கோவிட்-19ஆல் பல்வேறு வழிகளில் துன்பங்களை அனுபவிக்கும் அனைவருக்கும் மனமகிழ்வோடு அன்புச் செயல்களை ஆற்றுவோம். அவை தானாகவே தொடர் அன்புச்சங்கிலிகளாக உருவாகிக்கொண்டே இருக்கும்
மேரி தெரேசா: வத்திக்கான்
பட்டிமன்ற பேச்சாளரான வழக்கறிஞர் சுமதி அவர்கள், தன் வாழ்வில் நடந்த நிகழ்வு ஒன்றை, இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார். சென்னையில் மயிலாப்பூர் சந்தையில், கலை என்ற காய்கறிக்கடைக்காரப் பெண்மணி ஒருவர், ஒவ்வொரு நாளும் சரியாக காலை எட்டு மணிக்கு கடையைத் திறந்துவிடுவார். அவ்வளவு ஒழுக்கம், ஒழுங்கு அவரது வியாபாரத்தில் இருக்கும். அங்கு வரிசையாக மாங்காய் கடைகள் இருந்தாலும், சுமதி அவர்கள் எப்போதும் கலை அவர்கள் கடையில்தான் மாங்காய் வாங்குவார். அன்று காலையில் அவர் சந்தைக்குச் சென்றபோது கலை அவர்களின் கடை திறக்கவில்லை. சரி போகலாம் என்று திரும்பியபோது, பக்கத்து கடைக்காரர், அம்மா, இப்பத்தான் மாங்காய் வந்திருக்கு, வாங்க என்று வற்புறுத்தி அவரை அழைத்தார். அந்தக் கடையிலிருந்த மாங்காய்களும், அப்போதுதான் மரத்திலிருந்து பறித்துவந்ததுபோல் இருந்தன. இல்ல அண்ணே அப்புறம் வர்றேன் என்று, அந்த வழக்கறிஞர் மறுத்துப் பார்த்தார். அந்த கடைக்காரர் விடுவதாய் இல்லை. அம்மா இது முதல் போணி என்று, கடைக்காரரும் மாங்காயை நியாயமான விலைக்குக் கொடுத்தார். வழக்கறிஞரும் மாங்காய் வாங்கிவிட்டு, அண்ணே, இது இங்கேயே இருக்கட்டும். நான் நீதிமன்றம் சென்று என் வேலையை முடித்துவிட்டு மதியம் திரும்புகையில் வந்து எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, தன் பணிக்குச் சென்றுவிட்டார்.
வழக்கறிஞர் சுமதி அவர்கள், மதியம் மாங்காயை வாங்குவதற்கு வந்தபோது கலை அவர்கள் கடையைத் திறந்து வைத்திருப்பதைப் பார்த்தார். கலை அவர்களைப் பார்ப்பதற்கு சங்கடப்பட்டு, திரும்பிப் பார்க்காமலே தன் காரில் ஏறினார் அவர். அப்போது கலை அவர்கள், அந்த வழக்கறிஞரை இரண்டு முறை தொலைபேசியில் அழைத்தார். அது கலை அவர்களின் எண்தான் என்று தெரிந்தும், வழக்கறிஞர் அந்த அழைப்பை ஏற்கவில்லை. மூன்றாவது முறையும் கலை அழைத்தார். இந்த முறையும் அதை மறுக்க இயலாமல், வழக்கறிஞர் தொலைபேசியை எடுத்து, ஹலோ யாரு பேசுறது என்று, தெரியாததுபோல் கேட்டார். ஏனெனில் கலை அவர்களின் எண்ணை வழக்கறிஞர் தனது கைபேசியில் பதிவுசெய்து வைத்திருந்தார். அதற்கு காய்கறி கடைக்கார கலை அவர்கள், சென்னை தமிழில், விடுக்கா... நான்தான் கூப்பிடுறேன்னு உனக்குத் தெரியும், ஏக்கா நடிக்கிறா, போனை இரண்டு தடவை ஏன் எடுக்காம இருக்கிறா, படிச்ச பொம்பளைன்னு காட்டிட்ட பாத்தியாக்கா...என்று சொன்னார். கலை, நான் காலையில் வந்தபோது நீ இல்லை என்று, வழக்கறிஞர் சொன்னதுதான் தாமதம்..., அக்கா நீ மாங்காய் வாங்கினதைப் பத்தியே நா பேசலை, இப்ப என்ன என் கடையில வாங்காம பக்கத்து கடையில வாங்கின அந்த அண்ணன்தான் பத்து ரூபா சாப்பிட்டு போகட்டுமே, உன் பத்து ரூபா இல்லன்னா நான் ஏழையாயிரமாட்டேன், ஆனா நீ என்னை, பாத்தும் பாக்காததுமாதிரி பக்கத்து கடையில போயி காய்கறி, மாங்காயை வாங்கிட்டுப் போனா பாத்தியா என்றார் கலை. அதற்கு வழக்கறிஞர், அப்படியில்லை கலை, காலையில உன் கடை மூடியிருந்தது, அதனாலதான்.. என்று இழுத்ததும், இருக்கட்டும் அக்கா... ஏழு வருஷமா ஏன்கிட்ட மாங்காய் காய்கறி வாங்கிறா, தினமும் காலை 8 மணிக்கு