1. உரோம் குருக்களிடம் திருத்தந்தை : நான் எப்பொழுதும் உங்களுக்கு நெருக்கமாகவே இருப்பேன்
2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் விசுவாசிகளுடன் நிறைவேற்றிய இறுதித் திருப்பலி
3. மார்ச் மாதத்தின் மத்தியில் Conclave என்று சொல்லப்படும் கர்தினால்கள் அவை இடம்பெறலாம் - திருப்பீடப் பேச்சாளர்
4. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பெயரில் நடைபெற்ற துயர்துடைக்கும் பணிகள் குறித்து Missioவின் அறிக்கை
5. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையை ஆழமாக அன்பு செய்தார் - ஹாங்காங் கர்தினால்
6. வத்திக்கானுக்கும் இத்தாலிக்கும் இடையே ஒப்பந்தம்
7. கர்தினால் Filoniயின் இந்திய மேய்ப்புப்பணி பயணத்தில்...
8. இந்திய கத்தோலிக்கத் திருஅவையின் வளர்ச்சி எண்ணிக்கையில் மட்டுமல்ல, வேறு பல வழிகளிலும் வளர்ந்துள்ளது - கர்தினால் Filoni
9. Bahrain நாட்டில் அரேபிய அன்னை மரியா என்ற பெயரில் பேராலயம்
10. மதத் தலைவர்கள் வழியாக உலக அமைதியையும், பெண்களின் சமத்துவத்தையும் உறுதி செய்யமுடியும் - ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. உரோம் குருக்களிடம் திருத்தந்தை : நான் எப்பொழுதும் உங்களுக்கு நெருக்கமாகவே இருப்பேன்
பிப்.14,2013. திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியபின்னர், மறைந்ததோர் வாழ்வை மேற்கொண்டு, செப வாழ்வுக்கு என்னையே அர்ப்பணிக்க இருந்தாலும், நான் எப்பொழுதும் உங்களுக்கு நெருக்கமாகவே இருப்பேன், நீங்களும் அவ்வாறே இருப்பீர்கள் என நம்புகிறேன் என்றும், அனைவரின் செபத்திற்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும், உரோம் மறைமாவட்ட குருக்களிடம் இவ்வியாழனன்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில் உரோம் மறைமாவட்ட குருக்களைச் சந்திக்கும், உரோம் மறைமாவட்ட ஆயராகிய திருத்தந்தை, பாப்பிறைப் பணியைவிட்டு விலகுவதற்கு முன்னர், தனது மறைமாவட்ட குருக்களை மீண்டும் சந்திப்பதற்கு கிடைத்த வாய்ப்பை, சிறப்பான இறைபராமரிப்புச் செயல் எனக் குறிப்பிட்டார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் தான் கலந்து கொண்டது குறித்தும், அப்பொதுச்சங்கத்தின் தாக்கங்கள் குறித்தும் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, திருஅவைக்கும் உலகின் சிறந்த சக்திகளுக்கும் இடையே நல்ல உறவு தொடர்ந்து இடம்பெற வேண்டுமென்ற தனது ஆவலையும் வெளியிட்டார்.
2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் விசுவாசிகளுடன் நிறைவேற்றிய இறுதித் திருப்பலி
பிப்.14,2013. இறைவனிடம் திரும்புதல் நமது முயற்சியால் மட்டும் நடப்பதில்லை, இறைவன்
நம் இதயத்தை ஆழமாய் ஊடுருவி அசைக்கும்போது உருவாகும் அருளே நமது இதயத்தைக்
கிழிக்கும் ஆற்றலைத் தரும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
தவக்காலத்தின்
முதல் நாளன்று இடம்பெறும் திருநீற்றுப் புதன் திருப்பலியை இப்புதன் மாலை
புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நிறைவேற்றியத் திருத்தந்தை, "இதயத்தைக்
கிழித்துக் கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்" என்று
இறைவாக்கினர் யோவேல் விடுக்கும் அழைப்பு தவக்காலத்தைத் துவக்கி வைக்கிறது
என்று தன் மறையுரையின் துவக்கத்தில் கூறினார்.
திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக, கடந்த திங்களன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்ததையடுத்து, அவர் விசுவாசிகளுடன் நிறைவேற்றும் இறுதித் திருப்பலி திருநீற்றுப் புதன் திருப்பலியாக இருக்கும் என்ற காரணத்தால், மக்கள் பெருமளவில் பங்கேற்பர் என்ற அடிப்படையில், வழக்கமாக புனித சபினா பேராலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றும் திருநீற்றுப் புதன் திருப்பலி, இவ்வாண்டு புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.
இந்த மாற்றத்தைப்பற்றி தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டத் திருத்தந்தை, திருத்தூதர் பேதுருவின் கல்லறையைச் சுற்றிக் கூடியிருக்கும் அனைவரும் இணைந்து திருஅவைக்காகச் செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.
தவக்காலம், மனிதர்களின் தனிப்பட்ட மனமாற்றத்தை மட்டும் வலியுறுத்தும் காலம் அல்ல, மாறாக, திருஅவை
என்ற குடும்பம் முழுவதும் இறைவனிடம் திரும்பி வருவதற்கு வழங்கப்பட்டுள்ள
ஒரு காலம் என்பதைத் திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
தன்னலம், போட்டி
மனப்பான்மை என்ற எதிர்மறை நாட்டங்களால் உலகிற்கு நாம் வழங்கக்கூடிய
சாட்சிய வாழ்வு கேள்விக்குறியாகிறது என்பதை அனைவருமே உணர்ந்து, ஒன்றுபடவேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் காணப்படும் 'இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!' என்ற வார்த்தைகளை வலியுறுத்தியத் திருத்தந்தை, நமக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அருள்மிகுந்த வாய்ப்பை, இன்றே பயன்படுத்த வேண்டும் என்ற சவாலையும் விடுத்தார்.
மத்தேயு நற்செய்தியில் வழங்கப்பட்டுள்ள தர்மம் செய்தல், இறைவனிடம் வேண்டுதல், நோன்பு கடைபிடித்தல் ஆகிய முயற்சிகளைக் குறித்துப் பேசியத் திருத்தந்தை, தவக்காலத்தில்
மேற்கொள்ளக்கூடிய இந்த முயற்சிகளை மனிதரிடையே புகழைப் பெறுவதற்கு
மேற்கொள்வதில் பயனில்லை என்பதையும் விளக்கிக் கூறினார்.
திருப்பலியின்
இறுதியில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே
திருத்தந்தைக்குச் சிறப்பான முறையில் நன்றி பகர்ந்தார். இன்று மாலை எங்கள்
உள்ளங்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளன; தாங்கள் காட்டிய ஒளிமிக்க எடுத்துக்காட்டான வாழ்வுக்கு என்றும் நன்றி என்ற வார்த்தைகளுடன், அவர் நன்றியுரை அமைந்திருந்தது.
திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை பசிலிக்காவை விட்டு வெளியேறும்வரை மக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பியதுடன், “Viva il papa!” 'திருத்தந்தை வாழ்க' என்ற பாரம்பரிய வாழ்த்தொலியையும் தொடர்ந்து எழுப்பி வந்தனர்.
3. மார்ச் மாதத்தின் மத்தியில் Conclave என்று சொல்லப்படும் கர்தினால்கள் அவை இடம்பெறலாம் - திருப்பீடப் பேச்சாளர்
பிப்.14,2013. திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக சேர்ந்துவரும் Conclave என்று சொல்லப்படும் கர்தினால்கள் அவை, மார்ச் மாதத்தின் மத்தியில் இடம்பெறலாம் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
இப்புதனன்று செய்தியாளர்களைச் சந்தித்த இயேசு சபை அருள்தந்தை Lombardi, கர்தினால்களின் இச்சிறப்புக் கூட்டம்பற்றி குறிப்பிடுகையில், இந்த முடிவு கர்தினால்களின் கையில் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
Conclave குறித்து திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், மற்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இருவரும் ஒப்புதல் அளித்த திருஅவை சட்டத் திருத்தங்களின்படி, திருஅவையின் தலைமைப் பொறுப்பு காலியாவதைத் தொடர்ந்து 15 நாட்கள் கழித்து Conclave கூடவேண்டும்.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கர்தினால்கள் வத்திக்கானில் கூடுவதற்கு
ஏற்றவகையில் இந்த 15 நாட்கள் காலஅளவு குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 15ம் தேதியையொட்டி நடைபெறவிருக்கும் Conclave கூட்டத்தில், 117 கர்தினால்கள் பங்கேற்பர். இவர்களில் 67 பேர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் கர்தினால்களாக உயர்த்தப்பட்டவர்கள்.
