Sunday 17 February 2013

Catholic News in Tmail - 15/02/13


1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், குவாத்தமாலா அரசுத்தலைவர் சந்திப்பு

2. திருத்தந்தை : IOR நிறுவனத்தைக் கண்காணிக்கும் கர்தினால்கள் குழுவில் மாற்றம்

3. திருத்தந்தை பாப்பிறைப் பதவியை, அதிகாரமாகப் பார்க்காமல் அதை ஒரு மறைப்பணியாகவே நோக்கி வந்தார், அருள்தந்தை லொம்பார்தி

4. நிக்கராகுவா ஆயர்கள் : திருத்தந்தைக்காக 40 மணிநேரச் செபங்கள்

5. இஸ்ரேல் அரசுத்தலைவர் : ஞானத்திற்கு முதுமையே கிடையாது

6. கென்யாவில் அமைதியான வழிகளில் தேர்தல்கள் இடம்பெறுமாறு ஆயர்கள் அழைப்பு

7. சிரியாவில் இரண்டு குருக்கள் கடத்தப்பட்டுள்ளனர்

8. மரண தண்டனை நிறுத்தப்படுமாறு இந்தியக் கிறிஸ்தவர்கள் அழைப்பு

9. சென்னையில் சுற்றுச்சூழல் மாநாடு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், குவாத்தமாலா அரசுத்தலைவர் சந்திப்பு

பிப்.16,2013. குவாத்தமாலா அரசுத்தலைவர் Otto Fernando Pérez Molinaஐ இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் குவாத்தமாலா அரசுத்தலைவர் Pérez Molina.
திருப்பீடத்துக்கும், குவாத்தமாலா நாட்டுக்கும் இடையே நல்லுறவுகள் இருப்பது குறித்து இருதரப்பினரும் இச்சந்திப்பில் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இன்னும், குவாத்தமாலா கத்தோலிக்கத் திருஅவை, அந்நாட்டின் வளர்ச்சிக்கு, குறிப்பாக, கல்விக்கும், மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களை ஊக்குவிப்பதற்கும் ஆற்றிவரும் சேவைகளுக்கு நன்றி தெரிவித்தார் அரசுத்தலைவர்.
கத்தோலிக்கத் திருஅவையின் சமூக மற்றும் பிறரன்பு நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக, குவாத்தமாலா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டபோது தலத்திருஅவை ஆற்றிய பிறரன்புச் செயல்களுக்குத் தனது பாராட்டையும் அவர் தெரிவித்தார்.
ஏழ்மை, போதைப்பொருள், திட்டமிட்டக் குற்றக்கும்பல்கள் ஆகியவற்றை ஒழிப்பதில் இவ்விரு தரப்பினரின் ஒத்துழைப்பு வருங்காலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கையும் இச்சந்திப்புக்களில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆயர்கள் திருத்தந்தையைச் சந்திக்கும் “ad Limina” சந்திப்பையொட்டி, இத்தாலியின் லொம்பார்தியா மாநிலத்தின் 13 ஆயர்களை இச்சனிக்கிழமையன்று சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். மிலான் பேராயர் கர்தினால் Angelo Scola அவர்களின் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.


2. திருத்தந்தை : IOR நிறுவனத்தைக் கண்காணிக்கும் கர்தினால்கள் குழுவில் மாற்றம்

பிப்.16,2013. IOR என்ற திருப்பீடச் சமயப் பணிகள் நிதி நிறுவனத்தைக் கண்காணிக்கும் கர்தினால்கள் குழுவை இச்சனிக்கிழமையன்று புதுப்பித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கான் வங்கி எனப் பரவலாக அழைக்கப்படும் IOR நிறுவனத்தைக் கண்காணிக்கும் புதிய கர்தினால்கள் குழு, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அவர்களைத் தலைவராகக் கொண்டு செயல்படும். இக்குழுவில், திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, பிரேசிலின் São Paulo பேராயர் கர்தினால் Odilo P. Scherer, இந்தியாவின் இராஞ்சிப் பேராயர் கர்தினால் Telesphore P. Toppo, A.P.S.A என்ற திருப்பீட சொத்து நிர்வாகத்துறையின்  தலைவர் கர்தினால் Domenico Calcagno ஆகிய நால்வரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்கர்தினால்கள் குழுவில் ஏற்கனவே இருந்த A.I.F நிறுவனத் தலைவர் கர்தினால் Attilio Nicoraவுக்குப் பதிலாக  கர்தினால் Domenico Calcagno நியமிக்கப்பட்டுள்ளார்.
I.O.R. நிறுவனத்தின் மேற்பார்வைக் குழுவின் புதிய தலைவராக, ஜெர்மன் நாட்டு வழக்கறிஞர் Ernst Freiherr von Freyberg என்பவரை கர்தினால்கள் குழு இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்தது.
இப்பதவிக்கென பரிந்துரைக்கப்பட்ட ஏறக்குறைய 40 பேரின் தொழில் மற்றும் அறநெறி வாழ்வு குறித்து, பல மாதங்களாகத் தீர ஆராய்ந்த பின்னரே Ernst von Freyberg நியமிக்கப்பட்டுள்ளார் என்று திருப்பீடச் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.


