Sunday, 12 July 2020

கோவிட்-19 ஏழை நோயாளிகளுக்கு பணியாற்றும் அருள்பணியாளர்களுக்கு...

அர்ஜென்டீனாவில், கொரோனா கொள்ளைநோய்

கொள்ளைநோயால் தாக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில், குறிப்பாக ஏழைகள் மத்தியில் பணியாற்றும் அருள்பணியாளர்களின் சான்று வாழ்வுக்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் – திருத்தந்தை பிரான்சிஸ்


மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி
அர்ஜென்டீனாவில், கொரோனா கொள்ளைநோய் பரவலுக்கு மத்தியில், வறியோர் வாழும் பகுதிகளில் பணியாற்றும் அருள்பணியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், அவர்களுக்கு காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், இறைவேண்டல் வழியாக உதவுவதோடு, மருத்துவப் பணியாளர்களுக்கு உதவிவருகின்ற அருள்பணியாளர்களாகிய உங்கள் அனைவரோடும், இந்நேரத்தில் நெருக்கமாக இருக்க விரும்புகிறேன் என்று, தன் காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் இந்த காணொளிச் செய்தியை, அர்ஜன்டீனா நாட்டு தலைநகர் புவனஸ் அய்ரஸ் நகரின் அருள்பணியாளர்கள், தங்களின் டுவிட்டர் பக்கத்தில், ஜூலை 09, இவ்வியாழனன்று பதிவுசெய்துள்ளனர்.
புவனஸ் அய்ரஸ் நகரில், ஏழைகள் வாழும் பகுதியில் பணியாற்றிய அருள்பணியாளர்களுள் மூவர் நோயுற்றிருப்பதைக் கேள்விப்பட்டேன், குறிப்பாக, அருள்பணி Basilicio “Bachi” Britez அவர்கள், இந்த தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டு, கடந்த ஜூன் 21ம் தேதியிலிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்பதை அறிந்தேன் என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.
இந்த நெருக்கடியான நேரத்தில், இறைமக்கள் அனைவரோடும், நோயுற்றுள்ள அருள்பணியாளர்களோடும், மிக நெருக்கமாக இருக்கிறேன் மற்றும், உங்களுக்காகச் செபிக்கின்றேன் என்று கூறியுள்ள திருத்தந்தை, இந்நேரத்தில் அருள்பணியாளர்களின் சான்று வாழ்வுக்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, எனக்காகச் செபிக்க மறக்கவேண்டாம் எனவும், அந்த காணொளிச் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், அர்ஜென்டீனாவில் நோயுற்றிருந்த Ramona Collante என்ற பெண்ணின் குடும்பம் அவசர மருத்துவ வாகனத்திற்குத் தொடர்ந்து அழைப்பு விடுத்தும், இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததால், அப்பெண், கடந்த 30ம் தேதி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, சமுதாயத்தில் ஏழைகள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து, அந்நாட்டு அருள்பணியாளர்கள், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
அர்ஜென்டீனாவில் கோவிட்-19ஆல் 90,693 பேர் தாக்கப்பட்டுள்ளனர், இவர்களில் ஏழைகளே அதிகம் என்று செய்திகள் கூறுகின்றன. 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...