Saturday, 8 August 2020

மறுவாழ்வின் வாயிலாகும் மன்னிப்பு

 துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிராக பள்ளி மாணவர்களின் போராட்டம்

இளையவர் ஜோர்டினும், லூர்தெஸின் தாய் ஏடி அவர்களும் இணைந்து, பல பள்ளிகளுக்குச் சென்று, துப்பாக்கிக் கலாச்சாரத்தால் விளையும் துன்பங்களை பகிர்ந்துகொண்டது, பலரது மனங்களைத் தொட்டது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

வளர் இளம் பருவத்தினரான ஜோர்டின் (Jordyn Howe) என்ற இளைஞன், தன் தாயோடும், வளர்ப்புத்தந்தையோடும் வாழ்ந்துவந்தார். தன் வளர்ப்புத்தந்தையிடம் இருந்த துப்பாக்கியை, ஒரு நாள், பள்ளிக்கு எடுத்துச்சென்றார், ஜோர்டின். பள்ளியில், தன் நண்பர்கள் குழுவில், ஜோர்டின் அந்தத் துப்பாக்கியை, பெருமையாகக் காட்டிக் கொண்டிருந்தபோது, அதைத் தவறுதலாகச் சுட்டுவிடவே, அவ்வழியே சென்றுகொண்டிருந்த லூர்தெஸ் (Lourdes) என்ற இளம்பெண், குண்டடிப்பட்டு இறந்தார்.

லூர்தெஸின் தாய், ஏடி (Ady Guzman) அவர்கள், செய்தி கேட்டு, நொறுங்கிப் போனார். இளையவர் ஜோர்டின் மீது வழக்கு நடைபெற்றபோது, ஏடி அவர்களும், நீதி மன்றத்தில் அமர்ந்திருந்தார். வழக்கு முடிந்தது. வளர் இளம் பருவக் கைதிகள் மறு சீரமைப்பு மையத்தில், ஜோர்டின் 3 ஆண்டுகள் தங்கவேண்டுமென்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

உடனே, இறந்த இளம்பெண்ணின் தாய் ஏடி அவர்கள், ஜோர்டினுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக் காலத்தைக் குறைக்கும்படி, நீதிபதியிடம் மன்றாடினார். நீதி மன்றத்தில் இருந்தோர், அதிர்ச்சியடைந்தனர். அந்த அன்னையின் வேண்டுகோளுக்கிணங்க, இளைஞன் ஜோர்டினின் தண்டனைக்காலம், 3 ஆண்டுகளிலிருந்து, ஓராண்டாகக் குறைக்கப்பட்டது. நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்கள், ஏடி அவர்களிடம், இது குறித்து கேட்டபோது, அவர், தான் எடுத்த முடிவைக்கண்டு, தன் மகள் லூர்தெஸ், மிகவும் மகிழ்ந்திருப்பார் என்று மட்டும் கூறிவிட்டு, அங்கிருந்து சென்றார்.

ஓராண்டு தண்டனைக்காலம் முடிந்து திரும்பிவந்த இளையவர் ஜோர்டினும், லூர்தெஸின் தாய் ஏடி அவர்களும் இணைந்து, பல பள்ளிகளுக்குச் சென்று, மாணவர்களுக்கு உரையாற்றினர். துப்பாக்கிக் கலாச்சாரத்தால் விளையும் துன்பங்களை, தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து அவர்கள் பகிர்ந்துகொண்டது, பலரது மனங்களைத் தொட்டது.

மன்னிப்பு, மறுவாழ்வுக்கு, மாறுபட்ட வாழ்வுக்கு, அழைத்துச்செல்லும் வாயில்.

No comments:

Post a Comment

Pope: ‘Synod final document forms part of papal Magisterium’

  Pope: ‘Synod final document forms part of papal Magisterium’ Pope Francis publishes a note accompanying the Final Document of the Synod of...