ஒவ்வோர் ஆண்டும் 18 வயதுக்குட்பட்ட 33,000 சிறுமிகள், கட்டாயத் திருமணத்திற்கு உள்ளாகின்றனர், அதிலும், குறிப்பாக, அச்சிறுமிகள், தங்களைவிட வயது வேறுபாடு அதிகம் உள்ள ஆண்களுக்கு, திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் – ஐ.நா.
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
பெண்கள் மற்றும், சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் குழந்தைத் திருமணம், பெண் உறுப்புகள் முடமாக்கப்படல், மற்றும், ஏனைய உரிமை மீறல்கள் போன்றவை நிறுத்தப்படுவதற்கு, உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம், இச்செவ்வாயன்று கூறியுள்ளது.
UNFPA எனப்படும், ஐ.நா.வின் பாலியல் மற்றும், மனிதரின் ஒருங்கிணைந்த நலவாழ்வு அமைப்பு, 2020ம் ஆண்டின் உலக மக்கள் தொகையின் நிலவரம் குறித்து, ஜூன் 30, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், பெண்கள் மற்றும், சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் கொடூரமான பழக்கவழக்கங்கள், அவர்கள் தங்களின் முழு ஆளுமையில் வளர்வதற்குத் தேவையான உரிமையைத் திருடுகின்றன என்று கூறியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான சிறுமிகள், தங்கள் குடும்பங்களின் முழு அனுமதியோடு, உடலளவிலும், உணர்வளவிலும், தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர் என்றும், கன்னிமை பரிசோதிக்கப்படுவது உட்பட, குறைந்தது 19 வகையான சடங்குமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும், UNFPA அமைப்பின் இயக்குனர் டாக்டர் Natalia Kanem அவர்கள் கூறியுள்ளார்.
பெண்கள் மற்றும், சிறுமிகளின் உரிமைகள் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்படவேண்டும் எனவும், Kanem அவர்கள் உலக சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சடங்குமுறைகள், மனித உரிமை மீறல்களாகும் என்று, செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்த Kanem அவர்கள், பெண் உறுப்புகள் முடமாக்கப்படல், குழந்தைத் திருமணம், மகன்களுக்கு ஆதரவாக, மகள்கள் மிகுந்த பாரபட்சத்துடன் நடத்தப்படுவது ஆகிய மூன்று விவகாரங்களே, UNFPA அமைப்பின் அறிக்கையில் மையப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 41 இலட்சம் சிறுமிகள், தங்களின் பெண் உறுப்புகள் முடமாக்கப்படும் நிலைக்கும், 18 வயதுக்குட்பட்ட 33,000 சிறுமிகள், கட்டாயத் திருமணத்திற்கும் உள்ளாகின்றனர் என்று கூறும் அந்த அறிக்கை, அச்சிறுமிகள், பெரும்பாலும், தங்களைவிட வயதில் அதிகம் மூத்த ஆண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. (UN)
No comments:
Post a Comment