ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, நாடுகளுக்குள்ளேயே புலம்பெயர்ந்தோருக்கு ஆற்றப்படவேண்டிய மேய்ப்புப்பணிகள் குறித்து வெளியிட்டுள்ள ஏடு பற்றியும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் குறிப்பிட்டார்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
துன்பம்நிறைந்த சூழல்களிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக, நாடுகளுக்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுமாறு, திருப்பீடம், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கூட்டம் ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அமைப்புகள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், ஜெனீவாவில் நடைபெறும், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 44வது அமர்வில், ஜூலை 09, இவ்வியாழனன்று ஆற்றிய உரையில் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
இம்மாதம் 17ம் தேதி வரை நடைபெறும் இவ்வமர்வில் உரையாற்றிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் போன்று, நாடுகளுக்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மாற்றுத்திறனாளிகளும் வெறும் எண்கள் அல்லது, புள்ளிவிவரங்கள் அல்ல என்பதையும் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து கூறிவருவதுபோல், நாடுகளுக்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மக்கள், உலகளாவிய புறக்கணிப்பின் பலிகடாக்களாக மாறிவருவது அதிகரித்து வருகின்றது என்று கூறிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோரின் 106வது உலக நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட செய்தியையும், தன் உரையில் நினைவுகூர்ந்தார்.
கோவிட்-19 உருவாக்கியுள்ள நெருக்கடிநிலை, புலம்பெயர்ந்துள்ள மக்களின், குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்றும், இவர்களின் பல்வேறு மனிதாபிமானத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டியது இன்றியமையாதது என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், ஐ.நா. கூட்டத்தில் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment