1. பாப்பிறை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான விருப்பத்தை தெரிவித்து திருத்தந்தை அறிக்கை
2. திருத்தந்தையின் பதவி விலகல் குறித்து திருப்பீடப் பத்திரிகைத்துறை
3. திருத்தந்தை : தோல்விகளும் துன்பங்களும் நற்செய்தி அறிவிப்புப்பணியைச் சோர்வுறச் செய்யக் கூடாது
4. திருத்தந்தை சீன மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளமான வாழ்வுக்கான ஏக்கம் நிறைவேறட்டும்
5. கர்தினால் ஃபிலோனி வேளாங்கண்ணியில் கந்தமால் கிறிஸ்தவர்கள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார்
6. நம்பிக்கை ஆண்டில் அன்னைமரியின் எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றி வாழ்வோம்
7. சென்னையில் இந்திய தேசிய பொதுநிலையினர் கருத்தரங்கு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. பாப்பிறை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான விருப்பத்தை தெரிவித்து திருத்தந்தை அறிக்கை
பிப்.11,2013. இம்மாதம் 28ம்
தேதியிலிருந்து பாப்பிறை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான விருப்பத்தைத்
தெரிவித்து இத்திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
முதுமை
காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளைச் சரியாக ஏற்று நடத்தமுடியாத நிலையில்
இம்முடிவைத் தான் எடுத்துள்ளதாகக் கூறியுள்ள பாப்பிறை, 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் கர்தினால்கள் அவையால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இப்பொறுப்பிலிருந்து இம்மாதம் 28ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணியிலிருந்து
பணிஓய்வு பெறுவதாக அவ்வறிக்கையில் கூறியுள்ளார். அதன்பின் கர்தினால்கள்
அவை கூடி புதிய திருத்தந்தையைத் தேர்ந்தடுக்கும் எனவும் அதில்
தெரிவித்துள்ளார் பாப்பிறை.
இந்தப் பாப்பிறை பணியின்போது தன்மீது காட்டப்பட்ட அன்பிற்கு நன்றி கூறுவதாகவும், குறைபாடுகளுக்காக மன்னிப்பை வேண்டுவதாகவும் மேலும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பாப்பிறை. தன் இறுதிக் காலத்தில், செபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்வு மூலம் திருஅவைக்குச் சேவையாற்ற உள்ளதாகவும், தனது செய்தியின் இறுதியில் கூறியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
2. திருத்தந்தையின் பதவி விலகல் குறித்து திருப்பீடப் பத்திரிகைத்துறை
பிப்.11,2013. இம்மாதம் 28ம் தேதி மாலையில் ஓய்வு பெறும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அதன்பின் திருத்தந்தையர்களின் காஸ்தெல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் சிறிது காலம் தங்கியிருப்பார் எனவும், அதன்
பின்னர் வத்திக்கானுக்கு உள்ளேயுள்ள அடைபட்ட கன்னியர் மடத்தில் செபம்
மற்றும் தியானத்தில் தன் வாழ்வைச் செலவிடுவார் எனவும் திருப்பீடப்
பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை ஃபெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
ஓய்வு பெறுவதற்கான இந்த முடிவை சுதந்திரமாக எடுத்துள்ள திருத்தந்தை, அடுத்த பாப்பிறை தேர்தலில் கலந்துகொள்ளமாட்டார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார். 80 வயதிற்கு
மேற்பட்ட கர்தினால்கள் திருத்தந்தையின் தேர்தலில் கலந்து கொள்ள
திருச்சபைச் சட்டம் அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வுபெறுவதற்கான
திருத்தந்தையின் இந்த முடிவு குறித்து உலகின் பலபாகங்களிலிருந்தும்
திருஅவைத் தந்தையர்கள் தங்கள் ஆழ்ந்த கவலையையும் செப ஒருமைப்பாட்டையும்
வெளியிட்டு செய்திகளை அனுப்பியுள்ளனர்.
1415ம் ஆண்டு திருத்தந்தை 12ம் கிரகரி பதவி விலகியதற்குப்பின், திருத்தந்தை ஒருவர் பதவி விலகுவது தற்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
3. திருத்தந்தை : தோல்விகளும் துன்பங்களும் நற்செய்தி அறிவிப்புப்பணியைச் சோர்வுறச் செய்யக் கூடாது
பிப்.11,2013. தோல்விகளும் துன்பங்களும் நற்செய்தி அறிவிப்புப்பணியைச் சோர்வுறச் செய்யக் கூடாது, மாறாக, துணிச்சலுடனும், நம்பிக்கையுடனும் நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
தம்மைப் பின்தொடருமாறு இயேசு, புனித பேதுருவுக்குக் கூறிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, நாம் நம்பிக்கையோடு வலைகளை வீச வேண்டும், அதற்குப்பின் நடப்பதை நம் ஆண்டவர் பார்த்துக் கொள்வார் என்று கூறினார்.
