Sunday, 12 July 2020

அமைதிக்காக உழைக்க தென் கொரிய அரசியல்வாதிகளுக்கு அழைப்பு

கர்தினால் Andrew Yeom Soo-jung.

இச்சோதனை காலத்தில், தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாய் இருந்து, ஒருவரையொருவர் மன்னித்து, நல்லிணக்கத்துடன் செயல்பட்டு, மக்களின் இதயங்களில் இடம்பிடிக்குமாறு அழைப்பு - கர்தினால் Yeom Soo-jung
மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி
தென் கொரியாவில் ஏழைகள் மற்றும், நலிந்தோர் மீது அக்கறை காட்டவும், அமைதி மற்றும், வாழ்வைப் பாதுகாப்பதற்கு வழிவகுக்கும் ஓர் அரசியலுக்குத் தங்களை அர்ப்பணிக்கவும் முன்வருமாறு, அந்நாட்டு காங்கிரஸ் அவை உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார், கர்தினால் Andrew Yeom Soo-jung.
தென் கொரியாவின் 21வது நாடாளுமன்ற அவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் கத்தோலிக்க அரசியல்வாதிகளுக்கு, ஜூலை 09, இவ்வியாழனன்று திருப்பலி நிறைவேற்றிய Seoul பேராயர், கர்தினால் Yeom Soo-jung அவர்கள், கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள துன்பநிலைகள் பற்றி எடுத்துரைத்தார்.
நாடாளுமன்றத்தின் 43 கத்தோலிக்க உறுப்பினர்கள் மற்றும், அந்நாட்டின் தேசிய சட்டத்துறையின் சில உறுப்பினர்களும் பங்குபெற்ற இத்திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் Yeom Soo-jung அவர்கள், நாம் எல்லாரும் வலுவற்றவர்கள் மற்றும், திக்கற்றவர்கள் என்பதை, கோவிட்-19 கொள்ளைநோய், மீண்டும் உணர வைத்துள்ளது என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு ஆற்றிய ஊர்பி எத் ஓர்பி செய்தியில், அரசியல் தலைவர்களுக்கு விடுத்திருந்த அழைப்பு பற்றியும், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார், கர்தினால் Yeom Soo-jung.
இந்தக் கொள்ளைநோய் காலத்தில், அரசியல் தலைவர்கள், பொதுநலனுக்காகத் தீவீரமாய் உழைக்குமாறும், மக்கள் மாண்புள்ள வாழ்வை மேற்கொள்ளத் தேவையான வளங்களையும், வழிகளையும் அமைத்துக் கொடுக்குமாறும், சூழ்நிலைகள் அனுமதித்தால், மக்கள் தங்கள் அன்றாடச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க உதவுமாறும் கேட்டுக்கொள்கிறேன். கொள்ளை நோயால் உலகம் முழுவதும் துன்புறும் இவ்வேளையில், இது, புறக்கணிப்பின் நேரமல்ல, மாறாக, ஒன்றிணைய வேண்டிய காலம் ஆகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஊர்பி எத் ஓர்பி செய்தியில் கூறியிருந்தார்.
இத்திருப்பலியின் இறுதியில், நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் Park Byeong-seug அவர்களைச் சந்தித்துப் பேசிய கர்தினால் Yeom Soo-jung அவர்கள், இந்த சோதனை காலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாய் இருந்து, ஒருவரையொருவர் மன்னித்து, நல்லிணக்கத்துடன் செயல்பட்டு, மக்களின் இதயங்களில் இடம்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment