Saturday, 9 February 2013

Catholic News in Tamil - 09/02/13

1. திருத்தந்தையும் Malta பிறரன்பு அமைப்பினரும்

2. திருத்தந்தை மறைசாட்சிய வாழ்வு இன்றி கிறிஸ்தவம் இல்லை

3. CCBI பேரவையின் புதிய தலைவர்கள்

4. பேராயர் Müller: அமெரிக்கத் திருஅவையில் இணைந்துள்ள ஆங்லிக்கன் குழுக்கள் கொடைகளைக் கொண்டு வந்துள்ளனர்

5. அருள்தந்தை லொம்பார்தி : இளையோரின் வாழ்வில் ஒன்றாகக் கலக்க வேண்டும்

6. போதைப்பொருளைச் சட்டப்படி அங்கீகரிப்பதற்கான முயற்சிக்கு அர்ஜென்டினா பேராயர் எதிர்ப்பு

7. கட்டாய வேலைமுறை ஒழிக்கப்படுவதற்குக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ILO வலியுறுத்தல் 

8. பூமியைத் தாக்கவரும், சூப்பர் புயல்: பிரிட்டன் அறிவியலாளர்கள் எச்சரிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையும் Malta பிறரன்பு அமைப்பினரும்

பிப்.09,2013. உலகை மீட்ட இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொள்வதால் ஏற்படும் மகிழ்ச்சி மற்றும் அர்ப்பணத்தைப் புதுப்பிப்பதற்கு இந்த நம்பிக்கை ஆண்டில் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
Order of Malta என்ற அனைத்துலக பிறரன்பு அமைப்பு திருத்தந்தையின் அங்கீகாரம் பெற்றதன் 900மாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இச்சனிக்கிழமையன்று அவ்வமைப்பின் நான்காயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இந்தப் பிறரன்பு அமைப்பு தனது 900 ஆண்டுகால வரலாற்றில் திருஅவைக்கு விசுவாசமாய் இருந்துவரும் பாதையில் தொடர்ந்து சென்று, விசுவாசத்தின் உருமாற்றும் வல்லமைக்கு உறுதியான சாட்சிகளாக வாழுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
நம்பிக்கை, பிறரன்பு, பற்றுறுதி ஆகிய நற்செய்தி விழுமியங்கள் காட்டும் பாதையில் உலகிலும், சமுதாயத்திலும் தொடர்ந்து பணியாற்றுமாறும் அவர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை இவ்வமைப்பினரைச் சந்திக்கும் முன்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே இவர்களுக்குத் திருப்பலி நிகழ்த்தினார்.
1113ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி திருத்தந்தை 2ம் பாஸ்கால், "Piae postulatio voluntatis" என்ற அறிக்கையின் மூலம் இந்த அமைப்பின் ஆன்மீக மற்றும் இறையாண்மையின் தனித்துவத்தை ஏற்று அதனை, திருப்பீடத்தின் பாதுகாவலில் வைத்தார்.
13,500 உறுப்பினர்கள், 80,000 தன்னார்வப் பணியாளர்கள், 25,000க்கு மேற்பட்ட மருத்துவர்கள், தாதியர் மற்றும் நலப்பணியாளர்களின் ஆதரவுடன் 120 நாடுகளில் மருத்துவ, சமூக மற்றும் மனிதாபிமானப் பணிகளைச் செய்து வருகின்றது இவ்வமைப்பு.
Order of Malta அமைப்பு பெத்லகேமில் நடத்தும் மருத்துவமனையில் 1990ம் ஆண்டிலிருந்து 57,000க்கு மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. சிரியா, துருக்கி, லெபனன் ஆகிய நாடுகளில் 10,000க்கு மேற்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளையும் இவ்வமைப்பு வழங்கி வருகிறது.


2. திருத்தந்தை மறைசாட்சிய வாழ்வு இன்றி கிறிஸ்தவம் இல்லை

பிப்.09,2013. சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவைப் பின்செல்லாத மற்றும் மறைசாட்சிய வாழ்வை ஏற்காத எவரும் கிறிஸ்தவர் என்று தன்னை அழைத்துக்கொள்ள முடியாது என, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோம் மறைமாவட்ட குருத்துவக் கல்லூரியின் பாதுகாவலராகிய நம்பிக்கை அன்னைமரி விழாவான இவ்வெள்ளி மாலை அக்குருத்துவக் கல்லூரி சென்று, 190 குருத்துவ மாணவர்களுடன் இறைவார்த்தை விளக்க வழிபாட்டில் கலந்து கொண்டு மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்துவில் கொண்டிருக்கும் விசுவாசத்திற்காக விசுவாசிகள் அனுபவித்த பலவித அடக்குமுறைகளையும் துன்பங்களையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, குருத்துவ அழைப்பை பல இளையோர் தேர்ந்துகொண்டுள்ளது குறித்த மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
கடவுள் கொடுத்துள்ள அழைத்தல் என்னும் இவ்வருளை நினைத்து நாம் மகிழ்ச்சியுற வேண்டும் என்றும் கூறிய திருத்தந்தை, கடவுளின் உண்மை, அவரது அன்பின் மகிழ்வு ஆகியவற்றின் நிறைவை இந்தக் குருத்துவ அழைப்பில் காணமுடியும் என்றும் கூறினார்.
புனித பேதுரு முதல் திருமுகம், பிரிவு 1:3-5 வரையுள்ள இறைச்சொற்களை மையமாக வைத்து திருத்தந்தை மறையுரையாற்றினார்.


3. CCBI பேரவையின் புதிய தலைவர்கள்

பிப்.09,2013. CCBI என்ற இந்திய இலத்தீன்முறை ஆயர்கள் பேரவையின் புதியத் தலைவராக, மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வேளாங்கண்ணியில் நடைபெற்றுவரும் CCBI பேரவையின் 25வது பொதுக் கூட்டத்தில் இவ்வெள்ளியன்று, அப்பேரவையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கர்தினால் கிரேசியஸ், CBCI என்ற இந்திய ஆயர்கள் பேரவையின் தலைவரும், FABC என்ற ஆசிய ஆயர்கள் பேரவைகளின் கூட்டமைப்பின் பொதுச்செயலருமாவார்.
மேலும், CCBI பேரவையின் உதவித் தலைவர்களாக கோவா பேராயர் Filipe Neri Ferrao, Calicut ஆயர் Varghese Chakkalakkal ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இன்னும், CCBI ஆயர்கள் பேரவை உருவாக்கப்பட்டதன் வெள்ளிவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் நடைபெற்றுவரும் ஆயர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்குத் திருத்தந்தையின் பிரதிநிதியாக, திருப்பீட நற்செய்தி அறிவிப்புப்பணிப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni, இச்சனிக்கிழமையன்று வேளாங்கண்ணி சென்றுள்ளார்.
சுமார் 126 ஆயர்கள் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தில் இஞ்ஞாயிறு காலை 9 மணிக்கு உரையாற்றுவார் கர்தினால் Filoni.


4. பேராயர் Müller: அமெரிக்கத் திருஅவையில் இணைந்துள்ள ஆங்லிக்கன் குழுக்கள் கொடைகளைக் கொண்டு வந்துள்ளனர்

பிப்.09,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்துள்ள ஆங்லிக்கன் குழுக்கள் தங்களது பாரம்பரியங்களைப் பெரியதொரு கத்தோலிக்கச் சமூகத்திற்குக் கொண்டுவருவதில் துணிச்சலுடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார் திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவர் பேராயர் Gerhard Müller.
அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்துள்ள ஆங்லிக்கன் குழுக்களின் (U.S. ordinariate) மறைப்பணி என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் Müller, அகில உலக கத்தோலிக்கத் திருஅவையில் அவர்களின் மரபுக்கொடைகளை வழங்குவதில் துணிச்சலான முன்னோடிகளாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆங்லிக்கன் குழுக்களின் மரபுகள், செபமுறைகள், வழிபாடுகள் ஆகியவை திருஅவையில் உண்மையான ஒன்றிப்புக்குத் தடைகளாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் Müller.


5. அருள்தந்தை லொம்பார்தி : இளையோரின் வாழ்வில் ஒன்றாகக் கலக்க வேண்டும்

பிப்.09,2013. இன்றைய இளையோரின் கலாச்சாரப்போக்கு குறித்து சிந்தித்தால் மட்டும் போதாது, மாறாக, அவர்களுக்கு ஆதரவாக இருந்து, அவர்களது வாழ்வில் ஒன்றாகக் கலக்க வேண்டுமென வத்திக்கான் வானொலி இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இக்காலத்தில் வேகமாக இடம்பெற்றுவரும் மாற்றங்களால் தங்களது மனநிலை, நடத்தை, வாழ்க்கைப் போக்கு ஆகியவற்றில் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்திவரும் இளையோரைப் புரிந்துகொள்வது கடினமாக இருப்பதால், அவர்களைப் புரிந்துகொள்வதற்கு அவர்களது வாழ்வில் ஒன்றாகக் கலக்கவேண்டும் என்று கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.
எப்பொழுதும் மாறிக்கொண்டுவரும் இன்றைய உலகில் இளையோரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும், அவர்களது இதயங்களையும் மனநிலைகளையும் புரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் உள்ளது எனவும் அவர் கூறினார்.


6. போதைப்பொருளைச் சட்டப்படி அங்கீகரிப்பதற்கான முயற்சிக்கு அர்ஜென்டினா பேராயர் எதிர்ப்பு

பிப்.09,2013. அர்ஜென்டினா நாட்டில் போதைப்பொருளைச் சட்டப்படி அங்கீகரிப்பதற்கான அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jose Maria Arancedo.
போதைப்பொருள்களைச் சட்டப்படி அங்கீகரிப்பது, இவை எவ்விதக் கெடுதியும் செய்யாது என்ற எண்ணத்தை உருவாக்கும் என, தலைநகர் Buenos Aires பேராயரான Maria Arancedo கூறினார்.
மரிஹூவான போன்ற போதைப்பொருள்களைச் சட்டப்படி அங்கீகரிப்பது குறித்து கலந்துபேசுவதற்குத் தான் தயாராக உள்ளதாக, Santa Fe ஆளுனர் Antonio Bonfatti கூறியுள்ளதையடுத்து, El Litoral என்ற தினத்தாளில் இவ்வாறு தனது கருத்தை வெளியிட்டுள்ளார் பேராயர் Maria Arancedo.
போதைப்பொருள்கள் பயன்படுத்தப்படுவதற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து அவற்றைக் களைவதற்குச் சமுதாயம் முயற்சிப்பதாகத் தெரியவில்லை என்ற பேராயர் Maria Arancedo, இந்தப் போதைப்பொருள் பழக்கத்தால் இளையோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறினார்.


7. கட்டாய வேலைமுறை ஒழிக்கப்படுவதற்குக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ILO வலியுறுத்தல் 

பிப்.09,2013. உலக அளவில் கட்டாய வேலையினால் 2 கோடியே 10 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளவேளை, இந்த வேலைமுறையை முற்றிலும் ஒழிப்பதற்குத் தீவிர முயற்சிகள் எடுக்கப்படுமாறு ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கை வலியுறுத்துகிறது.
வரும் வாரத்தில் ஜெனீவாவில், கட்டாயவேலை குறித்து அனைத்துலக கூட்டம் ஒன்று தொடங்கவிருப்பதை முன்னிட்டு புதிய அறிக்கை ஒன்றை இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள ஐ.நாவின் ILO நிறுவனம், இந்த மாதிரி வேலையில் சேர்க்கப்படும் மக்கள், கடனுக்காகக் கொத்தடிமைகளாகவும், பாலியல் வியாபாரத்திலும் பயன்படுத்தப்படுகின்றனர் எனக் கூறியுள்ளது.
18 வயதுக்குட்பட்ட 55 இலட்சம் சிறார் கட்டாயவேலைக்கு உட்படுத்தப்படுகின்றனர், இவர்கள், உலக அளவில் கட்டாய வேலை செய்வோரில் ஏறக்குறைய 26 விழுக்காட்டினர் என்றும், ஏறக்குறைய 45 இலட்சம் பேர் பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுகின்றனர், இவர்கள், உலக அளவில் கட்டாய வேலை செய்வோரில் 21 விழுக்காட்டினர் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
15க்கும் 24 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய 7 கோடியே 40 இலட்சம் இளையோர் வேலையின்றி உள்ளனர் எனவும் ILO நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.


8. பூமியைத் தாக்கவரும், சூப்பர் புயல்: பிரிட்டன் அறிவியலாளர்கள் எச்சரிக்கை

பிப்.09,2013. சூரியனிலிருந்து 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பயங்கரப் புயல் ஒன்று, அண்மை வருங்காலத்தில் பூமியைத் தாக்கலாம் என ஓர் அறிவியல் ஆய்வறிக்கைத் தெரிவிக்கின்றது.
இதனால், செயற்கைக்கோள்கள், விமானம் மற்றும் மின்சாரச் சேவைகள் பாதிக்கப்படும் என்று அவ்வறிக்கையில் எச்சரித்துள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள், சூரியனால் உமிழப்படும் துகள்கள், ஒன்று சேர்ந்து இந்தப் புயல் உருவாகிறது என்று தெரிவித்துள்ளனர்.
கோடிக்கணக்கான டன் கணக்கில் உமிழப்படும் இத்துகள்கள், மணிக்கு, 16 இலட்சம் கி.மீ. வேகத்துடன் பூமியை நோக்கி வரும் என்றும், இந்தப் புயல் தோன்றுவதற்கு, 30 நிமிடங்களுக்குமுன்தான், அது உருவானதுபற்றி அறியமுடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தப் பெரிய "சூரியப் புயல்", கடந்த 1859ம் ஆண்டில் பூமியைத் தாக்கியுள்ளது. இதேபோன்ற "சூரியப் புயல்"கள், 1956, 1972, 1989, 2003 ஆகிய ஆண்டுகளில் வெளிமண்டலத்தில் குறிப்பிடத்தக்கப் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையை, இலண்டனிலுள்ள, "Royal Academy of Engineering" என்ற நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, இந்த அமைப்பின் செயல்திட்ட தலைவர் பேராசிரியர் Paul Cannon, இந்தப் புயல் சவாலானது என்றாலும், பிரளயம் ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானதல்ல. இதைக் கண்காணிக்க வானிலை மையம் ஒன்றை அமைத்து, பெரும் சேதம் நிகழாமல் தடுக்கமுடியும் என்று கூறியுள்ளார்.
 

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...