Saturday, 4 July 2020

திருத்தந்தையின் டுவிட்டர் - கிறிஸ்தவ மகிழ்வு என்பது...

திருத்தந்தை பிரான்சிஸ்

இயேசுவின் மரணம் மற்றும், உயிர்ப்பு பற்றிய நற்செய்திக்குச் செவிமடுப்பதிலிருந்தும், அவற்றை ஏற்பதிலிருந்தும் கிடைப்பது, கிறிஸ்தவ மகிழ்வு - திருத்தந்தை பிரான்சிஸ்


மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இயேசுவின் மரணம் மற்றும், உயிர்ப்பு பற்றிய நற்செய்திக்குச் செவிமடுப்பதிலிருந்தும், அவற்றை ஏற்பதிலிருந்தும் கிடைப்பது, கிறிஸ்தவ மகிழ்வு. இச்செய்தியை நம்புகின்ற எவரும், இறைத்தந்தையாம் கடவுளின் அன்பிலிருந்து வாழ்வு பிறக்கின்றது என்பதை அறிந்திருக்கின்றார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 03, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
நிதி சார்ந்த தகவல் அமைப்பு
மேலும், AIF எனப்படும் வத்திக்கானின் நிதி சார்ந்த தகவல் அமைப்பு, ஜூலை 03, இவ்வெள்ளியன்று, 2019ம் ஆண்டின் அறிக்கை மற்றும், அண்மையில் அந்த அமைப்பின் வளர்ச்சி குறித்த அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கையை செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டுப் பேசிய, இந்த அமைப்பின் தலைவர் Carmelo Barbagallo அவர்கள், AIF அமைப்பு, 2010ம் ஆண்டின் இறுதியில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் உருவாக்கப்பட்டு, 2011ம் ஆண்டிலிருந்து செயல்படத் துவங்கியது என்றும், படிப்படியாக இவ்வமைப்பின் பணிகள் வளர்ச்சியடைந்துள்ளன என்றும் கூறினார்.
பயங்கரவாதத்திற்குப் பணம் செலவழிக்கப்படுவது, மற்றும், சட்டத்திற்குப்புறம்பே பணப்பரிமாற்றம் நடைபெறுவது ஆகிய குற்றங்களுக்கு எதிராக இந்த அமைப்பு உயிரோட்டத்துடன் செயல்பட்டு வருகின்றது என்றும், Barbagallo அவர்கள் அறிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், இந்த அமைப்பிற்குத் தான் தலைவராக நியமிக்கப்பட்டது முதல், இவ்வாண்டில் இடம்பெற்றுள்ள முன்னேற்றங்கள் பற்றியும் எடுத்துரைத்த Barbagallo அவர்கள், வத்திக்கான் மற்றும், திருப்பீடத்தின் நிதி பட்டுவாடா குறித்த ஆய்வு, வருகிற செப்டம்பர் 29ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்தார்.
கடந்த ஏப்ரலில் நடைபெறவிருந்த இந்த ஆய்வு, கோவிட்-19 கொள்ளைநோயால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் Barbagallo அவர்கள் அறிவித்தார்.

No comments:

Post a Comment