3. திருத்தந்தை பாப்பிறைப் பதவியை, அதிகாரமாகப் பார்க்காமல் அதை ஒரு மறைப்பணியாகவே நோக்கி வந்தார், அருள்தந்தை லொம்பார்தி

பிப்.16,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தான் வகித்துவந்த பாப்பிறைப் பதவியை, அதிகாரமாகப் பார்க்காமல் அதை ஒரு மறைப்பணியாகவே நோக்கி வந்தார் என்று திருப்பீடச் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
திருத்தந்தை தனது பாப்பிறைப் பணியைத் தொடங்கியபோது, ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் ஒரு தாழ்மையான பணியாள் என்று தன்னை அவர் விவரித்தது போலித் தாழ்ச்சி அல்ல என்றுரைத்த அருள்தந்தை லொம்பார்தி, வயதான காலத்தில் எதிர்பாராதவிதமாகத் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பெரும்பணியை நன்றாகச் செய்வதற்கு நல்ல உடல்நலம் தேவை என்பதை திருத்தந்தை உணர்ந்திருந்தார் என்றும் கூறினார்.
இம்மாதம் 28ம் தேதியோடு பதவி விலகுவதாகத் திருத்தந்தை அறிவித்திருப்பது, விடுதலை உணர்வில் நம்பிக்கை வைக்கும் மற்றும் கடவுளின் பிரசன்னத்தில் வாழும் ஒரு மனிதரின் வியக்கத்தக்க மனித மற்றும் கிறிஸ்தவ ஞானச் செயல்களில் ஒன்று என்றும் கூறினார் அவர்.
திருஅவையும் உலகும் இன்று எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமல் திருத்தந்தை பதவி விலகுகிறார் என்று சிலர் நினைப்பதுபோல் அல்ல, மாறாக, முழுவதும் பாராட்டுக்குரிய இத்தகைய தீர்மானத்தை எடுப்பதற்கு மிகுந்த சக்தி தேவை என்றும் அவர் கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த இக்கட்டான காலத்தில் நம்மைக் கைவிடவில்லை, ஆனால், திருஅவை தன்னையும், பேதுருவின் புதிய வழித்தோன்றலையும் நம்பிக்கையோடு தூயஆவியிடம் அர்ப்பணிக்குமாறு திருத்தந்தை நமக்கு அழைப்பு விடுக்கின்றார் என்று கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.


4. நிக்கராகுவா ஆயர்கள் : திருத்தந்தைக்காக 40 மணிநேரச் செபங்கள்

பிப்.16,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது பாப்பிறைப் பதவியிலிருந்து விலக இருக்கும்வேளை, அவருக்காக 40 மணிநேரங்கள் தொடர் செபங்களை நடத்தும் நிக்கராகுவா மக்களுடன் உலகினரும் இணையுமாறு கேட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
தனது பாப்பிறைப் பணியை நிறைவுசெய்யவிருக்கும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் புதிய திருத்தந்தைக்காகத் தூயஆவியிடம் இச்செப வழிபாடுகளில் விண்ணப்பங்கள் எழுப்பப்படும் என ஆயர்கள் கூறியுள்ளனர்.
தனது உடல்நிலையை ஏற்றுக்கொண்டு பதவி விலகும் திருத்தந்தையின் தாழ்ச்சியையும் துணிச்சலையும் வரலாறு என்றும் நினைவுகூரும் ஒரு திருத்தந்தையாக இவர் இருப்பார் என்றும் நிக்கராகுவா ஆயர்கள் கூறியுள்ளனர்.


5. இஸ்ரேல் அரசுத்தலைவர் : ஞானத்திற்கு முதுமையே கிடையாது

பிப்.16,2013. திருத்தந்தையின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் அரசுத்தலைவர் Shimon Peres, திருத்தந்தையின் பாப்பிறைப் பணிக்காலச் செயல்கள் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், திருத்தந்தை ஓர் ஆழமான சிந்தனையாளர் என்று கூறியுள்ளார்.  
உடல் முதுமையை அடையலாம், ஆனால் ஞானத்திற்கு முதுமையே கிடையாது என்றுரைத்துள்ள இஸ்ரேல் அரசுத்தலைவர் Shimon Peres, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அமைதிக்கும் மனித சமுதாயத்துக்கும் தன்னை அர்ப்பணித்திருந்தவர் என்று பாராட்டியுள்ளார்.
உரோமையிலுள்ள பெரிய யூதத் தொழுகைக்கூடத்துக்குத் திருத்தந்தை சென்றபோது நட்புணர்வையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார் எனவும் கூறிய இஸ்ரேல் அரசுத்தலைவர், திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வரலாற்றின் மாற்றங்களை நன்றாகப் புரிந்துகொண்டுள்ள ஞானமிக்க மனிதர் என்றும் பாராட்டியுள்ளார்.   


