Thursday, 16 July 2020

வெள்ளைக்குதிரை

கடவுள் நமக்கு அனுப்பும் ஒவ்வொருவருமே பயிற்சியாளர்கள்தான். அவர் செய்யும் எதுவுமே நமக்குச் சிறப்பானதைக் கொடுப்பதற்காகத்தான்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
அப்பா, அம்மா, மகன் என்ற ஓர் அழகானதொரு குடும்பம் அது. அப்பா தூரத்திலுள்ள ஓர் ஊரில் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவர் ஊருக்கு வந்துபோவார். ஆனால் ஊருக்கு வருகின்ற வியாபாரிகளிடம் வீட்டுக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்தனுப்புவார் அவர். மகன் வளர்ந்து இளைஞன் ஆனான். அந்த ஊரில் பல இளைஞர்களிடம் போனி என்ற ஒரு வகையான மட்டக் குதிரை இருந்தது. இவனுக்கும் அந்தக் குதிரை வேண்டும் என்று ஆசைப்பட்டான். அப்பாவிற்குச் சொல்லியனுப்பினான். வெகுநாள்கள் ஆகியும், அப்பா அந்தக் குதிரையை வாங்கித் தரவில்லை. சோர்ந்துபோனான். ஒருநாள் அவன் ஊருக்கு, அவனின் அப்பா அனுப்பிய ஓர் ஆள் வந்தார். தம்பி, நீ கிளம்பு, என்னோடு நீ ஒரு மாதம் இருக்கணும் என்று சொல்லி அவனைக் கூட்டிக்கொண்டு போனார். அவர் குதிரையைக் கொடுப்பார் என நம்பி அவரோடு போனான் இளைஞன். ஒரு சதுக்கத்திற்கு அவனைக் கூட்டிக்கொண்டுபோய் ஒவ்வொரு நாளும் அவனை வேகமாக ஓடவைத்தார். வாள்சண்டைக் கற்றுக்கொடுத்தார். ஒரு மாதம் முடிந்தது. குதிரையைப் பற்றி அவர் எதுவுமே சொல்லாமல் அவனை வீட்டில்கொண்டுபோய் விட்டுவிட்டார். அந்த இளைஞனுக்கு கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது. இன்னும் சில மாதங்கள் சென்று, அவனின் அப்பா அனுப்பிய இன்னொருவர் குதிரை மீது வந்தார். அவரும் இவனைக் கூப்பிட்டார். அவரும் குதிரையைத் தருவார் என்று நம்பி, அவர் பின்னால் போனான் இளைஞன். ஒரு மாதமாக, அவர் எலும்புமுறிவு, தசைப் பிடிப்பு போன்றவற்றிக்கு மருத்துவம் பார்ப்பது பற்றியும், காயத்திற்கும், விஷக்கடிக்கும் பயன்படுத்தும் பச்சிலைகள் பற்றியும் சொல்லிக்கொடுத்தார். பின்னர் அவரும் குதிரையைப் பற்றி எதுவுமே சொல்லாமல் அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இவனுக்கு அப்பா மீது கோபம். குதிரை மீதிருந்த ஆசையே போய்விட்டது. சிலமாதங்கள் சென்று, அவனது அப்பா ஓர் அழகான வெள்ளைக்குதிரை மீது வந்தார். அது மட்டக் குதிரை அல்ல, ஆனால் அது உயர்ந்த அரேபியக் குதிரை. அதை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார் அப்பா. அவன் அப்பாவைக் கட்டிப்பிடித்து, ஏப்பா இந்தக் குதிரையை முதலிலேயே கொடுக்காமல் தேவையில்லாத காரியங்களால் என்னை வெறுப்பேற்றினீர்கள் என்று கேட்டான். அதற்கு அப்பா, மகனே நீ கேட்டது மட்டக் குதிரை, ஆனால் நான் என் மகனுக்குக் கொடுக்க விரும்பியது உயர்ரகக் குதிரை. ஆனால் அதை வைத்து நிர்வகிக்க உனக்குப் பயிற்சி தேவை. குதிரை ஓடிப்போனால் ஓடிப்பிடிக்கவும், உன்னையே நீ தற்காத்துக்கொள்ளவும் முதல் நபரைக்கொண்டு பயிற்றுவித்தேன். அடுத்த பயிற்சியில், ஆளில்லாத இடத்தில், உனக்கோ குதிரைக்கோ அடிபட்டுவிட்டால், நீயே சமாளித்துக்கொள்ளும் திறமையைப் பெற வைத்தேன். இப்போது நீ முற்றிலும் தகுதியுள்ளவன் என்று சொன்னார்.
ஆம், நம் அன்புத்தந்தையாகிய கடவுள் நமக்கு அனுப்பும் ஒவ்வொருவருமே பயிற்சியாளர்கள்தான். அவர் செய்யும் எதுவுமே நமக்குச் சிறப்பானதைக் கொடுப்பதற்காகத்தான். அதனால், வாழ்வில் என்ன நேர்ந்தாலும் மனஅமைதியை மட்டும் இழக்காதிருப்போம்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...