Wednesday 29 July 2020

கடவுளை எப்போது தேடவேண்டும்?

படகுப் பயணம்

கடைசி நேரத்தில் கடவுளைத் தேடுவதால் வரும் நன்மையைவிட, தொடக்கத்திலேயே கடவுளைத் தேடினால் கிடைக்கும் நன்மை மிகப்பெரியது
மேரி தெரேசா: வத்திக்கான்
ஓர் ஊரில் படகோட்டி ஒருவர் இருந்தார். அவர் ஊருக்கு மிக அருகில் இருந்த ஆற்றில் படகோட்டி, அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அவர் சிறந்த பக்திமானும்கூட. ஒருநாள் அவருடைய படகில், படகு சவாரி செய்ய துடுக்கான சில இளைஞர்கள் வந்திருந்தார்கள். படகோட்டி படகு சவாரியைத் தொடங்குவதற்கு முன்பாக, சிறிதுநேரம் கடவுளை நோக்கி மன்றாடிவிட்டு படகைச் செலுத்தத் தொடங்கினார். இதைப் பார்த்த அந்த இளைஞர்கள், “காலச் சூழ்நிலை எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது. பிறகு எதற்கு செபிக்க வேண்டும்” என்று நினைத்து தங்களுக்குள் ஏளனமாகப் பேசி சிரித்துக் கொண்டார்கள். படகு ஆற்றில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஆற்றில் நீர்வரத்து அதிகமாக ஏற்பட, படகு நிலைகுலையும் அபாயம் ஏற்பட்டது. உடனே இளைஞர்கள் யாவரும் அலறியடித்துக்கொண்டு கடவுளிடம் செபிக்கத் தொடங்கினார்கள். ஆனால் படகோட்டி மட்டும் செபிக்காமல், படகை ஓட்டுவதிலே மும்முரமாக இருந்தார். இதைக் கண்ட இளைஞர்கள் அவரிடம், “நாங்களெல்லாம் செபிக்க, நீர் மட்டும் செபிக்காமல், இப்படி படகோட்டுவதிலே குறியாய் இருக்கிறீரே?” என்று அவரைக் கடிந்துகொண்டார்கள். அதற்கு அவர், “நான்தான் தொடக்கத்திலேயே இறைவனிடம் மன்றாடிவிட்டேனே, ஆபத்து வருகிறபோது படகை எப்படி சரியாக ஓட்டுவது என்று சிந்திக்கவேண்டுமே ஒழிய, இந்நேரத்தில் செபித்துக் கொண்டிருப்பது நல்லதல்ல” என்றார்.
ஆம். நாமும் பல நேரங்களில் இந்த நிகழ்வில் வரும் இளைஞர்கள் போன்றுதான் ஆபத்து வரும்போது மட்டும் இறைவனைத் தேடுகின்றோம் அல்லது இறைவனை அழைக்கின்றோம். அதனால் கிடைக்கும் பயன் சிறியது. கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் எதற்கு என்பதுபோல, கடைசி நேரத்தில் கடவுளைத் தேடுவதால் வரும் நன்மையைவிட, தொடக்கத்திலேயே கடவுளைத் தேடினால் கிடைக்கும் நன்மை மிகப்பெரியது. ஆதலால் எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லா நேரங்களிலும் கடவுளை முதன்முதலாகத் தேடுவோம்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...