாம் ஏற்கனவே சிந்தித்துள்ளோம். எனினும், இப்புதுமையின் நாயகனான நூற்றுவர் தலைவரைப்பற்றிய ஒரு சில எண்ணங்கள், நமக்கு உதவியாக இருக்கும் என்பதால், இப்புதுமையின் ஒருசில அம்சங்களை, மீண்டும் ஒருமுறை, நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
இப்புதுமையைப் பதிவுசெய்துள்ள மத்தேயுவும் (மத். 8:5-13), யோவானும் (யோவா. 4:43-54), இந்த அலுவலர், இயேசுவை நேரடியாகச் சந்தித்து தன் விண்ணப்பத்தை எழுப்பியதாகக் கூறியுள்ளனர். ஆனால், லூக்கா நற்செய்தியிலோ, நூற்றுவர் தலைவர், யூதரின் மூப்பர்கள் வழியே இயேசுவிடம் விண்ணப்பத்தை அனுப்பினார் என்று கூறப்பட்டுள்ளது. அவ்விண்ணப்பத்தை ஏற்ற இயேசு, மூப்பர்களோடு, நூற்றுவர் தலைவர் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த வேளையில், நூற்றுவர் தலைவர், தன் நண்பர்களை இயேசுவிடம் அனுப்பி, "ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்" (லூக்கா 7:6-7) என்ற புகழ்பெற்ற சொற்களைக் கூறினார் என்றும் கூறப்பட்டுள்ளது. நூற்றுவர் தலைவர் சொன்ன இச்சொற்கள், நாம் கொண்டாடிவரும் திருப்பலியின் ஒரு முக்கிய வேண்டுதலாக அமைந்துள்ளது என்பதை நாம் அறிவோம்.
இப்புதுமை நிகழ்வதற்கு முன்னரும், நிகழ்ந்த பின்னரும், இயேசுவும், நூற்றுவர் தலைவரும் ஒருவர், ஒருவரை சந்தித்தனரா என்பது தெரியவில்லை. அதைக் குறித்து நற்செய்தியாளர் லூக்கா ஒன்றும் சொல்லவில்லை. இயேசுவின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்த நூற்றுவர் தலைவரும், அந்த நம்பிக்கையை மனதாரப் பாராட்டிய இயேசுவும், ஒருவரையொருவர், நேருக்கு நேர், சந்திக்காமலேயே பிரிந்து சென்றிருக்கக்கூடும்.
நல்லவர் ஒருவரின் நலமளிக்கும் ஆற்றல், தன் இல்லம் தேடிவந்தது என்ற திருப்தி, நூற்றுவர் தலைவருக்கு. தன் மீது நம்பிக்கை கொண்ட ஒரு நல்லவருக்கு, நன்மை செய்த திருப்தி, இயேசுவுக்கு. இப்படி, இயேசுவை நேரடியாகச் சந்திக்காமலேயே தன் ஆழ்ந்த நம்பிக்கையை பறைசாற்றிய நூற்றுவர் தலைவர்தான், மீண்டும் கல்வாரியில், சிலுவையடியில், இயேசுவைச் சந்திக்கச் சென்றாரோ என்று என் மனம் எண்ணிப் பார்க்க விழைகிறது.
சிலுவையடியில் நின்ற நூற்றுவர் தலைவர் ஒருவரைப்பற்றி, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தியாளர்களும் கூறியுள்ளனர். கல்வாரியில், சிலுவையில், இயேசு அமைதியாக உயிர் துறந்ததைக் கண்ட நூற்றுவர் தலைவர், "'இவர் உண்மையாகவே நேர்மையாளர்' என்று கூறி கடவுளைப் புகழ்ந்தார்" (லூக்கா 23:47) என்று நற்செய்தியாளர் லூக்கா கூறியுள்ளார். மத்தேயு, மாற்கு இருவரும், இன்னும் ஒருபடி மேலேச் சென்று, "இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்" (மத். 27:54; மாற். 15:39) என்ற விசுவாச அறிக்கையை, நூற்றுவர் தலைவர் வெளியிட்டார் என்று கூறியுள்ளனர்.
சிலுவையைச் சுற்றி நின்ற யூதர்களும், யூத மதத்தலைவர்களும் வெளியிட மறுத்த, அல்லது, வெளியிடப் பயந்த, ஒரு விசுவாச அறிக்கையை, உரோமையரான நூற்றுவர் தலைவர் வெளியிட்டார். தன் பணியாளரின் நலம்வேண்டி விண்ணப்பத்த நூற்றுவர் தலைவர், "நீர் என் இல்லத்திற்கு வர நான் தகுதியற்றவன், ஒரு வார்த்தை சொல்லும், என் பணியாளர் நலம் பெறுவார்" என்று சொன்னதைக் கேட்டு, "இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்" (லூக்கா 7:9) என்ற பாராட்டை இயேசு அவருக்கு வழங்கினார் என்பதை அறிவோம்.
கல்வாரியில், தன் உயிர் பிரிந்த தருணத்தில், நூற்றுவர் தலைவர் வெளியிட்ட விசுவாச அறிக்கையைக் கேட்டு, இயேசு, "மக்களிடத்தில் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை" என்ற பாராட்டை, மீண்டும் அவருக்கு வழங்கியிருப்பார் என்று நாம் நம்பலாம்.