கலை கடையைத் திறந்திருவா, இன்னைக்கு எட்டேகால் மணி ஆச்சே, கலைக்கு என்ன ஆச்சு, அப்படின்னு ஒரு போன் போட்டு நீ கேட்டிருக்கலாமே அதைவிட நீ கொடுக்கிற பத்து ரூபா பெரிசு இல்லக்கா என்று கலை சொன்னார். அதற்குப்பின் வழக்கறிஞர் சுமதி அவர்கள், தனது வாகனத்தைத் திருப்பி, கலை அவர்கள் கடைக்குமுன் நிறுத்தி, மாங்காய் கேட்டார். கலை இன்று நான் வாங்கின மாங்காயைச் சாப்பிட்டால் என் உடலிலே ஒட்டாது, இந்தா பத்து ரூபா, மாங்காய் கொடு என்று கேட்டார். விடுக்கா.. ஏதோ நான் கோபத்தில பேசிட்டேன்னு சொல்லிக்கொண்டே மாங்காயைக் கொடுத்தார் கலை. பின்னர் அந்நேரத்தில் அந்த வழக்கறிஞரோடு இருந்த அவரது 18 வயது நிரம்பிய மகளைப் பார்த்து, அக்கா உம் பொண்ணு முதமுதல இங்கு வந்திருக்கு என்று சொல்லி, ஒரு நல்ல கிளிமூக்கு மாங்காயை, அவரது மகளிடம் கொடுத்தார் கலை. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வழக்கறிஞரின் மகள், தன் அம்மாவிடமிருந்து 20 ரூபாயை வலுக்கட்டாயமாகப் பெற்று, அதற்கு சாக்லேட் வாங்கினார். பின்னர், ஓடிச்சென்று கலை அவர்களோடு கடையில் இருந்த அவரது ஏழு வயது மகனிடம் கொடுத்துவிட்டு திரும்பினார் வழக்கறிஞரின் மகள். இந்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட வழக்கறிஞர் சுமதி அவர்கள், மனிதரின் மனது, சிலநேரங்களில் அற்பமான விடயங்களில் விழுந்துவிடுகிறது. ஆனால், கலை என்ற சாதாரண காய்கறி கடைக்காரப் பெண்ணின் செயல், எவ்வாறு அடுத்த தலைமுறைக்குச் செல்கின்றது என்ற மிகச்சிறந்த ஓர் உண்மையை உணரத்தியது என்று கூறினார். அன்பு அறுக்கப்படாத சங்கிலி என்பதையும், கலை அவர்களின் செயல், தனது நெஞ்சில் ஆழமாகப் பதியவைத்தது என்றும், சுமதி அவர்கள் கூறினார்.
இலவசமாக மளிகைப்பொருள்கள்
ஓர் இளம்பெண், என்னிடம் பழங்கள் காய்கறிகள், பயிறுகள், ரொட்டி போன்ற மளிகைப்பொருள்கள் இருக்கின்றன, எல்லாம் இலவசம் என்று, அந்த நகரத்தின் தெரு ஒன்றில் கூவிக்கொண்டே சென்றார். அப்போது ஒரு சிறுவன் அந்த பெண்ணிடம் வந்து, பொருள்களைக் கேட்டான். அந்த இளம்பெண், அவனிடம் மளிகைப் பொருள்கள் நிறைந்த ஒரு பையைக் கொடுத்தார். எனது அப்பாவிடம் போதிய பணம் இருக்கிறதா என்று தெரியவில்லை, இதற்கு விலை என்ன என்று, அந்தச் சிறுவன் கேட்க, கவலை வேண்டாம், இவை இலவசம் என்று புன்னகை பூத்தார் அந்தப் பெண். அந்தச் சிறுவனும், எனது அப்பா மிகவும் மகிழ்வார் என்று, மகிழ்வோடு அதனைப் பெற்றுச் சென்றான். பின்னர் மளிகைப்பொருள்கள் இலவசம் என்று மணியை அடித்துக்கொண்டே தெருவில் சென்றார் அவர். அந்நேரத்தில் அவரை வழிமறித்த இன்னொருவர், இந்த அறிவிப்பு மற்றவரைக் கவருவதற்காக என்று ஏளனமாகக் கேட்டார். அதற்கு அந்தப் பெண், தற்போது உலகில் ஏராளமான மக்கள் மிகவும் துன்புறுகின்றனர். ஒரு சிறிய அன்புச் செயல், மாபெரும் மாற்றத்தைக் கொணரும் என நான் நம்புகிறேன், இதைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று, ஒரு பையில் பொருள்களை எடுத்துக்கொடுத்தார். அதற்கு அந்த நபர், எனக்குப் பொருள்கள் வேண்டாம், ஆனால் நீங்கள் இப்படி பை நிறைய மளிகைப்பொருள்களைக் கொடுப்பது, அடுத்தவரில் மாற்றத்தைக் கொணரும் என்று நம்புகிறீர்களா என்று மீண்டும் கேட்டார். அதற்கு அந்தப் பெண், ஆம். அது என் வாழ்வில் மாற்றத்தைக் கொணர்ந்தது என்று, தனது அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார்.