தம்மைப் பின்செல்பவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து வெளிவருவதற்கு தமது வல்லமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அதனால் அவர்கள், அவர் விடுக்கும் அழைப்புக்குக் குறுக்கே நிற்கமாட்டார்கள் எனவும் திருத்தந்தை கூறினார்.
மீன்பிடித்தல், திருஅவையின் மறைப்பணியைக் குறித்து நிற்கிறது என்றும், புனித பேதுருவின் அனுபவம் உண்மையிலேயே தனித்துவமிக்கது, நற்செய்தியை அறிவிப்பதற்கான ஒவ்வொரு திருத்தூதரின் அழைப்பின் பிரதிநிதியாகவும் இவர் இருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம், குருத்துவ மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வுக்கான அழைத்தல் குறித்து சிந்திக்கவும் வைக்கின்றது என்ற திருத்தந்தை, கடவுள் அழைக்கும்போது மனிதர் தங்களின் பலவீனங்களை நினைத்துப் பயப்படக் கூடாது என்றும் தெரிவித்தார்.
4. திருத்தந்தை சீன மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளமான வாழ்வுக்கான ஏக்கம் நிறைவேறட்டும்
பிப்.11,2013. இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள சீனப் புத்தாண்டு, இத்திங்களன்று ஜெர்மனியின் பவேரியா மாநிலத்திலுள்ள Altötting அன்னைமரியா
திருத்தலத்தில் சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக நோயாளர் தினம் ஆகிய இரு
தினங்களை இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் நினைவுகூர்ந்தார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய 20 ஆயிரம் மக்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, தூர கிழக்கு நாடுகளில் புத்தாண்டைக் கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளமான வாழ்வுக்கான ஏக்கம் நிறைவேறட்டும் என வாழ்த்தினார்.
அமைதி, நல்லிணக்கம், இறைவனுக்கு நன்றி ஆகிய உலகளாவிய விழுமியங்களை இப்புத்தாண்டில் இம்மக்கள் சிறப்பிக்கின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, இப்புத்தாண்டைச் சிறப்பிக்கும் இந்நாடுகளின் கத்தோலிக்கர் இந்த நம்பிக்கை ஆண்டில் கிறிஸ்துவின் ஞானத்தால் வழிநடத்தப்படுவார்களாக என, இந்நாடுகளின் கத்தோலிக்கருக்குச் சிறப்பான வாழ்த்தையும் தெரிவித்தார்.
Altötting அன்னை மரியா திருத்தலத்தில் அனைத்துலக நோயாளர் தினத்தைச் சிறப்பிக்கக் கூடியிருக்கும் அனைவருடனும், குறிப்பாக, நோயாளிகளுடன் தான் ஆன்மீகமுறையில் ஒன்றித்திருப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை.
சீனப் புத்தாண்டு, பாம்பு ஆண்டு என்ற பெயரில் இச்சனிக்கிழமை நள்ளிரவில் வெகு ஆடரம்பத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
5. கர்தினால் ஃபிலோனி வேளாங்கண்ணியில் கந்தமால் கிறிஸ்தவர்கள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார்
பிப்.11,2013.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டில்
இடம்பெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு மத்தியில், தங்களது
விசுவாசத்தைக் காத்த கிறிஸ்தவர்களின் வரலாறுகள் அடங்கிய புத்தகத்தை
வேளாங்கண்ணியில் வெளியிட்டார் கர்தினால் பெர்னாண்டோ ஃபிலோனி
CCBI என்ற
இந்திய இலத்தீன்முறை ஆயர்கள் பேரவை உருவாக்கப்பட்டதன் வெள்ளிவிழா
நிகழ்வில் இஞ்ஞாயிறன்று இப்புத்தகத்தை வெளியிட்டார் திருப்பீட நற்செய்தி
அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் கர்தினால் பிலோனி.
120க்கும் மேற்பட்ட ஆயர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் பேசிய கர்தினால் டெலஸ்போர் டோப்போ, இப்புத்தகம் இறைவாக்குத்தன்மை கொண்டது மற்றும் இது மக்கள் விசுவாசத்தில் வளர உதவும் எனக் கூறினார்.
276 பக்கங்கள் கொண்ட 21ம் நூற்றாண்டின் முதல் கிறிஸ்தவர்கள் என்ற தலைப்பிலான இப்புத்தகம் நிருபர் Anto Akkara என்பவரால் தயாரிக்கப்பட்டது.
6. நம்பிக்கை ஆண்டில் அன்னைமரியின் எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றி வாழ்வோம்
பிப்.11,2013.
