மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
மியான்மாரில் கோவிட்-19 விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், அந்நாட்டில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட இரு முக்கிய நிகழ்வுகள், சில வரையறைகளுக்கு உட்பட்டு, நடைபெறும் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.
21ம் நூற்றாண்டின் Panglong அமைதி கருத்தரங்கின் நான்காவது அமர்வு, தலைநகர் Naypyidawவில், இம்மாத மத்தியிலும், அந்நாட்டின் சட்டமன்றத் தேர்தல்கள் வருகிற நவம்பரிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மாரின் மத்திய அரசுக்கு எதிராகப் போராடும் அனைத்து அமைப்புகள், குழுக்கள், 2015ம் ஆண்டில் கையெழுத்தான தேசிய அளவிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்காத குழுக்கள், மற்றும், அதில் கையெழுத்திடாத குழுக்கள் ஆகிய அனைத்துமே, இம்மாதம் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் அமைதி கருத்தரங்கில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முந்தைய அமைதி கருத்தரங்கு, 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி முதல், செப்டம்பர் 4ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தேசிய ஒப்புரவு மற்றும், அமைதிக்கு, ஏழு அம்சத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆயினும், அவற்றில் சில இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமலேயே உள்ளன என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.
இதற்கிடையே, மியான்மாரில் நடைபெறவுள்ள அமைதி கருத்தரங்கு, சட்டமன்றத் தேர்தல்கள் ஆகிய இரு முக்கிய நிகழ்வுகளும், நாட்டில் அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும், சனநாயகம் ஆகியவற்றை நோக்கி அனைவரும் உழைப்பதற்கு வழியமைக்கவேண்டும் என்று, அந்நாட்டு கிறிஸ்தவ, புத்த, இஸ்லாம், சீக்கிய மதத்தலைவர்கள் உட்பட, அமைதிக்காக உழைக்கும் பல்சமய குழுக்களும் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment