Saturday, 23 February 2013

Catholic News in Tamil - 23/02/13


1. திருப்பீட அதிகாரிகளிடம் திருத்தந்தை - செபத்தின் வழி தொடர்ந்து இணைந்திருப்போம்

2. இத்தாலிய அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

3. பல்வேறு சவால்கள் திருஅவை முன் உள்ளன என்கிறார் திருப்பீடப்பேச்சாளர்

4. மலாவியில் பதட்ட நிலைகள் களையப்பட தலத்திரு அவை அழைப்பு

5. தமிழகத்தில் போலியோ இல்லை : அரசு அறிவிப்பு

6. மருந்து சோதனை: ஓராண்டில் 436 இந்தியர் பலி

7. மகாராஷ்டிராவில் வறட்சி பாதிப்பால் 228 விவசாயிகள் தற்கொலை

------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீட அதிகாரிகளிடம் திருத்தந்தை - செபத்தின் வழி தொடர்ந்து இணைந்திருப்போம்

பிப்.23,2013. கலைநயம் மிகுந்த விசுவாசம், செபவாழ்வின் கலைநயத்தையும் வெளிப்படுத்தும் என்ற தலைப்பில், ஆண்டு தியானத்தில் ஒருவாரம் ஈடுபட்டிருந்த தன்னோடு ஆன்மீஅகப் பயிற்சிகளில் பயணம் செய்த அனைவருக்கும் நன்றிகூற விளைவதாக எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தன் தியானத்தின்போது தன்னோடு இருந்து இந்த ஆன்மீகப்பயணத்தில் பங்குபெற்ற திருப்பீட அதிகாரிகளுக்கும், இந்நாட்களில் செபம் மூலம் தன்னோடு துணை நின்ற விசுவாசிகளுக்கும் நன்றி சொல்வதாக இச்சனிக்கிழமை காலை உரை வழங்கியத் திருத்தந்தை, வார்த்தை என்பது இதயமுடையது அதுவே அன்புமாகும் என்று கூறினார். உண்மை என்பது அழகு நிரம்பியது, உண்மையும் அன்பும் எப்போதும் இணைந்துச் செல்கின்றன என மேலும் கூறினார்.
படைத்தவை அனைத்தையும் நல்லதென இறைவன் கண்டதாக விவிலியத்தில் நாம் வாசிக்கும் அதேவேளை, இன்றைய உலகில் தீமை, துன்பம், ஊழல் என்ற நிலைகளே அதிகம் காணப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
மனுவுருவான வார்த்தை முள்மகுடம் கொண்டு முடிசூட்டப்பட்டாலும், இந்த இறைமகனின் துன்பத்திலேயே நாம் மீட்பரின் ஆழமான அழகைக் கண்டுகொள்கிறோம் என்ற திருத்தந்தை,  இருளின் அமைதியில் வார்த்தையைத் தெளிவாகக் கேட்கமுடியும் என்றார்.
இந்த ஒருவார தியானத்திற்காக மட்டும் நான் உங்களுக்கு நன்றிகூறவில்லை, மாறாக, கடந்த எட்டு ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் நான் பணியாற்றியபோது, உங்களுடைய திறமைகள், அன்பு, பாசம், நம்பிக்கை ஆகியவற்றோடு என்னுடன் பயணம் செய்ததற்காக நன்றி கூற விழைகிறேன்.
வெளிப்பார்வைக்கு நம்மிடையே உள்ள உறவு முடிந்துள்ளதாக தெரிந்தாலும் நம்முடைய ஆழமான ஒன்றிப்பும், நெருக்கமும் செபத்தின் வழி என்றும் நிலைத்திருக்கும் என திருப்பீட அதிகாரிகளிடம் மேலும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. இத்தாலிய அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

பிப்.23,2013. இச்சனிக்கிழமையன்று தன் ஒருவார தியானத்தை முடித்த திருத்தந்தை, அந்நாளின் முதல் நிகழ்ச்சியாக இத்தாலிய அரசுத்தலைவர் ஜியார்ஜியோ நப்போலித்தானோவை சந்தித்தார்.
வருகிற வியாழனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பணி ஓய்வு பெறவுள்ளதை முன்னிட்டு இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்திற்கு வந்து திருத்தந்தையைச் சந்தித்து அரைமணி நேரத்திற்கு மேல் உரையாடிக்கொண்டிருந்த இத்தாலிய அரசுத்தலைவர், 1840ம் ஆண்டு இத்தாலியில் வெளியிடப்பட்ட பிரபல நாவல் ஒன்றின் பழங்காலப்பிரதி ஒன்றை திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார். வத்திக்கான் பேராலய கட்டுமானப்பணிகளின் புகைப்பட பிரதி ஒன்றை, இத்தாலிய அரசுத்தலைவருக்குப் பரிசாக அளித்தார் திருத்தந்தை.
இரு தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, விரைவில் அரசுப்பயணமாக தான் ஜெர்மனிக்கு செல்லவிருப்பது குறித்த விவரங்களை திருத்தந்தையிடம் பகிர்ந்துகொண்டார் இத்தாலிய அரசுத்தலைவர் நப்போலித்தானோ.


