Monday, 27 July 2020

இரு பழமை வாய்ந்த ஆலயங்கள், தேசியக் கருவூலங்களாக...

பாகிஸ்தானின் இரு பழமை வாய்ந்த ஆலயங்கள், தேசிய கலாச்சாரக் கருவூலங்களாக அங்கீகரிக்கப்பட  அழைப்பு

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள திரு இருதயப் பேராலயம், மற்றும், ஆங்கிலிக்கன் சபையின் இயேசு உயிர்ப்பு ஆலயம் ஆகிய இரண்டும், அந்நாட்டின் மிகப் பழம்பெரும் சின்னங்கள் என்று கருதப்பட விண்ணப்பம்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியைச் சேர்ந்த மனித உரிமை, மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்தின் அமைச்சர், Ijaz Alam Augustine அவர்கள், அந்நாட்டிலுள்ள இரு பழமை வாய்ந்த ஆலயங்கள், தேசிய கலாச்சாரக் கருவூலங்களாக கருதப்பட்டு, சீரமைக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பம் விடுத்துள்ளார்.
லாகூரில் உள்ள திரு இருதயப் பேராலயம், மற்றும், ஆங்கிலிக்கன் சபையின் இயேசு உயிர்ப்பு ஆலயம் ஆகிய இரண்டும், அந்நாட்டின் மிகப் பழம்பெரும் சின்னங்கள் என்றும், அவை தற்போது மிகவும் சீர்குலைந்த நிலையில் இருப்பதால், பாகிஸ்தான் அரசு, இவ்விரு ஆலயங்களையும் பராமரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும், அமைச்சர் அகஸ்டின் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
இவ்விரு ஆலயங்களையும் நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் அகஸ்டின் அவர்கள், இவ்விரு ஆலயங்களின் தரவுகள் அனைத்தையும் திரட்டி, அரசிடம் ஒப்படைத்துள்ளதாக, ஆசிய செய்தி கூறுகிறது.
லாகூரில் அமைந்துள்ள திரு இருதயப் பேராலயம், 1907ம் ஆண்டு, அப்போதைய ஆயராகப் பணியாற்றிய Fabien Antoine Eestermans அவர்களால் கட்டப்பட்டது என்றும், இதற்குத் தேவையான நிதி உதவியை, பெல்ஜியம் நாட்டவர் வழங்கினர் என்றும் ஆசிய செய்தி கூறுகிறது.
இதே நகரில் அமைந்துள்ள ஆங்கிலிக்கன் சபையின் இயேசு உயிர்ப்பு ஆலயம், 1887ம் ஆண்டு,  John Oldrid Scott என்ற கட்டடக்கலை வல்லுனரால், இளம் சிவப்பு கற்களால் உருவாக்கப்பட்டது என்று ஆசிய செய்தி கூறுகிறது.
இவ்விரு ஆலயங்களையும் புதுப்பிக்கும் பணிக்கு, பாகிஸ்தான் பணத்தில், 5 கோடி ரூபாய் தேவைப்படும் என்றும், அதனை அரசு வழங்குமாறு, தான் விண்ணப்பித்திருப்பதாக, அமைச்சர் அகஸ்டின் அவர்கள் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த முயற்சி குறித்து, லாகூர் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ள அதே வேளையில், இந்த முயற்சிக்கு மக்களின் ஒத்துழைப்பையும் நாடி விண்ணப்பித்துள்ளனர். (AsiaNews)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...