கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
பாகிஸ்தான் நாட்டின் தந்தை என அழைக்கப்படும் முகமது அலி ஜின்னா அவர்கள், சிறுபான்மை சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகள் மதிக்கப்படவேண்டும் என, பாகிஸ்தானின் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், மற்றும், மனித உரிமை நடவடிக்கையாயாளர்கள் அடங்கிய குழு, அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக வாழும் மக்களின் உரிமைகள் மதிக்கப்படும் என 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி, பாகிஸ்தான் தலைவர் ஜின்னா அவர்கள், புகழ்வாய்ந்த உரை ஒன்றை நிகழ்த்தியதைத் தொடர்ந்து, அதே ஆகஸ்ட் 11ம் தேதியைச் சிறுபான்மையினர் தேசிய தினமாகச் சிறப்பித்துவரும் இக்குழு, ஆகஸ்ட் 11, இச்செவ்வாய்க்கிழமையன்று இவ்விண்ணப்பத்தை விடுத்துள்ளது.
மத நம்பிக்கைகளின் அடிப்படையில் எவரையும் பாகுபாட்டுடன் நடத்தாத ஒரு வருங்காலம் குறித்து கனவுகண்ட தேசத்தந்தை ஜின்னா அவர்களின் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும் என தன் அறிக்கையில் கூறியுள்ள பாகிஸ்தான் மனித உரிமைகள் அவை, வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை ஜின்னா அவர்கள் நிகழ்த்திச் சரியாக 73 ஆண்டுகள் கடந்த பின்னரும், பாகிஸ்தானில், சிறுபான்மை மதத்தினர், வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது, பாகுபாட்டுடன் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுவது ஆகியவை தொடர்வதாகத் தெரிவித்துள்ளது.
எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், தனி மனிதர்களின் மத நம்பிக்கைகள் தனிப்பட்ட விதத்திலும், பொதுவிலும் கடைப்பிடிக்கப்பட உரிமை உள்ளது எனப் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் 2014ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு, முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என, அரசை, இத்தேசிய சிறுபான்மையினர் தினமாம் இச்செவ்வாய்க் கிழமையையொட்டி, மீண்டும் விண்ணப்பித்துள்ளது, பாகிஸ்தான் மனித உரிமைகள் அவை. (UCAN)
No comments:
Post a Comment