3. பல்வேறு சவால்கள் திருஅவை முன் உள்ளன என்கிறார் திருப்பீடப்பேச்சாளர்

பிப்.23,2013. திருத்தந்தை பதவி விலகும் இந்த வாரமும் அதைத்தொடர்ந்து அடுத்த திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும்வரை உள்ள காலமும் மிகவும் சவால் நிறைந்த காலங்களாக இருக்கும் என்று கூறினார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
எதிர்பார்ப்புகளுடனும் தயாரிப்புகளுடனும் இக்காலத்தில் வாழ்ந்துவரும் திருஅவை, அதன் இயல்புக்கு ஒத்திணங்கிச் செல்லாத  பல நிர்ப்பந்தங்களையும், கருத்துக்களையும் எதிர்நோக்கவேண்டியுள்ளது என்ற திருப்பீடப்பேச்சாளர், திருஅவையையும் அதன் நிர்வாகத்தையும் குழப்ப, சில சமூகத்தொடர்பு சாதனங்கள் வழி, சிலரால் அவதூறான செய்திகள் பரப்ப்ப்பட்டு வருவதையும் குறிப்பிட்டார்.
திருஅவை அதிகாரிகள் குறித்து சிலர் தவறான கருத்துக்களைப் பரப்பிவருவது குறித்த கவலையையும் வெளியிட்டார் அருட்தந்தை லொம்பார்தி.
விசுவாசிகள் திருஅவை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் அன்பையும் சிலரின் அவதூறான பிரச்சாரங்கள் எவ்வகையிலும் பாதிக்காது என மேலும் கூறிய திருப்பீடப்பேச்சாளர்,  தன் வாழ்நாளின் இறுதி நாட்களை செபத்திற்கென அர்ப்பணிக்க திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கொண்டிருக்கும் விருப்பத்தையும் சுட்டிக்காட்டினார்.


4. மலாவியில் பதட்ட நிலைகள் களையப்பட தலத்திரு அவை அழைப்பு

பிப்.23,2013. பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் மலாவி அரசின் நிலைகளை உணர்ந்துள்ள அதேவேளை, உரிமைகளுக்காகப் போராடும் அரசு அதிகாரிகளுடனும் மக்களுடனும் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்க திருஅவை விரும்புகிறது எனக் கூறியுள்ளனர் மலாவி ஆயர்கள்.
மலாவி நாட்டின் இன்றைய பதட்ட நிலைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளீயிட்டுள்ள அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவை,  தொழிலில் எதிர்நோக்கும் தடைகள், வேலைவாய்ப்பின்மைகள், விலைகள் அதிகரிப்பு போன்ற மக்களின் நியாயமான கேள்விகளுக்கு அரசின் பதில்கள் திருப்தி தருபவைகளாக இல்லை என்ற தன் கவலையை வெளியிட்டுள்ளது.
அரசுப் பணியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே எழுந்துள்ள முரண்பாடுகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நாட்டின் வளர்ச்சியும் மக்களின் அன்றாட வாழ்வும், குழந்தைகளின் கல்வியும் எனக்கூறும் மலாவித் திருஅவைத்தலைவர்கள்பொதுநலனை மனதில் கொண்டு இருதரப்பினரும் விட்டுக்கொடுத்து பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டியதன் தேவையை வலியுறுத்தியுள்ளனர்.


5. தமிழகத்தில் போலியோ இல்லை : அரசு அறிவிப்பு

பிப்.23,2013. தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் போலியோ நோயினால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து பிரச்சாரத்திற்காக, 2 இலட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தொடர் பிரச்சாரங்கள் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும், தமிழக நலத்துறை செயலர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பேருந்து நிலையம், விமான நிலையம், இரயில் நிலையம் ஆகியவற்றில் 1000க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று நாட்கள் இந்த முகாம்கள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


6. மருந்து சோதனை: ஓராண்டில் 436 இந்தியர் பலி

பிப்.23,2013. மருந்துகளைச் சோதனை செய்யும் ஆய்வில், ஓர் ஆண்டு மட்டும் 436 பேர் பலியாகி உள்ளனர் என்பது தெரியவந்துள்ள நிலையில், மருந்து சோதனைக்கு பயன்படுத்தப்பட்டு மேலும் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய நலத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய், இதயக் கோளாறு, பக்கவாதம் உள்ளிட்ட கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மற்றும் மருந்து ஒவ்வாமை அல்லது பல்வேறு நோய்களால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை நிர்வாகம் மருந்து சோதனைக்காகப் பயன்படுத்துவது உள்ளிட்டவையால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆசாத் தெரிவித்துள்ளார்.
இந்த மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 2011ம் ஆண்டு 436 பேரும், 2012ல் 668 பேரும் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் குலாம்நபி ஆசாத் மேலும் தெரிவித்துள்ளார்.


7. மகாராஷ்டிராவில் வறட்சி பாதிப்பால் 228 விவசாயிகள் தற்கொலை

பிப்.23,2013. இந்த ஆண்டு கடும் வறட்சியை தாக்குபிடிக்க முடியாமல், மகாராஷ்டிராவில் விதர்பா பகுதியில், 228 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில், இந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக, விதர்பா மண்டலத்தில், ஆறு மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது, இங்கு, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், ஜனவரி வரை, 228 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவரும், மத்திய விவசாயத்துறை அமைச்சருமான சரத்பவார், கூறினார். மகாராஷ்டிராவில், 2006ம் ஆண்டு விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை, 1,035 ஆக இருந்த நிலையில், விவசாயிகளின் மறுவாழ்விற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, 2011ம் ஆண்டு, விவசாயிகள் தற்கொலை, 485 ஆக குறைந்துள்ளது என அமைச்சர் சரத்பவார் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...