வேளாங்கண்ணியில் தனக்கென வழங்கப்பட்டுள்ள வீட்டில் அன்னைமரி இந்நாட்டு
மக்களுடன் நிரந்தரமாகத் தங்க ஆவல் கொண்டுள்ளார் எனத் தன் மறையுரையில்
குறிப்பிட்டார் நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால்
ஃபெர்னாண்டோ ஃபிலோனி.
வேளாங்கண்ணி மரியன்னை திருத்தலம் மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவு மற்றும் இந்திய இலத்தீன் ரீதி ஆயர் பேரவையின் 25ம் ஆண்டு ஆகிய கொண்டாட்டங்களில் திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ளும் கர்தினால் ஃபிலோனி, இஞ்ஞாயிறன்று வேளாங்கண்ணியில் நிறைவேற்றிய திருப்பலியில், அன்னை மரி இங்கு நம் ஒவ்வொருவரின் குடும்ப அங்கமாக மாறியுள்ளார் என்றார்.
கானாவூர் திருமணத்தில் இரசம் தீர்ந்துவிடவே, தன் மகன் மூலம் அங்கு உதவிய அன்னை மரி, நம் ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து உதவிக்கொண்டேயிருக்கிறார் என்ற கர்தினால், அன்னைமரியின் விசுவாசமும், இறையழைப்பிற்கான கீழ்ப்படிதலும் நமக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் என மேலும் உரைத்தார். அன்னைமரி எலிசபெத்தை சந்திக்கச் சென்றது, தன் கணவர் வளன் மீது நம்பிக்கை வைத்து அவருடன் எகிப்துக்குச் சென்றது, இயேசுவின்மீது முழு விசுவாசத்தில் சிலுவை மரணம் வரை அவரைப் பின்தொடர்ந்தது ஆகியவைகளையும் சுட்டிக்காட்டிய கர்தினால், விசுவாசத்தின் வழி அவர் உயிர்ப்பின் கனிகளைச் சுவைத்தார் என மேலும் கூறினார்.
இவ்வாறு அன்னைமரியின் எடுத்துக்காட்டுகளைத் தன் மறையுரையில் எடுத்தியம்பிய கர்தினால் ஃபிலோனி, இந்த நம்பிக்கை ஆண்டில் நம் நடவடிக்கைகள் மூலம் விசுவாசத்தின் சாட்சிகளாக விளங்குவோம் என மேலும் கூறினார்.
7. சென்னையில் இந்திய தேசிய பொதுநிலையினர் கருத்தரங்கு
பிப்.11,2013. இந்திய தேசியப் பொதுநிலையினர் கருத்தரங்கு ஒன்றை சென்னை சாந்தோம் பேராலய பசிலிக்காவில் இத்திங்கள் மாலை தொடங்கி வைத்தார் கர்தினால் பெர்னாண்டோ ஃபிலோனி.
இந்தியாவுக்கான ஒரு வாரச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள திருப்பீட நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் கர்தினால் ஃபிலோனி தொடங்கி வைத்துள்ள இந்த இரண்டு நாள் கருத்தரங்கை, CBCI என்ற இந்திய ஆயர் பேரவையின் பொதுநிலையினர் பணிக்குழு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கருத்தரங்கின் நோக்கம் குறித்து வத்திக்கான் வானொலிக்குச் செய்தி அனுப்பியுள்ள இப்பணிக்குழு செயலர் அருள்பணி வின்சென்ட் சின்னத்துரை, பொதுநிலையினர் தங்களது கிறிஸ்தவ விசுவாசத்தை மீண்டும் கண்டுணர்ந்து அதில் ஆழப்படவும், பல
சமயத்தினர் வாழும் ஒரு நாட்டில் கிறிஸ்தவர்கள் உலகின் ஒளியாகவும்
உப்பாகவும் வாழ்வதற்குத் தங்களை அர்ப்பணிக்கவும் உதவும் நோக்கத்தில் இக்கருத்தரங்கு நடத்தப்படுகின்றது என்று கூறினார்.
இக்கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில், இந்தியத் திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ, சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, CBCI பேரவையின் பொதுநிலையினர் பணிக்குழுத் தலைவரான கொல்லம் ஆயர் Stanley Roman உட்பட பல ஆயர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நம்பிக்கை ஆண்டில் இத்தகைய கருத்தரங்குகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெறும் எனவும் அருள்பணி வின்சென்ட் சின்னத்துரை கூறினார்.
அருள்பணியாளர்கள் ஜோமிக்ஸ், ஆனந்தம், டாக்டர் புஷ்பராஜன் ஆகியோர் இக்கருத்தரங்கை வழிநடத்துகிறார்கள் என்றும் அருள்பணி வின்சென்ட் சின்னத்துரை கூறினார்.
No comments:
Post a Comment