Thursday, 9 July 2020

தீவிரவாதிகளின் கீழ் மொசாம்பிக் சிக்கிக்கொள்ளக் கூடாது

உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மொசாம்பிக்கின் ஒரு பகுதி

இஸ்லாமியத் தீவிரவாதங்களை ஒடுக்குவதற்கு, மொசாம்பிக் அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆற்றுமாறு, ஐரோப்பிய பாராளுமன்ற அவையின் வெளிநாட்டு விவகார குழு விண்ணப்பம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
வடக்கு மொசாம்பிக் நாட்டில், இஸ்லாமியத் தீவிவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறுவதைக் குறித்து, தன் கண்டனத்தை வெளியிட்டுள்ள ஐரோப்பியக் கூட்டமைப்பு, இதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
Mocímboa da Praia என்ற துறைமுகத்தைக் கைப்பற்றியுள்ள Al Sunnah wa Jama'ah என்ற தீவிரவாத இஸ்லாமியக் குழு, தாக்குதல்களை தொடர்ந்து ஆற்றி வருவதாக உரைத்த ஐரோப்பிய பாராளுமன்ற அவையின் வெளிநாட்டு விவகாரக் குழு, ஜிகாதி பயங்கரவாதத்தின் உறைவிடமாக மொசாம்பிக் மாறிவருவதை தடுக்க, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்லாமியத் தீவிரவாதங்களை ஒடுக்குவதற்கு, மொசாம்பிக் அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆற்றுமாறு, ஐரோப்பிய அவையிடமும், ஐரோப்பாவின் வெளிநாட்டுப் பணிகள் அவையிடமும் விண்ணப்பித்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற அவையின் வெளிநாட்டு விவகாரக் குழு, தீவிரவாதிகளின் பிடிக்குள், ஆப்ரிக்காவின் மற்றுமொரு பகுதி சிக்கிக்கொள்வதை அனுமதிக்கமுடியாது என கூறியுள்ளது.
இஸ்லாமியத் தீவிரவாத நடவடிக்கைகளால், 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டில் 2 இலட்சம் பேர் புலம்பெயர்ந்தவர்களாக உள்ளதாகவும், இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஐரோப்பிய பாராளுமன்ற அவைக்கூட்டத்தில், அதன் உறுப்பினர்கள் கவலையை வெளியிட்டனர்.
மொசாம்பிக் திருஅவையுடன் நேரடித்தொடர்பு கொண்டுள்ள Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பின் புள்ளிவிவங்களின் துணையுடன், அந்நாட்டின் தற்போதைய தீவிரவாத நிலைகள் குறித்த விவாதம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
மொசாம்பிக்கின் வடபகுதியில் உள்ள இயற்கை எரிவாயு பகுதிகளை கைப்பற்றும் நோக்கத்தில் போராடி வரும் இஸ்லாமிய தீவிரவாத குழு, கடந்த மாதம் 28ம் தேதியன்று, அப்பகுதியின் ஒரு கத்தோலிக்க கோவிலையும், சில கத்தோலிக்க கட்டிடங்களையும் தாக்கி சேதமாக்கியதும் குறிப்பிடத்தக்கது. (ICN)

No comments:

Post a Comment