Wednesday, 29 July 2020

வயதுமுதிர்ந்தோருக்கு அன்பான அரவணைப்பை அனுப்புங்கள்

"ஒவ்வொரு வயதுமுதிர்ந்தோரும் உங்கள் தாத்தா பாட்டிகள்" - புதிய முயற்சி

வயதுமுதிர்ந்தோரைப் பாதுகாப்பதற்கு, பல பகுதிகளில், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இன்றையச் சூழலில், இளையோர் அவர்களுக்கு, தங்களின் அன்பு அரவணைப்பை, சமுதாய ஊடகங்கள் வழியாக வெளிப்படுத்துமாறு திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
கோவிட்-19 விதிமுறைகளால் தனிமையை அனுபவிக்கும் வயதுமுதிர்ந்தோருக்கு உங்கள் அன்பான ஆரத்தழுவலை அனுப்புங்கள் என்று இளையோருக்கு அழைப்பு விடுக்கும், புதிய நடவடிக்கை ஒன்றை, பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை, ஜூலை 27, இத்திங்களன்று தொடங்கியுள்ளது.
ஜூலை 26, இஞ்ஞாயிறன்று, இயேசுவின் தாத்தா பாட்டியான, புனிதர்கள் சுவக்கீன் அன்னா திருவிழா சிறப்பிக்கப்பட்டதை, தான் வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் இளையோருக்கு நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு வயதுமுதிர்ந்தோரும் உங்கள் தாத்தா பாட்டிகள் என்று கூறியதால் தூண்டப்பட்டு, இந்த புதிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக, அத்திருப்பீட அவை, இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
வயதுமுதிர்ந்தோரிடம் கனிவு
தனிமையை உணரும் வயதுமுதிர்ந்தோருக்கு கனிவன்பையும் பாசத்தையும் காட்டுவதற்கு, ஏதாவது செய்யுங்கள் என்று இளையோருக்கு அழைப்பு விடுத்துள்ள அத்திருப்பீட அவை, இக்கொள்ளைநோயால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்போர் வயதுமுதிர்ந்தோர் என்றும், தலைமுறைகளுக்கு இடையே ஏற்கனவே நலிவடைந்துள்ள இடைவெளியை தற்போதைய சமுதாய விலகல் அதிகமாக்கியுள்ளது என்றும் கூறியுள்ளது.
கோவிட்-19 விலகியிருத்தல் விதிமுறைகளைக் கடைப்பிடித்தல் என்பது, தனிமை மற்றும், கைவிடப்பட்டநிலையை ஏற்பது ஆகாது என்றும், தொலைப்பேசி, வலைத்தளம் போன்ற ஊடகங்கள் வழியாக, அவர்களைத் தொடர்புகொள்ளலாம், முதியோர் இல்லங்களுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்றும், திருப்பீட அறிக்கை, இளையோருக்குப் பரிந்துரைத்துள்ளது.
தனிமையை அகற்ற
பலரது தனிமைத் துன்பங்களை அகற்ற, இளையோர் ஏற்கனவே உதவி வருகின்றனர் என்றும், வயதுமுதிர்ந்தோரைப் பாதுகாப்பதற்கு, பல பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இன்றையச் சூழலில், இளையோர் அவர்களுக்கு, தங்களின் அன்பு அரவணைப்பை, காணொளி அழைப்பு, புகைப்படங்களை அனுப்புதல் மற்றும் தொலைப்பேசி வழியாக வெளிப்படுத்தலாம் என்றும் திருப்பீட அறிக்கை கூறியுள்ளது.
நலவாழ்வு அமைப்புகள், வாய்ப்புகள் வழங்கக்கூடிய இடங்களில், இளையோர் வயதுமுதிர்ந்தோரை நேரிடையாகச் சென்று சந்தித்து அவர்களின் தனிமை உணர்வை அகற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ள, பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை, சமுதாய ஊடகங்கள் வழியாக, உங்கள் அன்பு அரவணைப்பை அனுப்புங்கள் என்று பொருள்படும் #sendyourhug ஹாஷ்டாக்குடன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...