சில மாதங்களுக்குமுன் நான் வேலைசெய்த நிறுவனத்தின் தலைவரிடமிருந்து எனக்கு ஒரு மடல் வந்தது. இப்போதைய நெருக்கடிநிலையில் போதிய வேலை இல்லை. அதனால் என்னை வேலையைவிட்டு நீக்குவதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். என்னசெய்வது? எப்படி வாழ்வது? என்று திகைத்தேன். எனது நிலைமை மிகவும் மோசமானது. நான் சேமித்து வைத்திருந்த பணம் எல்லாம் செலவழிந்துவிட்டது. மளிகைப் பொருள்கள் வாங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை. பசி வாட்டியது. அச்சமயத்தில் யாரோ ஒருவர் என்னிடம் வந்து, ஒரு பை நிறைய உணவுப்பொருள்களை கொடுத்தார். அவர் எனக்கு ஒரு வானதூதரைப் போல் அன்று தெரிந்தார். அந்த மனிதர் அன்று வரவில்லையெனில், அன்று எனக்கு உண்பதற்கு எதுவுமே இருந்திருக்காது. எனவே, ஒரு சிறிய அன்புச் செயல், இரக்கச்செயல், என் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது எனக்கு புதிய வேலை ஒன்று கிடைத்திருக்கிறது. நான் மற்றவருக்கு உதவிபுரிய விரும்புகிறேன் என்று அந்த இளம்பெண் கூறினார். அதற்கு அந்த நபர், இதைக் கேட்பதற்கு நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இன்று உலகில், அதிலும் இந்த கொள்ளைநோய் காலத்தில், இலட்சக்கணக்கான மக்கள் பசியோடு உள்ளனர். நீங்கள் இவ்வாறு இலவசமாக மளிகைப்பொருள்களைக் கொடுப்பதால், உலகில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துவிடப்போகிறது என்று கேட்டார். அவ்விருவரும் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், இதற்குமுன் உதவிபெற்றுச் சென்ற சிறுவனின் தந்தை தன் மகனோடு அங்கு வந்தார். நலமா, எல்லாம் சரியாக உள்ளதா என்று, அந்தப் பெண் அவரிடம் கேட்டார். அதற்கு அந்த தந்தை, நான் அண்மையில் எனது வேலையை இழந்துவிட்டேன். இன்று எனது குடும்பத்திற்கு எவ்வாறு உணவு கொடுப்பது என்று கவலையோடு இருந்தேன். அச்சமயத்தில் எனது மகன் பை நிறைய மளிகைப்பொருள்களுடன் வந்தான் இப்போது எனது குடும்பம் சாப்பிட முடியும். எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என்று, அவர் கண்ணீர்மல்கக் கூறினார். பின் மற்றொரு உணவுப் பையை அவரிடம் கொடுத்து இது உங்களுக்கு உதவும் என்றார் அந்த இளம்பெண். மேடம், இதை மறக்கவே மாட்டோம் என்று சொல்லிச் சென்றார் அந்த தந்தை. அதற்குமுன் அந்தப் பெண்ணை கேள்வியால் மடக்கிக்கொண்டிருந்த அந்த நபரும் அந்தப் பெண்போல் மளிகைப்பொருள்களை இலவசமாக கொடுக்கத் தொடங்கினார்.
நாம் ஆற்றும் ஒரு சிறு அன்புச்செயல், மற்றவரில் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொணர்கின்றது என்பதை, இதுபோன்ற பல நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. புனித அன்னை தெரேசா சொன்னார் - வெறுப்பது யாராக இருந்தாலும் அன்புகூர்பவர் நீங்களாக இருங்கள், இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருங்கள், இரு கை கூப்பி கடவுளை வணங்குவதைவிட, ஒரு கை நீட்டி உதவி செய். இரு கை உன்னை கடவுளாக வணங்கும். வாழ்வு என்பது நீ சாகும்வரை அல்ல, மாறாக நீ மற்றவர் மனதில் வாழும்வரை. நான் கடவுளின் கரத்தில் இருக்கும் சிறிய பேனா. எனது கடமை உலகுக்கு அன்புக் கடிதம் எழுதுவது. ஒரு செயலை செய்வது அதிசயம் அல்ல, அதை மகிழ்ச்சியாக செய்வதே அதிசயம்!”
கோவிட்-19ஆல் பல்வேறு வழிகளில் துன்பங்களை அனுபவிக்கும் அனைவருக்கும் மனமகிழ்வோடு அன்புச் செயல்களை ஆற்றுவோம். அவை தானாகவே தொடர் அன்புச்சங்கிலிகளாக உருவாகிக்கொண்டே இருக்கும். ஆம். ஒரு சிறு அன்புச் செயலுக்கு வல்லமை அதிகம்.
No comments:
Post a Comment