ஒருவரையொருவர் நேருக்கு நேர் சந்திக்காத வேளையிலும், நூற்றுவர் தலைவரின் சொற்களுக்கு மதிப்புக்கொடுத்து இயேசு ஆற்றிய அந்தப் புதுமையைத் தொடர்ந்து, இயேசு, தானாகவே முன்வந்து ஆற்றிய மற்றொரு புதுமை கூறப்பட்டுள்ளது. அதுதான், நயீன் ஊரைச் சேர்ந்த கைம்பெண்ணின் மகனுக்கு இயேசு உயிர் வழங்கியப் புதுமை. இப்புதுமையின் அறிமுக வரிகள் இதோ: அதன்பின் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். (லூக்கா 7:11)
‘நயீன்’ என்ற இந்த ஊர், விவிலியத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே, அதாவது, லூக்கா நற்செய்தி, 7ம் பிரிவில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. 'நயீன்' என்ற எபிரேயச் சொல்லுக்கு, 'பசுமையான' அல்லது, 'அழகான' என்பது பொருள். அவ்வூரில், தன் கணவனுடனும், ஒரே மகனுடனும் வாழ்ந்தபோது, பசுமையாக, அழகாக இருந்த ஒரு பெண்ணின் வாழ்வு, கணவனையும், மகனையும் இழந்தபின், பசுமையும், அழகும் இழந்த சுடுகாடாக மாறிவிட்டது. அவ்வேளையில், அங்கு வந்த இயேசு, அந்த கைம்பெண்ணின் வாழ்வில், பசுமையையும், அழகையும் மீண்டும் புகுத்த புதுமையொன்றை நிகழ்த்துகிறார்.
இயேசு அவ்வூருக்குச் சென்ற வேளையில், 'அவருடைய சீடரும், பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர்' என்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிட்டுள்ளார். கப்பர்நாகும் ஊரில், நூற்றுவர் தலைவரின் பணியாளை இயேசு குணமாக்கியதால், அவரைச் சுற்றி மக்கள் கூட்டம், வழக்கத்திற்கு மேலாக வந்திருக்கவேண்டும். இயேசு ஊருக்குள் நுழைந்த வேளையில் அங்கு நடந்ததை, நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு கூறியுள்ளார்:
லூக்கா 7: 12-14
இயேசு அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, “அழாதீர்” என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார்.
இங்கு விவரிக்கப்பட்டுள்ள காட்சியில் முதலில் மனதில் பதியும் ஒரு சிறப்பு அம்சம் - இயேசு தானாக முன்வந்து இந்தப் புதுமையை ஆற்றுகிறார் என்ற அம்சம். லூக்கா நற்செய்தியில், இயேசு குணமளிக்கும், அல்லது, உயிரளிக்கும் புதுமைகள் 17 பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 11 புதுமைகளில், நோயுற்றோர், அல்லது, அவர் சார்பாக வேறொருவர் விண்ணப்பிக்கும்போது, இயேசு குணமளிக்கிறார். மீதமுள்ள ஆறு புதுமைகள், விண்ணப்பங்கள் ஏதும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டப் புதுமைகள். நயீன் கைம்பெண்ணுக்கு இயேசு ஆற்றிய புதுமை, இவற்றில் ஒன்று. இஸ்ரயேல் சமுதாயத்தில் ஒரு கைம்பெண்ணின் நிலை என்ன என்பதை, நன்கு உணர்ந்திருந்த இயேசு, இப்புதுமையை, எவ்வித அழைப்போ, விண்ணப்பமோ இன்றி ஆற்றுகிறார்.
யூத சமுதாயத்தில், பொதுவாகவே, பெண்கள் இரண்டாம் நிலை குடிமக்கள். அதிலும் கைம்பெண்களின் நிலை இன்னும் பரிதாபமானது. நிலம், வீடு, சொத்து என்று எவ்வகையிலும் உரிமை கொண்டாட முடியாதவாறு, கணவரைச் சார்ந்தே, ஒரு பெண்ணின் வாழ்வு அமைந்திருந்தது. கணவனின் மறைவுக்குப் பின், சமுதாயத்தின் கருணையால் வாழவேண்டிய நிலைக்கு கைம்பெண்கள் தள்ளப்பட்டனர்.
நயீன் ஊரைச் சேர்ந்த இந்தக் கைம்பெண்ணை அறிமுகம் செய்யும் நற்செய்தியாளர் லூக்கா, இறந்தவர், 'தாய்க்கு ஒரே மகன்' (லூக்கா 7:12) என்பதை குறிப்பிட்டுக் காட்டுகிறார். கணவனை இழந்து ஏற்கனவே துன்பங்களை சந்திக்கும் அப்பெண், தன் ஒரே மகனையும் தற்போது இழந்துள்ளார் என்பதை, லூக்கா வலியுறுத்திக் கூறுவதுபோல் தெரிகிறது.
நயீன் கைம்பெண்ணுக்கு இருந்த ஒரே நம்பிக்கை, அவரது மகன் மட்டுமே. அவரை, அந்தத் தாய் எவ்வளவு அன்போடு, நம்பிக்கையோடு வளர்த்திருக்க வேண்டும்? தனி ஒரு பெண்ணாய், பிள்ளைகளை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பது, நாம் வாழும் இக்காலத்தில் கண்ணால் காணும் ஓர் எதார்த்தம். அத்தனைச் சவால்களையும், பிரச்சனைகளையும் சமாளித்து, அந்தக் கைம்பெண் வளர்த்த ஒரே மகன், இதோ, பிணமாக எடுத்துச் செல்லப்படுகிறார். அவ்வேளையில் அவரை இயேசு சந்திக்கிறார். தொடர்ந்து அங்கு நடந்தை, அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

No comments:

Post a Comment