படுத்த படுக்கையாய் இருந்த அப்பெண், மலர்ந்த முகத்துடன், "சாமி, ஆண்டவர் உங்கள் செபத்தைக் கேட்டுவிட்டார் என்று நினைக்கிறேன். நான் பூரண குணமடைந்ததைப் போல் உணர்கிறேன்" என்று சொன்னார்.
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
இளம் அருள்பணியாளர் ஒருவர், புதிதாக, ஒரு பங்கில் பணிபுரியச் சென்றார். அந்தப் பங்கைச் சேர்ந்த மிக வயதான ஒரு பெண்மணி, உடல்நிலை மிகவும் நலிந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் எந்த நேரத்திலும் இறக்கலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால், அவரைக் காண்பதற்கு இளம் அருள்பணியாளர், மருத்துவமனைக்குச் சென்றார்.
மருத்துவமனையில் அப்பெண்ணை சந்தித்து, இருவரும், பத்து நிமிடங்கள் பல்வேறு விடயங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அருள்பணியாளர் புறப்படும் வேளையில், தனக்காகச் செபிக்கும்படி, அப்பெண்மணி கேட்டுக்கொண்டார். அருள்பணியாளர் அவரிடம், "என்ன கருத்துக்காக நாம் செபிக்கலாம்?" என்று பொதுப்படையாகக் கேட்டபோது, அப்பெண்மணி, "இது என்ன கேள்வி, சாமி? நான் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று செபியுங்கள்" என்று கூறினார்.
அவரது உடல்நிலையைப்பற்றி நன்கு அறிந்திருந்த அந்த இளம் அருள்பணியாளர், என்ன சொல்லி செபிப்பதென்று புரியாமல், மிகுந்த தயக்கத்துடன், நம்பிக்கையற்ற ஒரு தொனியில், அப்பெண்மணியின் தலைமீது கரங்களை வைத்து, அவர் பூரண குணமடையவேண்டும் என்று செபித்தார். அவர் அந்த செபத்தை முடிக்கும் வேளையில், அப்பெண், 'ஆமென்' என்று உரக்கச் சொன்னார். அதுவரை, படுத்த படுக்கையாய் இருந்த அப்பெண், மலர்ந்த முகத்துடன், "சாமி, ஆண்டவர் உங்கள் செபத்தைக் கேட்டுவிட்டார் என்று நினைக்கிறேன். நான் பூரண குணமடைந்ததைப் போல் உணர்கிறேன்" என்று சொன்னார்.
அது மட்டுமல்ல. அவர் படுக்கையைவிட்டு எழுந்து, அருகிலிருந்த அறைகளுக்குச் சென்று, "நான் குணமடைந்துவிட்டேன்" என்று அனைவரிடமும் கூறினார். அந்த இளம் அருள்பணியாளர், தன் கண்முன்னே நிகழ்வனவற்றை நம்பமுடியாமல், ஒருவித மயக்க நிலையில், மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தார். பின்னர், வானத்தைப் பார்த்து, "இறைவா, இப்படி ஓர் அதிர்ச்சியை இனிமேல் தராதீர்!" என்று ஆண்டவனுக்குக் கட்டளையிட்டார்.
அதிர்ச்சி தருவது, குறிப்பாக, ஆனந்த அதிர்ச்சி தருவது, ஆண்டவனின் அழகு.
No comments:
Post a Comment