1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையின் தலைமைப் பொறுப்பில் செலவிடவிருக்கும் இறுதி நாட்கள்
2. இந்தியாவில் பிப்ரவரி 22 திருத்தந்தைக்கென செபிக்கும் நாள்
3. பன்னாட்டுப் பத்திரிக்கையாளர்களுக்கு வத்திக்கானுக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பான சுற்றுலா
4. காரித்தாஸ் பணிகளுக்கு இஸ்பானிய ஆயர்கள் பேரவை வழங்கியுள்ள 60 இலட்சம் யூரோக்கள்
5. ஐ.நா. மனித உரிமைகள் அவையின் பரிந்துரைகளை இலங்கை அரசு தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் - மன்னாரு ஆயர்
6. Libreville அமைதி ஒப்பந்தம் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் முற்றிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் - ஆப்ரிக்க ஆயர்கள்
7. Ulema இஸ்லாமிய அமைப்புடன் பாகிஸ்தான் அரசு நல்லுறவை வளர்த்திருப்பது நாட்டுக்கு நல்லது – பாகிஸ்தான் அமைச்சர்
8. சிரியாவில் தொடர்ந்துவரும் போரினால் மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குழந்தைகளே - UNICEFன் தலைவர்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையின் தலைமைப் பொறுப்பில் செலவிடவிருக்கும் இறுதி நாட்கள்
பிப்.22,2013. திருஅவையின் தலைமைப் பொறுப்பில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் செலவிடவிருக்கும் இறுதி நாட்களைக் குறித்த விவரங்களை, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை Federico Lombardi செய்தியாளர்களிடம் இவ்வியாழனன்று வெளியிட்டார்.
தற்போது வத்திக்கான் அதிகாரிகளுடன் ஒரு வாரமாக தவக்கால தியானத்தில் ஈடுபட்டுள்ள திருத்தந்தை, இச்சனிக்கிழமையன்று தன்னுடன் தியானம் செய்வோருக்கு உரை ஒன்றை வழங்குவார் என்றும், அதன்பின் அதேநாள் அவர் இத்தாலிய அரசுத் தலைவர் Giorgio Napolitano அவர்களைச் சந்திப்பார் என்றும் அருள்தந்தை Lombardi அறிவித்தார்.
பிப்ரவரி 24, ஞாயிறன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கும் இறுதி நண்பகல் மூவேளை செப உரை நிகழும். பிப்ரவரி 27, வருகிற புதனன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் அவர் வழங்கும் இறுதி புதன் பொது மறைபோதகம் வழக்கமான மறைபோதக முறையிலேயே அமையும்.
திருத்தந்தை வத்திக்கானில் செலவிடும் இறுதி நாளான பிப்ரவரி 28, வியாழனன்று அவர் வத்திக்கானில் தற்போது தங்கியுள்ள கர்தினால்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்திப்பார் என்றும், அவர்களுக்கு உரை எதுவும் வழங்கப்போவதில்லை எனவும் அருள்தந்தை Lombardi தெளிவுபடுத்தினார்.
வியாழன்
மாலை 5 மணிக்கு திருத்தந்தை காஸ்தல் கந்தோல்ஃபோவுக்குப் புறப்படுவார்.
அவரை அங்கு வரவேற்க அந்நகர மேயர் உட்பட பல உயர் அதிகாரிகள் காத்திருப்பர்.
பிப்ரவரி 28ம் தேதி இரவு எட்டு மணிக்கு திருஅவையின் தலைமைப் பீடம் காலியான பிறகு, கர்தினால்கள் கூடி Conclave என்ற சிறப்பு அவை துவங்கும் நாள் குறித்து தீர்மானம் செய்வர் என்றும் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Lombardi கூட்டத்தின் இறுதியில் தெளிவுபடுத்தினார்.
2. இந்தியாவில் பிப்ரவரி 22 திருத்தந்தைக்கென செபிக்கும் நாள்
பிப்.22,2013. தன் தலைமைப் பொறுப்பைத் துறக்கவிருக்கும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கும், புதிதாகத் தேர்ந்தேடுக்கப்படவிருக்கும் திருத்தந்தைக்காகவும் பிப்ரவரி 22, இவ்வெள்ளியன்று
கொண்டாடப்பட்ட புனித பேதுருவின் தலைமைப்பீடத் திருநாளன்று சிறப்பான
முறையில் செபிக்கும்படி இந்திய ஆயர்கள் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருத்தந்தையின் அறிவிப்பு நம்மை அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் ஆழ்த்தினாலும், அவரது எட்டு ஆண்டுகாலச் சேவையை இறைவன் ஆசீர்வதிக்குமாறு வேண்டிக்கொள்வது நமது கடமை என்று கர்தினால் Gracias இப்புதனன்று வெளியிட்ட மடலில் குறிப்பிட்டுள்ளார்.
"நான் எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறிய இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு, இறை ஆவியாரின் தூண்டுதலோடு, கர்தினால்களின் Conclave சிறப்பு அவை அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று செபிக்குமாறு கர்தினால் Gracias அழைப்பு விடுத்துள்ளார்.
