Saturday, 4 July 2020

நிதானமாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்

தெனாலிராமன்

எந்த நேரத்திலும், அறிவைப் பயன்படுத்தி நிதானமாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்


மேரி தெரேசா: வத்திக்கான்
ஒரு சமயம் விஜயநகர பேரரசில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவமழை தவறிவிட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டன. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் ஒவ்வொரு நாளும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டார் தெனாலிராமன். இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டார் அவர்.  உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "நம் நாட்டில் பருவமழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்துள்ளது. பஞ்ச காலம் முடியும்வரை நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். எனவே வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டுவிடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும், மீண்டும் கிணற்றிலிருந்து அதை எடுத்துக் கொள்ளலாம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும்வண்ணம் உரத்த குரலில் சொன்னார். அதேநேரம், திருடர்கள் ஒளிந்திருப்பதை, தெனாலிராமன் தன் மனைவியிடம், மெதுவாகக் கூறி, ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் போட்டு மூடினார். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கிவந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டார் அவர். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த திருடர்களும், பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடர்கள், ஒருவர் மாற்றி ஒருவர், ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர். சிறிதுநேரத்திற்குப்பின், வேறு வழியாகத் தோட்டத்திற்குச் சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்குப் பாயுமாறு கால்வாயைத் திருப்பிவிட்டார். இப்படியே பொழுதும் விடிந்ததுவிட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. நாளைக்கு வரலாம் என்று திருடர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட தெனாலிராமன், அங்கு வந்து, நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று நாள்களுக்குப் போதும். எனவே மூன்று நாள்களுக்குப் பிறகு வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே என்று கூறினார். இதைக் கேட்டதும் திருடர்களுக்கு மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்த திருடர்கள், அங்கே இருந்தால் அகப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்தில், திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர். ஆம். எந்த நேரத்திலும், அறிவைப் பயன்படுத்தி நிதானமாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.  

No comments:

Post a Comment