Wednesday, 20 February 2013

Catholic News in Tamil - 20/02/13


1. திருத்தந்தையின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஊடகங்களில் கர்தினால்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்

2. திருத்தந்தை உரோம் மறைமாவட்டத்தின் மீது கொண்டிருந்த சிறப்பான அன்புக்கு நன்றி தெரிவிக்க அழைக்கிறேன் - கர்தினால் Agostino Vallini

3. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் போராடும் திருஅவைக்கென தொடர்ந்து செபித்து வருவார் - கர்தினால் ரவாசி

4. திருத்தந்தை எடுத்துள்ள முடிவு திருஅவையின் நலனைக் கருதி எடுக்கப்பட்ட முடிவு - திருத்தந்தையின் அண்ணன்

5. வியட்நாம் ஆயர்கள் விடுத்துள்ள தவக்காலச் சுற்றறிக்கை

6. ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகள் தவக்காலத்தையொட்டி விடுத்துள்ள அறிக்கை

7. நம்பிக்கை ஆண்டில் பாகிஸ்தான் குழந்தைகள் வலிமை மிகுந்த நற்செய்திப் பணியாளர்களாக விளங்குவர்

8. ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் நினைவுச் சின்னத்தில் பிரித்தானிய பிரதமர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஊடகங்களில் கர்தினால்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்

பிப்.20,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முடிவைக் கேட்டு நான் கலங்கியபோதிலும், இந்த முடிவை அறிவித்ததன் வழியாக அவர் திருஅவை மீது கொண்டிருக்கும் ஆழமான அன்பையும், அவரது பணிவையும் அறிந்து உள்ளூர மகிழ்வடைகிறேன் என்று கர்தினால் Julián Herranz கூறினார்.
திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக பிப்ரவரி 11, கடந்த திங்களன்று திருத்தந்தை அறிவித்ததைத் தொடர்ந்து, கர்தினால்கள் பலரும் பல்வேறு ஊடகங்களில் தெரிவித்துள்ள கருத்துக்களைத் தொகுத்து, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano இச்செவ்வாயன்று கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது.
தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஒருவர் அறிவிப்பது உலக அரங்கிலும், திருஅவை வரலாற்றிலும் மிக, மிக அரிதாக நிகழும் ஒரு நிகழ்ச்சி என்பதைச் சுட்டிக் காட்டினார் கர்தினால் Herranz.
உலக மக்களின் பார்வையிலிருந்து விலகி, தன் வாழ்வை மறைவாகவும், செபத்திலும் கழிக்க விரும்புவதாக திருத்தந்தை அறிவித்திருப்பது அவரது ஆன்மீக வாழ்வின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது என்று கர்தினால் Jean-Louis Tauran கூறியுள்ளார்.
திருத்தந்தையின் அறிவிப்பு ஆழ்ந்த வருத்தத்தை உருவாக்கினாலும், "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே... என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்" என்று இயேசு கூறியுள்ள வார்த்தைகளின் பொருளை உணர்ந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக இருந்தது என்று கர்தினால் Angelo Comastri கூறியுள்ளார்.
திருஅவையின் தலைமைப் பொறுப்பு வெறும் அலங்காரப் பொருள் அல்ல, மாறாக, அது ஒருவரது முழு சக்தியையும் ஈடுபடுத்தவேண்டிய ஒரு பணி என்பதை திருத்தந்தையின் இந்த முடிவு சுட்டிக்காட்டுகிறது என்று வாஷிங்டன் பேராயர் கர்தினால் Donald Wuerl, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


2. திருத்தந்தை உரோம் மறைமாவட்டத்தின் மீது கொண்டிருந்த சிறப்பான அன்புக்கு நன்றி தெரிவிக்க அழைக்கிறேன் - கர்தினால் Agostino Vallini

பிப்.20,2013. திருஅவை மீதும், சிறப்பாக உரோம் மறைமாவட்டத்தின் மீதும் திருத்தந்தை கொண்டிருந்த சிறப்பான அன்புக்கு நமது நன்றியையும் அன்பையும் தெரிவிக்க உங்களை அழைக்கிறேன் என்று கர்தினால் Agostino Vallini கூறினார்.
பிப்ரவரி 27, வருகிற புதனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது இறுதி புதன் பொது மறைபோதகத்தை புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இறுதி மறைபோதகத்தில் உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கத்தோலிக்கர்களும் கலந்துகொள்ளுமாறு திருத்தந்தையின் சார்பாக உரோம் மறைமாவட்டத்தைக் கண்காணித்து வரும் கர்தினால் Vallini இச்செவ்வாயன்று அழைப்பு விடுத்துள்ளார்.
திருஅவை வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு தனிப்பட்ட சிறப்பு பெற்றது என்பதை எடுத்துரைத்த கர்தினால் Vallini, திருஅவைத் தலைமைப்பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும் 16ம் பெனடிக்ட் அவர்களுக்கும், புதியத் திருத்தந்தையின் தேர்வுக்கும் செபிக்கும்படி சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


3. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் போராடும் திருஅவைக்கென தொடர்ந்து செபித்து வருவார் - கர்தினால் ரவாசி

பிப்.20,2013. இஸ்ரயேல் மக்கள் போரில் ஈடுபட்டிருந்தபோது அவர்களின் தலைவர் மோசே மலைமீது கரங்களை விரித்து செபித்ததைப் போல் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் போராடும் திருஅவைக்கென தொடர்ந்து செபித்து வருவார் என்று கர்தினால் ஜியான்ப்ராங்கோ ரவாசி கூறினார்.
கடந்த ஞாயிறு மாலை முதல் வத்திக்கானில் உள்ள அனைத்து அதிகாரிகளும் திருத்தந்தையுடன் இணைந்து தவக்கால தியானத்தைத் துவக்கியபோது, அவர்களுக்கு துவக்க உரையாற்றிய கர்தினால் ரவாசி இவ்வாறு கூறினார்.
திருப்பாடல் செபங்களில் இறைவனின் முகமும், மனிதரின் முகமும் என்ற தலைப்பில் இவ்வாண்டு தியானத்தை வழங்கிவரும் கர்தினால் ரவாசி, ஆன்மீகப் பயிற்சிகள் என்று அழைக்கப்படும் தியானங்கள், படைப்பாற்றல் மிக்க பயிற்சிகளாகவும் அமையவேண்டும் என்று கூறினார்.
ஆன்மீகப் பயிற்சிகளின்போது ஒருவர் தன் ஆன்மாவை ஆய்வுசெய்து அங்குள்ள முறைகேடான ஈர்ப்புக்களைச் சரிசெய்யவேண்டும் என்று புனித லயோலா இஞ்ஞாசியார் கூறியதை கர்தினால் ரவாசி இத்தியானத்தின் துவக்கத்தில் எடுத்துரைத்தார்.
செபத்தில் அமைந்துள்ள நான்கு செயல்பாடுகளான சுவாசித்தல், எண்ணுதல், போரிடுதல், அன்புசெய்தல் என்பனவற்றைக் குறித்து கர்தினால் ரவாசி தன் உரையில் விளக்கினார். திருத்தந்தையும் வத்திக்கான் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ள இந்த ஆன்மீகப் பயிற்சிகள் வருகிற ஞாயிறு காலை நிறைவுறும்.


4. திருத்தந்தை எடுத்துள்ள முடிவு திருஅவையின் நலனைக் கருதி எடுக்கப்பட்ட முடிவு - திருத்தந்தையின் அண்ணன்

பிப்.20,2013. என் தம்பியாகிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கும் என்னைப் போல் வயது கூடிவருவது இயற்கையின் நியதி, எனவே அவர் எடுத்துள்ள முடிவு திருஅவையின் நலனைக் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்று திருத்தந்தையின் அண்ணன் பேரருள்தந்தை Georg Ratzinger கூறினார்.
திருத்தந்தை தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அவரது அண்ணன் அருள்தந்தை Ratzinger, அண்மையில் இஸ்பானிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வயது முதிர்ந்த காலத்தில் அமைதியைத் தேடுவது மனிதர்களின் இயற்கையே என்று கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எவ்விதம் மக்களால் நினைவுகூரப்படுவார் என்ற கேள்வி எழுந்தபோது, திருஅவையின் நம்பிக்கையை ஆழப்படுத்த தன் சக்தியை அதிகம் செலவிட்டவர் தன் தம்பி என்பதை மக்கள் நினைவு கூருவர் என்று கூறினார் அருள்தந்தை Ratzinger.
பொறுப்பிலிருந்து அவர் விலகினாலும், தொடர்ந்து தன் எண்ணங்களால் மக்களை இன்னும் அடைந்த வண்ணம் இருப்பார் என்றும் அருள்தந்தை Ratzinger மேலும் கூறினார்.


5. வியட்நாம் ஆயர்கள் விடுத்துள்ள தவக்காலச் சுற்றறிக்கை

பிப்.20,2013. துவங்கியிருக்கும் தவக்காலத்தில், நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்தும், மத நம்பிக்கையற்ற வாழ்விலிருந்தும் திரும்பி வருமாறு வியட்நாம் ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நடைபெறும் நம்பிக்கை ஆண்டை மையமாக்கி ஆயர்கள் விடுத்துள்ள இந்த சுற்றறிக்கையில், தன்னலத்தில் வேரூன்றியுள்ள நுகர்வுக் காலாச்சாரத்திலிருந்து மக்கள் விடுதலை அடையவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
அண்மையில் திருத்தந்தை தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியது கத்தோலிக்க மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது என்பதைக் குறிப்பிட்ட வியட்நாம் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Nguyen Van Nhon, திருத்தந்தையிடம் பணிவுப் பாடங்களைப் பயில வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தவக்காலம் பிறரன்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு சிறந்த காலம் என்பதை எடுத்துரைக்கும் ஆயர்களின் மடல், இத்தவக்காலம், உயிர்ப்புத் திருநாளையும், திருஅவையின் புதியத் தலைவரையும் எதிர்நோக்கியிருக்கும் காலம் என்றும் குறிப்பிடுகின்றனர்.


6. ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகள் தவக்காலத்தையொட்டி விடுத்துள்ள அறிக்கை

பிப்.20,2013. ஆப்ரிக்க மக்கள் இன்றைய உலகில் சந்தித்துவரும் சமுதாய, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களில் அக்கறை காட்டாமல், திருஅவை தனித்து இயங்க முடியாது என்று ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகள் அறிவித்துள்ளன.
அண்மையில் துவங்கியுள்ள தவக்காலத்தையொட்டி, இவ்விரு பேரவைகளும் இணைந்து இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கை "ஆப்ரிக்காவில் பொது நலமும், மக்களாட்சி நோக்கிய முயற்சிகளும்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் உரிமைகளையும், பொது நலனையும் மதிக்கும்படி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆப்ரிக்க ஆயர்களுக்கு அளித்த Africae Munus என்ற அப்போஸ்தலிக்க மறையுரையின் அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
அரசுத் தலைவர்கள் மற்றும் அரசு வட்டாரங்களில் நிலவும் ஊழலைக் குறித்தும், பன்னாட்டு நிறுவனங்கள் ஆப்ரிக்கக் கண்டத்தின் இயற்கைச் செல்வங்களை சீரழிப்பது குறித்தும் ஆயர்கள் தங்கள் கவலையை இவ்வறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.
மக்களின் நலனுக்காக அரசுகள் எடுக்கும் அனைத்து செயல் திட்டங்களிலும் திருஅவை முக்கிய பங்கேற்கும் என்றும் ஆயர்கள் அறிவித்துள்ளனர்.


7. நம்பிக்கை ஆண்டில் பாகிஸ்தான் குழந்தைகள் வலிமை மிகுந்த நற்செய்திப் பணியாளர்களாக விளங்குவர்

பிப்.20,2013. நடைபெற்றுவரும் நம்பிக்கை ஆண்டில் பாகிஸ்தான் குழந்தைகள் வலிமை மிகுந்த நற்செய்திப் பணியாளர்களாக விளங்குவர் என்று பாகிஸ்தான் அருள் பணியாளர் Francis Nadeem கூறினார்.
லாகூரில் உள்ள புனித யோசேப்பு ஆலயத்தில் "மறைபரப்புப்பணி குழந்தைப்பருவ நாள்" அண்மையில் கொண்டாடப்பட்டபோது, இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த அருள் பணியாளர் Nadeem, Fides செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு கூறினார்.
வசதி வாய்ப்புக்களை இழந்த குழந்தைகளுக்கும், மாற்றுத் திறனாளியான குழந்தைகளுக்கும் உதவிகள் செய்வதாக கத்தோலிக்கக் குழந்தைகள் இவ்விழாவின்போது எடுத்த வாக்குறுதி, நம்பிக்கை ஆண்டில் அவர்கள் ஆற்றக்கூடிய பணிகளுக்கு ஓர் உறுதி மொழிபோல் அமைந்தது என்று அருள் பணியாளர் Nadeem எடுத்துரைத்தார்.


8. ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் நினைவுச் சின்னத்தில் பிரித்தானிய பிரதமர்

பிப்.20,2013. ஜாலியன்வாலா பாக் (Jallianwala Bagh) படுகொலைகள் பிரித்தானிய வரலாற்றில் அவமானம் மிகுந்த பக்கம் என்றும், இத்தகைய வரலாறு இனி எப்போதும் இடம்பெறக்கூடாது என்றும் பிரித்தானிய பிரதமர் David Cameron கூறினார்.
இந்தியாவில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் Cameron, இப்பயணத்தின் இறுதி நாளான இப்புதனன்று, அமிர்தசரஸ் நகருக்குச் சென்றபோது, படுகொலை நிகழ்ந்த இடத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி ஜாலியன்வாலா பாக் எனுமிடத்தில் கூடியிருந்த மக்கள் மீது ஆங்கிலேயத் தளபதியின் ஆணைப்படி படைவீரர்கள் சுட்டதில் பல நூறு பேர் இறந்தனர். இந்தியர்களின் கண்ணோட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்தனர் என்று கூறப்பட்டவேளை, ஆங்கிலேயக் கணக்குப்படி, 379 பேரே இறந்தனர் என்று கூறப்பட்டது.
இந்த படுகொலையைக் குறித்து பல பிரித்தானியப் பிரதமர்கள் வருத்தம் தெரிவித்திருந்தாலும், பிரதமர் Cameron மட்டுமே இவ்விடத்தை பார்வையிட்ட முதல் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...