Wednesday, 29 July 2020

கடவுளுக்கும் கரி பூசும் சுயநலம்

கொளுத்தி வைக்கப்பட்ட ஊதுபத்திகளின் புகை

பக்தர் ஏற்றிவைத்த ஊதுபத்திகளின் புகை, நேராக, அவரது தெய்வத்தை மட்டுமே சேர்ந்தது. இவ்வாறு அவர் தொடர்ந்து செய்து வந்ததால், நாளடைவில், அந்தப் புகையால், அவருக்குப் பிடித்தமான தெய்வத்தின் முகம் கறுத்துப்போனது.
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
பக்தர் ஒருவர், ஒவ்வொருநாளும் கோவிலுக்குச் செல்வார். கோவிலில் வைக்கப்பட்டிருந்த பல தெய்வங்களில், அவர் மனதுக்குப் பிடித்த ஒரு தெய்வத்தை மட்டும் தினமும் தொழுதுவிட்டுத் திரும்புவார். தான் வாங்கிச்செல்லும் ஊதுபத்திகளை, அந்தத் தெய்வத்திற்கு முன் கொளுத்தி வைத்து வணங்குவார்.
ஒவ்வொருநாளும், அவ்வாறு வணங்கும்போது, அவருக்குள் ஒரு சிறு நெருடல் உருவாகும். தனக்குப் பிடித்த தெய்வத்திற்கென்று தான் கொளுத்தி வைக்கும் ஊதுபத்திகளின் நறுமணப்புகை, மற்ற தெய்வங்களுக்கும் செல்கிறதே என்று, பக்தருக்குள் இலேசான எரிச்சல் உண்டாகும்.
தன் நெருடலையும், எரிச்சலையும் சமாளிக்க, அவர் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அடுத்த நாள், அவர், ஊதுபத்திகளைக் கொளுத்தி வைத்தபோது, அந்தப் புகை, தன் தெய்வத்தை மட்டும் சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்துடன், அந்த ஊதுபத்திகளை சுற்றி, ஒரு குழாயையும் பொருத்தி வைத்தார். அவர் எதிர்பார்த்தவாறே, நறுமணப்புகை, நேராக, அவரது தெய்வத்தை மட்டுமே சேர்ந்தது. பக்தருக்கு பெரும் திருப்தி. இவ்வாறு அவர் தொடர்ந்து செய்து வந்ததால், நாளடைவில், அந்தப் புகையால், அவருக்குப் பிடித்தமான தெய்வத்தின் முகம் கறுத்துப்போனது.
தெய்வ வழிபாட்டிலும், தான், தனது என்ற குறுகிய வட்டங்களை வரையும் சுயநலம் புகுந்தால், கடவுளின் முகத்தில் நாம் கரி பூசிவிடக்கூடும், எச்சரிக்கை! இறைவனின் பெயரால் நாம் எழுப்பிவரும் தடுப்புச் சுவர்களை தகர்த்தெறிந்தால் மட்டுமே, உண்மை இறைவனை நம்மால் வழிபடமுடியும்.

No comments:

Post a Comment