1978ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களைத் தேர்ந்தெடுத்த Conclave, 3 நாட்கள் நடைபெற்றது என்பதும், 2005ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைத் தேர்ந்தெடுத்த Conclave, 2 நாட்களே நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
4. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பெயரில் நடைபெற்ற துயர்துடைக்கும் பணிகள் குறித்து Missioவின் அறிக்கை
பிப்.14,2013. திருத்தந்தை தலைமைப் பொறுப்பை ஏற்றபோது அவருக்கு வயது 78 ஆக இருந்தாலும், எதிர்பார்ப்புக்களையெல்லாம் தாண்டி, அவர் இத்தாலியிலும், உலகின் பல நாடுகளிலும் 30 அப்போஸ்தலிக்கப் பயணங்களை மேற்கொண்டது வியப்பைத் தருகிறது என்று Missio கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு கூறியுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆற்றிவந்த பணிகளைப் பற்றியும், சிறப்பாக, அவர் பெயரில் நடைபெற்ற துயர்துடைக்கும் பணிகள் குறித்தும் Missio மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன.
திருஅவையின் உலகளாவிய பிறரன்புப் பணிகளுக்கெனச் செயல்படும் Missio வழியாக, திருத்தந்தையின் பெயரால், 160 கோடி டாலர்கள், அதாவது, 8000 கோடி ரூபாய் அளவுக்கு உதவிகள் கடந்த ஏழு ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன.
மறைபரப்பு ஞாயிறுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள செய்திகளைக் குறிப்பிடும் இவ்வறிக்கை, மறைபணியில்
ஈடுபடுவதென்பது தேவையில் உள்ள வறியோருக்குச் சிறப்பாகப் பணியாற்றுவது
என்பதே திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மையக் கருத்தாக
இருந்துவந்துள்ளது என்று கூறுகிறது.
5. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையை ஆழமாக அன்பு செய்தார் - ஹாங்காங் கர்தினால்
பிப்.14,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையை ஆழமாக அன்பு செய்ததால், மேய்ப்புப்பணிக்கு முதலிடம் வழங்கி, தன் முழு இதயத்துடனும், சக்தியுடனும் உழைத்தார் என்று ஹாங்காங் கர்தினால் John Tong கூறினார்.
திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் திருத்தந்தை அறிவித்தததையடுத்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்த கர்தினால் John Tong, இந்த முடிவை அறிவிப்பதற்கு முந்திய நாள், பிப்ரவரி 10ம் தேதி சீன மக்களுக்கு அவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்னதை, சிறப்பாக நினைவு கூர்ந்தார்.
தன் சொல், செயல் என்பவற்றை மட்டும் நம்பியிராமல், செபத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் திருத்தந்தை என்பதை அவர் எடுத்துள்ள இந்த முடிவு நமக்குக் கூறுகிறது என்றுரைத்த கர்தினால் John Tong, செபத்தின் வல்லமையால், நாம் திருஅவையின் அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுக்க இறைவன் துணைபுரியட்டும் என்றுரைத்தார்.
6. வத்திக்கானுக்கும் இத்தாலிக்கும் இடையே ஒப்பந்தம்
பிப்.14,2013.
வத்திக்கான் நாட்டிற்கு அருகேயிருக்கும் காஸ்தல் ஆஞ்சலோ என்ற தொன்மை
கலைச்சின்னத்திற்கும் வத்திக்கான் நாட்டிற்கும் இடையேயுள்ள இரகசியப்
பாதையைச் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கென விடுவது குறித்த ஒப்பந்தம்
இத்தாலிக்கும் வத்திக்கானுக்கும் இடையே இவ்வியாழனன்று கையெழுத்தாகியது.
