Thursday, 9 July 2020

திருப்பயணிகள் வருகை நிறுத்தப்பட்டுள்ளது குறித்து கவலை

திருப்பயணிகள் இன்றி காணப்படும் எருசலேம் தெரு

தொற்றுநோயின் தீவிரம் அதிகரித்து வந்தாலும், மக்கள் கலந்துகொள்ளும் வழிபாடுகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், புனித பூமிக்கென, உலகெங்கும் மக்கள் எழுப்பும் செபங்களின் தீவிரமும் அதிகரித்துவருகிறது - பேராயர் பிஸ்ஸபல்லா
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஒவ்வோர் ஆண்டும் உலகின் பல நாடுகளிலிருந்து புனித பூமிக்கு திருப்பயணிகள் வருகை தருவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து, புனித பூமியின் இலத்தீன் வழிபாட்டு முறை பேராயர் Pierbattista Pizzaballa அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.
உலகளாவிய தொற்றுநோய் பரவலால், இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டிருப்பதாலும், அண்மையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதல்களாலும், தொற்றுநோயின் தாக்கம் இவ்விரு நாடுகளிலும் கூடிவருவதாலும், இந்நிலை உருவாகியுள்ளது என்று, பேராயர் பிஸ்ஸபல்லா அவர்கள் கூறியுள்ளார்.
தொற்றுநோயின் தீவிரம் அதிகரித்து வந்தாலும், மக்கள் கலந்துகொள்ளும் வழிபாடுகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், புனித பூமிக்கென, உலகெங்கும் மக்கள் எழுப்பும் செபங்களின் தீவிரமும் அதிகரித்துவருகிறது என்று, பேராயர் பிஸ்ஸபல்லா அவர்கள் எடுத்துரைத்தார்.
இயேசு இறந்து, உயிர்த்த இந்த புனித பூமியில், இந்த தொற்றுநோயின் முழு அடைப்பு காலத்திலும், 11 திருத்தொண்டர்கள், அருள் பணியாளர்களாகவும், அருள்பணித்துவ பயிற்சி பெற்ற 18 பேர், திருத்தொண்டர்களாகவும் அருள் பொழிவு பெற்றதை, பேராயர் பிஸ்ஸபல்லா அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தொற்றுநோய், மற்றும், அரசியல் மோதல்கள் என்ற பிரச்சனைகள் நடுவிலும், இறைவன் நம்மை கைவிடவில்லை என்ற நம்பிக்கையை வளர்க்க, இந்த அருள்பொழிவு நிகழ்வுகள் உதவுகின்றன என்று, பேராயர் பிஸ்ஸபல்லா அவர்கள் குறிப்பிட்டார்.
அடுத்த ஓராண்டிற்கு திருப்பணிகளின் வருகை பெருமளவு குறையும் என்பதையும், இனி வரும் ஆண்டுகளில் நடைபெறும் திருப்பயணங்கள், பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டிருக்கும் என்பதையும் உணர்ந்து, புனித பூமியின் திருத்தலங்கள் திட்டங்களை உருவாக்கி வருவதாக, பேராயர் பிஸ்ஸபல்லா அவர்கள் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment