Wednesday, 12 August 2020

அணு ஆயுதங்களற்ற உலகு அமைக்கப்படுமாறு அழைப்பு

 திருத்தந்தையின் ஜப்பான் திருத்தூதுப் பயணம்


இக்காலத்தில், தேசிய மற்றும், பன்னாட்டு பாதுகாப்பு எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க, அணு ஆயுதங்கள் ஒருபோதும் உதவாது என்பதை அரசியல் தலைவர்கள் மறந்துவிடவேண்டாம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 9ம் தேதி, ஜப்பான் நாட்டின், நாகசாகி நகரில், அமெரிக்க ஐக்கிய நாடு மேற்கொண்ட அணுகுண்டு தாக்குதலின் 75ம் ஆண்டு நினைவு, ஆகஸ்ட் 09, இஞ்ஞாயிறன்று இடம்பெற்றவேளை, இந்த உலகை அணு ஆயுதங்களற்ற பூமியாக அமைப்பதற்கு, உலகினர் தங்களை அர்ப்பணிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

ஆகஸ்ட் 09, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, மூவேளை செப உரையாற்றியபின், 2019ம் ஆண்டில் ஹிரோஷிமா மற்றும், நாகசாகி நகரங்களில், தான் மேற்கொண்ட திருத்தூதுப்பயணத்தை நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2019ம் ஆண்டில், ஹிரோஷிமா நகரில், திருத்தந்தை உரையாற்றுகையில், போரில், அணு சக்தியைப் பயன்படுத்துவது, மற்றும், அணு ஆயுதங்களை வைத்திருப்பது, அறநெறிக்கு முரணானது என்று கூறினார்.

நாகசாகி நகரில் உரையாற்றுகையில், அணு ஆயுதங்களற்ற உலகை அமைப்பது இயலக்கூடியதே மற்றும், அத்தகைய உலகம் தேவையானது என்பதில் தான் உறுதியாய் இருப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை, இக்காலத்தில், தேசிய மற்றும், பன்னாட்டு பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து நம்மைக் காப்பதற்கு, அணு ஆயுதங்கள் ஒருபோதும் உதவாது என்பதை, அரசியல் தலைவர்கள் மறந்துவிடவேண்டாம் என்று வலியுறுத்திக் கூறினார்.

No comments:

Post a Comment