Monday 27 July 2020

தனனலமற்ற அன்புக்கு கிடைத்த பரிசு

வால்டோர்ப் ஆடம்பரப் பயணியர் மாளிகை

ஒருவர், பிறர் மீது காட்டும் தன்னலமில்லா அன்பும், தியாக உள்ளமும், உதவியும், அவரைப் புகழின் உச்சியில் அமர்த்தும்
மேரி தெரேசா: வத்திக்கான்
பல ஆண்டுகளுக்குமுன், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிலடெல்பியா நகரில், ஓர் இர்வில் கனமழையோடு புயலும் வீசிக்கொண்டிருந்தது. அந்த இரவில் வயதுமுதிர்ந்த ஒரு தம்பதியினர், ஒரு சிறிய பயணியர் விடுதியை அடைந்தனர். அங்கு வரவேற்பு அறையில் இருந்த பணியாளரிடம், அந்த இரவில் தங்குவதற்கு அவர்கள் இடம் கேட்டனர். புன்னகையோடு அவர்களை வரவேற்ற அந்த பணியாளர், அந்த வாரம் அந்த நகரில் மிகப்பெரிய மாநாடு ஒன்று நடப்பதால் அனைத்து அறைகளும் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுவிட்டன என்று மிகுந்த பணிவன்புடன் கூறினார். சற்றே ஏமாற்றம் அடைந்த அந்த தம்பதியர், அங்கிருந்து செல்லத் துவங்கியபோது, அந்த பணியாளர், அவர்களிடம், ஐயா! மணி இரவு ஒன்றைக் கடந்துவிட்டது மேலும், வெளியில் மழையும் புயலுமாக உள்ளது. இந்த நேரத்தில் தங்களை வெளியே அனுப்ப எனக்கு மனமில்லை. தங்களுக்கு சரி என்றால், என்னுடைய அறையில் நீங்கள் தங்கிக்கொள்ளலாம், ஆனால் அது மிகப்பெரிய சொகுசு அறை இல்லை என்று அன்புடன் கூறினார். அந்த தம்பதியினர், சிறிது தயக்கம் காட்டவே, அந்தப் பணியாளரோ, என்னைப் பற்றி கவலைவேண்டாம். நான் சமாளித்துக் கொள்வேன் என்று சொல்ல, அந்த தம்பதியினர் அரை மனதுடன் அறைக்குச் சென்றனர். அன்று இரவு நன்றாகத் தூங்கியபின், மறுநாள் காலை, அந்த வரவேற்பு அறை பணியாளருக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். சற்றே உணர்ச்சிவசப்பட்ட அந்த பெரியவர், இந்த காலத்தில் அன்பும் உதவிசெய்யும் உள்ளமும் கொண்ட நபரைச் சந்திப்பது மிக அரிது என்றார். இந்த துறையில் நீ சிறந்து விளங்குவாய் என்றும், நீ இந்த சிறிய விடுதியில் இருக்க வேண்டியவன் அல்ல என்றும், அன்புடன் கூறினார்.  மேலும் நான் பெரிய பயணியர் மாளிகை ஒன்றைக் கட்டுவேன், அதற்கு நீ தான் மேலாளர் என்று சொல்லிவிட்டு விடைபெற்றார் அந்த பெரியவர். இரண்டு ஆண்டுகள் சென்று ஒரு நாள், அந்த பணியாளருக்கு ஒரு மடல் வந்தது. ஆவலுடன் அதைப் பிரித்து வாசித்த அவர், சற்றே குழப்பத்துடன் மகிழ்ச்சி அடைந்தார். அந்த மடலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அந்த நிகழ்வை குறிப்பிட்டு, தன்னை வந்து நியூயார்க்கில் சந்திக்குமாறு கூறி, விமான பயணச்சீட்டையும் அனுப்பி வைத்து இருந்தார். நியூயார்க் சென்ற அந்த பணியாளர் அந்த பெரியவரை Fifth Avenue 34வது தெரு சென்று அடைந்து, அந்த பெரியவரை சந்தித்தார். அங்கு புதிதாக விண்ணைமுட்டும்படி சிகப்பு கற்களால் கட்டப்பட்ட அந்த பெரிய மாளிகையைக் காட்டினார். அந்த பெரிய ஆடம்பர பயணியர் மாளிகைக்கு நீதான் மேலாளர் என்றும் கூறினார் அந்தப் பெரியவர். அந்த வயதுமுதிர்ந்த பெரியவர்தான், வில்லியம் வால்டோர்ப் ஆஸ்டர் (William Waldorf Astor).  அந்த விடுதியின் முதல் மேலாளரான ஜார்ஜ் சி. போல்டட் (George Charles Boldt) அவர்கள்தான் அந்த பணியாளர். அமெரிக்க ஆடம்பரப் பயணியர் மாளிகைகளின் அன்னை என அழைக்கப்படும் இந்த ஆஸ்டர் மாளிகை, உலகின் மிகப் புகழ்பெற்ற பயணியர் மாளிகைகளில் ஒன்றாகும். இது 1893ம் ஆண்டில் 13 அடுக்கு மாளிகையாக அமைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...