வத்திக்கான் நகர் தாக்கப்பட்டால், திருத்தந்தையர்கள்
தப்பி காஸ்தல் ஆஞ்சலோ மாளிகையில் தஞ்சம் புகுவதற்கென 1277ம் ஆண்டு
திருத்தந்தை 3ம் நிக்கொலஸ் அவர்களால் கட்டப்பட்ட 800 மீட்டர் நீளமுடைய இந்த
இரகசியப் பாதையைச் சீரமைப்பதற்கென ஏற்கனவே 1991ம் ஆண்டு இத்தாலிக்கும்
வத்திக்கானுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் தற்போது மீண்டும்
புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் வத்திக்கான் சார்பில் வத்திக்கான் நாட்டு நிர்வாக அவை தலைவர் கர்தினால் Giuseppe Bertello மற்றும் இத்தாலிய அரசு சார்பில் அமைச்சர் Lorenzo Ornaghi ஆகியோர் கையெழுத்திட்டனர். இவர்களுடன் வத்திக்கான் நாட்டு நிர்வாக அவை பொதுச்செயலர் ஆயர் Giuseppe Sciacca தலைமையினாலான குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டது.
வத்திக்கான் நகர் நிர்வாக அவையின் பொதுச்செயலராக இருக்கும் ஆயர் சியாக்கா, திருத்தந்தை இல்லாத காலங்களில், அடுத்த
திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும்வரை திருப்பீட நிர்வாக பொறுப்பைக்
கவனிப்பவருக்கு முதன்மை ஆலோசகராக இருக்குமாறு இப்புதனன்று திருத்தந்தை 16ம்
பெனடிக்டால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
7. கர்தினால் Filoniயின் இந்திய மேய்ப்புப்பணி பயணத்தில்...
பிப்.14,2013. புதியதொரு முயற்சி எதுவுமே ஆர்வத்தையும், சக்தியையும் தருகின்றது; இந்த ஆர்வமும், சக்தியும் மேய்ப்புப்பணியில் செயல்பாடுகளாக மாறவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பிப்ரவரி
9ம் தேதி முதல் எட்டு நாட்களாய் இந்தியாவில் மேய்ப்புப்பணி பயணத்தை
மேற்கொண்டுள்ள நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni, திருத்தந்தை
16ம் பெனடிக்ட் அவர்களால் கடந்த மேமாதம் உருவாக்கப்பட்ட பரிதாபாத் என்ற
புதிய சீரோ மலபார் ரீதி மறைமாவட்டத்தின் பங்குதளம் ஒன்றை, இவ்வியாழன் மாலை துவக்கிவைத்தபோது இவ்வாறு கூறினார்.
திருத்தூதர்
புனித தோமா இந்தியாவுக்கு வருகை தந்த காலத்திலிருந்து கிறிஸ்தவ
விசுவாசத்தை மேற்கொண்டுள்ள சீரோ மலபார் ரீதி திருஅவையின் பாரம்பரியத்தைக்
குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Filoni, திருத்தூதர்களின் ஆர்வம் இன்றும் நம்மைத் தூண்டும் சக்தியாக விளங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
புதிய பங்குக் கோவிலின் அடித்தளம் நாட்டப்படும் நேரத்தில், நாம் ஒவ்வொருவரும் வாழும் கோவில்கள் என்பதையும் இவ்விழா நமக்கு நினைவுபடுத்துகிறது என்று எடுத்துரைத்தார் கர்தினால் Filoni.
8. இந்திய கத்தோலிக்கத் திருஅவையின் வளர்ச்சி எண்ணிக்கையில் மட்டுமல்ல, வேறு பல வழிகளிலும் வளர்ந்துள்ளது - கர்தினால் Filoni
பிப்.14,2013. கடந்த 130 ஆண்டுகளாக இந்திய கத்தோலிக்கத் திருஅவையின் வளர்ச்சி எண்ணிக்கையில் மட்டுமல்ல, வேறு பல புலங்களிலும் காணக்கூடிய வழிகளில் வளர்ந்திருப்பதைக் காண முடிகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி கர்தினால் Fernando Filoni கூறினார்.
கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் தன் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டுவரும் கர்தினால் Filoni, இவ்வியாழன் மாலை இந்தியாவின் திருப்பீடத் தூதரகத்தில் இந்தியாவின் கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களைச் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
1884ம் ஆண்டு திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் உருவாக்கப்பட்ட கிழக்கிந்திய திருப்பீடத் தூதரகம் துவங்கி, இந்தியத் திருஅவையின் வரலாற்றை நினைவு கூர்ந்த கர்தினால் Filoni, கடந்த 130 ஆண்டுகளாக இத்திருஅவையின் வளர்ச்சி குறித்து தன் மகிழ்வை வெளிப்படுத்தினார்.
இந்தியத் திருஅவையில் இறை அழைத்தல் வளர்ந்துவருவதைச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Filoni, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியில் இந்தியத் திருஅவை எடுத்துக்காட்டாக விளங்கும் நிலையில் உள்ளது என்றும் கூறினார்.
இந்தியத் திருஅவை கல்வி, நலப்பணி, ஆகியத் துறைகளில் இந்திய சமுதாயத்திற்கு இதுவரை ஆற்றிவந்துள்ள சேவைகளைப் போலவே, இன்னும் பல்வேறு துறைகளில் சிறந்த பணிகளை அளிக்க வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார் கர்தினால் Filoni.
9. Bahrain நாட்டில் அரேபிய அன்னை மரியா என்ற பெயரில் பேராலயம்
பிப்.14,2013. Bahrain நாட்டில் மரியன்னையின் பெயரில் புதிய ஆலயம் ஒன்று அமைக்கப்படும் என்றும், இவ்வாலயம் அமைவதற்கு Conclave அரசு இடம் வழங்கியுள்ளது என்றும் வட அரேபிய அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Camillo Ballin கூறினார்.
Bahrain மன்னர் Hamad bin Issa al-Khalifa 9000 சதுர மீட்டர்கள் பரப்பளவு கொண்ட ஒரு நிலத்தை அன்பளிப்பாக வழங்கியதைத் தொடர்ந்து, அவ்விடத்தில் அரேபிய அன்னை மரியா என்ற பெயரில் பேராலயம் ஒன்று நிறுவப்படும் என்று ஆயர் Ballin அறிவித்துள்ளார்.
Bahrain அரசுக்கும் கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே இந்த ஒப்பந்தம் இப்புதனன்று கையெழுத்திடப்பட்டது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆயர் அவர்களுக்கு இச்செய்தி வந்து சேர்ந்த நாள், பிப்ரவரி 11, அதாவது லூர்து அன்னை மரியாவின் திருநாள் என்பதை ஆயர் Ballin, Fides செய்திக்கு அளித்த பேட்டியில் மகிழ்வுடன் தெரிவித்தார்.
10. மதத் தலைவர்கள் வழியாக உலக அமைதியையும், பெண்களின் சமத்துவத்தையும் உறுதி செய்யமுடியும் - ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்
பிப்.14,2013. மதத் தலைவர்கள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதால், அவர்கள் வழியாக உலக அமைதியையும், பெண்களின் சமத்துவத்தையும் உறுதி செய்யமுடியும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
இருபால் சமத்துவமும், பெண்களின்
முன்னேற்றமும் என்ற தலைப்பில் இச்செவ்வாயன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற
ஒரு கருத்தரங்கிற்கு பான் கி மூன் அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறினார்.
மத அடிப்படையில் உருவாகும் பல அமைப்புக்களில் பெண்களின் பங்கேற்பு அதிகம் இருப்பதால், இந்த அமைப்புக்களை வழிநடத்தும் தலைவர்கள் பெண்களுக்கு வழங்கப்படவேண்டிய உரிமைகளையும், சமத்துவத்தையும் குறித்து வலியுறுத்த வேண்டும் என்று பான் கி மூன் தன் செய்தியில் கேட்டுக்கொண்டார்.
உலக பல்சமய ஒருங்கிணைப்பு வாரத்தின் ஓர் அங்கமாக, இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில், ஐ.நா. பொதுச் செயலரின் செய்தியை ஐ.நா. உயர் அதிகாரி லக்ஷ்மி பூரி வழங்கினார்.
No comments:
Post a Comment