6. கென்யாவில் அமைதியான வழிகளில் தேர்தல்கள் இடம்பெறுமாறு ஆயர்கள் அழைப்பு

பிப்.16,2013. கென்யாவில் விரைவில் நடைபெறவிருக்கின்ற தேர்தல்கள் அமைதியான வழிகளில் இடம்பெறும் என்பதற்கு அரசியல்வாதிகள் உறுதி வழங்குமாறு கேட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
ஒன்றிணைந்த மற்றும் அமைதியான கென்யா, நான் பார்க்க விரும்பும் மாற்றம் என்ற விருதுவாக்குடன் தவக்கால நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் கென்ய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் பேராயர் Zacchaeus Okoth, கென்யாவில் தேர்தல்கள் அமைதியாக இடம்பெற வேண்டியது முக்கியம் என்று கூறினார்.
கென்யாவில் 2007ம் ஆண்டு டிசம்பரில் தேர்தலுக்குப் பின்னர் தொடங்கிய வன்முறையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் Okoth, கென்யாவில் இனிமேல் இரத்தம் சிந்துதலே இடம்பெறக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.


7. சிரியாவில் இரண்டு குருக்கள் கடத்தப்பட்டுள்ளனர்

பிப்.16,2013. சிரியாவில் ஓர் அர்மேனியக் கத்தோலிக்கக் குரு, ஒரு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் குரு என இருவர் அந்நாட்டுப் புரட்சிப் படைவீரர்களால் கடத்தப்பட்டுள்ளனர் என, அலெப்போவின் அர்மேனிய கத்தோலிக்கப் பேராயர் Boutros Marayati கூறினார்.
அலெப்போவிலிருந்து தமாஸ்குச் செல்லும் சாலையில் வாகனத்தில் இவ்விரு குருக்களும் ஆயுதம் ஏந்திய மனிதர்களால் கடத்தப்பட்டுள்ளனர் என, பேராயர் Marayati மேலும் கூறினார்.
இந்தக் கடத்தலுக்கான காரணம் தெரியவில்லை என்றும், கடத்தியவர்கள் 1 இலட்சத்து 60 ஆயிரம் யூரோக்களைப் பிணையல் தொகையாகக் கேட்பதாக வதந்திகள் வெளியாகியுள்ளன என்றும் பேராயர் Marayati கூறினார்.

   
8. மரண தண்டனை நிறுத்தப்படுமாறு இந்தியக் கிறிஸ்தவர்கள் அழைப்பு

பிப்.16,2013. இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் 1,455 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளவேளை, மனித வாழ்வு புனிதம் நிறைந்தது என்று சொல்லி, இத்தண்டனை முற்றிலும் நிறுத்தப்படுமாறு இந்தியக் கத்தோலிக்க அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கிய Afzal Guruக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து ஃபிதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய, CSF என்ற இந்திய கத்தோலிக்கப் பொதுநிலையினர் அமைப்பின் தலைவர் ஜோசப் டயஸ், இந்தியாவில் மரணதண்டனைகள் முற்றிலுமாக நிறுத்தப்படுமாறு கேட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையில் அண்மையில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 110 நாடுகள் மரணதண்டனைகள் முற்றிலும் நிறுத்தப்படுமாறு அழைப்புவிடுத்தன என்றும், இந்தியா உட்பட 39 நாடுகள் மரணதண்டனைக்கு ஆதரவு தெரிவித்தன எனவும் டயஸ் தெரிவித்தார்.
2001க்கும் 2011ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் 1,455 பேருக்கு மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் கர்நாடகாவிலும் முறையே 95, உத்தரபிரதேசத்தில் 370, பீஹாரில் 132, மகராஷ்டிராவில் 125, மத்திய பிரதேசத்தில் 87, ஜார்க்கண்டில் 81 என மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 


9. சென்னையில் சுற்றுச்சூழல் மாநாடு

பிப்.16,2013. சுற்றுச்சூழல் அமைச்சர்களின் 14வது ஒருங்கிணைப்புக் கூட்டம் சென்னையில் இச்சனிக்கிழமை காலையில் தொடங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சீனா, பிரேசில், பூட்டான், அர்ஜென்டினா, பியூஜி தீவுகள், நாரு, கத்தார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
பருவநிலை மாறுதல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றது.
சென்னையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தோகா மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி விவாதிக்கப்படுவதாக ஊடகங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment