Wednesday 22 July 2020

கிறிஸ்தவர்களின் தனித்துவம் மதிக்கப்படும் சட்டங்கள் அவசியம்

கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ

கிறிஸ்தவ திருமணம் என்பது, வயதுவந்த ஓர் ஆணும், ஒரு பெண்ணும், ஒருவரையொருவர் அன்புகூர்வதன் அடிப்படையில் உருவாகும் புனித ஒப்பந்தமாகும். இதனால் கிறிஸ்தவர்கள் மத்தியில் பலதார திருமணத்திற்கு அனுமதி இல்லை. வரதட்சணை, கிறிஸ்தவர்களின் திருமணத்திற்கு இன்றியமையாதது அல்ல - கர்தினால் சாக்கோ
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
ஈராக் நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள், வெகு தொலைவிலிருந்து வந்த வெளிநாட்டு விருந்தினர்கள் அல்ல என்றும், இவர்களின் தனித்துவம் மதிக்கப்படும் முறையில் சட்டங்கள் இயற்றப்படவேண்டும் என்றும், பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.
மெசபத்தோமியா பகுதியிலுள்ள திருமுழுக்கு பெற்ற பழங்குடியின சமுதாயங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அப்பகுதியில் வாழ்ந்து வருபவை மற்றும், அசீரிய மற்றும், கல்தேய வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களின் வழிவருபவை என்றும், இவை, பழங்கால மெசபத்தோமிய கலாச்சாரங்களைக் கொண்டிருப்பவை என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் கூறினார்.
இத்தகைய காரணங்களால், சொத்துரிமை, திருமணம், குடும்பச் சட்டம், மனச்சான்றின் சுதந்திரம், மதச் சுதந்திரம் போன்றவை உள்ளிட்ட, ஈராக் கிறிஸ்தவர்களின் தனிப்பட்ட தகுதி தொடர்பான விவகாரங்கள், சட்டத்தால் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும் என்று, கர்தினால் சாக்கோ அவர்கள், ஈராக் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈராக் அரசுக்கு சமர்ப்பிப்பதற்காக கர்தினால் சாக்கோ அவர்கள் தயாரித்துள்ள திட்டத்தில், அந்நாட்டில் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் மற்றும், சிறுபான்மை மதத்தவர் அனைவருக்கும் இத்தகைய அங்கீகாரம் வழங்கப்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ திருமணம் என்பது, வயதுவந்த ஓர் ஆணும், ஒரு பெண்ணும், ஒருவரையொருவர் அன்புகூர்வதன் அடிப்படையில் உருவாகும் புனித ஒப்பந்தமாகும் என்றும், இதனால் கிறிஸ்தவர்கள் மத்தியில் பலதார திருமணத்திற்கு அனுமதி இல்லை என்றும், வரதட்சணை, கிறிஸ்தவர்களின் திருமணத்திற்கு இன்றியமையாதது அல்ல என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.
ஈராக்கில், சொத்துரிமை விவகாரத்தில் இஸ்லாமிய சட்டத்தால் உறுதியளிக்கப்பட்டுள்ள கூறுகள், கிறிஸ்தவர்களுக்கு ஒத்துவராது என்று உரைத்துள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், இத்தகைய முரண்பாடுகளால், கிறிஸ்தவர்களின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் தகுதிநிலை சட்டங்கள் தேவைப்படுகின்றன என்றும் கூறியுள்ளார். (Fides)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...