பிப்ரவரி
22ம் தேதியோ அல்லது மக்களுக்கு வசதியான ஒரு நாளிலோ அனைவரும் ஒன்று கூடி
நற்கருணை ஆண்டவர் முன் செபங்களை எழுப்புமாறு கர்தினால் Gracias அவர்களின் மடல் அழைப்பு விடுக்கிறது.
3. பன்னாட்டுப் பத்திரிக்கையாளர்களுக்கு வத்திக்கானுக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பான சுற்றுலா
பிப்.22,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் பிப்ரவரி 11ம் தேதி தெரிவித்த முடிவையடுத்து, தொடர்ந்து பத்து நாட்களுக்கும் மேலாக, உலக மக்களுக்கு செய்திகளை வழங்கிவரும் பன்னாட்டுப் பத்திரிக்கையாளர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கு திருப்பீட பத்திரிகை அலுவலகமும், சமூகத் தொடர்பு அவையும் இணைந்து வத்திக்கானுக்குள் ஒரு சிறப்பான சுற்றுலாவை இப்புதனன்று ஏற்பாடு செய்திருந்தது.
புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் தங்கவிருக்கும் புனித மார்த்தா இல்லத்தையும், திருத்தந்தை
16ம் பெனடிக்ட் தன் மறைந்த வாழ்வைத் துவங்கவிருக்கும் திருஅவையின் அன்னை
மரியா துறவு மடத்தையும் பத்திரிக்கையாளர்கள் பார்வையிட்டனர்.
Conclave கர்தினால்கள் அவை நடைபெறும் Sistine சிற்றாலயத்திற்கு அருகே அமைந்துள்ள புனித மார்த்தா இல்லம், திருத்தந்தை
இரண்டாம் ஜான்பால் அவர்கள் பதவியில் இருந்தபோது கட்டப்பட்டது. இந்த
இல்லத்தைச் சுற்றி மின்காந்த பாதுகாப்பு வளையம் அமைந்துள்ளது. Conclave அவை
நடைபெறும் நேரத்தில் கர்தினால்களுக்கும் வெளி உலகிற்கும் எவ்வித தொடர்பும்
இல்லாமல் இருக்கும்வண்ணம் இந்தப் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
புனித
பேதுரு பசிலிக்காப் பேராலயத்திற்குப் பின்புறம் உள்ள அமைதியான ஒரு
பூங்காவில் அமைந்துள்ள வத்திக்கான் வானொலியின் முக்கிய அலுவலகத்தின்
அருகில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தங்கப்போகும் துறவு மடம் அமைந்துள்ளது.
4. காரித்தாஸ் பணிகளுக்கு இஸ்பானிய ஆயர்கள் பேரவை வழங்கியுள்ள 60 இலட்சம் யூரோக்கள்
பிப்.22,2013. கடந்த ஆண்டு காரித்தாஸ் பணிகளுக்கு 60 இலட்சம் யூரோக்கள், அதாவது, 43 கோடியே 20 இலட்சம் ரூபாய், அளித்துள்ளதாக இஸ்பானிய ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.
2007ம் ஆண்டிலிருந்து இஸ்பானிய அரசியல் சட்டத்தில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தினால், வரிப்பணம்
செலுத்துவோர் கோவில்களுக்கென தங்கள் வருமானத்தைச் செலுத்தும் புதிய முறை
நடைமுறைப்படுத்தப்பட்டது. அவ்வாண்டிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக, கோவிலுக்கென தாராளமாக வழங்குவோர் எண்ணிக்கை பத்து இலட்சமாக அதிகரித்துள்ளது என்று ஆயர்கள் பேரவை கூறியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள 68 மறைமாவட்டங்களில், ஏறத்தாழ
6000 பங்குகள் உள்ளன. இவற்றில் காரித்தாஸ் பணிகளுக்கென 65000க்கும்
அதிகமான தன்னார்வத் தொண்டர்கள் உழைக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
அண்மையப்
பொருளாதாரச் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்களுக்கு உதவிகள
வழங்குவதில் காரித்தாஸ் அமைப்பு தீவிரமாக பணிகள் செய்து வருகிறது என்றும்
இஸ்பானிய ஆயர்கள் பேரவை கூறியுள்ளது.
5. ஐ.நா. மனித உரிமைகள் அவையின் பரிந்துரைகளை இலங்கை அரசு தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் - மன்னாரு ஆயர்
பிப்.22,2013. இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் இராணுவ ஆக்கிரமிப்பு குறைக்கப்படவேண்டும் என்றும், ஐ.நா.
மனித உரிமைகள் அவையின் பரிந்துரைகளை இலங்கை அரசு தீவிரமாகச் செயல்படுத்த
வேண்டும் என்றும் மன்னாரு ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையில் 133 அருள்
பணியாளர்கள் ஐ.நா. மனித உரிமைகள் அவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இம்மாதம் 25 முதல் மார்ச் 22 வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 22வது அமர்வின் போது, இலங்கையில் தமிழ் மக்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் விருப்பத்துடன் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில்
நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணையும்
இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கவும், காணாமற் போனவர்களைப் பற்றிய உண்மைகளைத் தெரிவிக்கவும் இலங்கை அரசை ஐ.நா. அவை வற்புறுத்த வேண்டும் என்று இம்மடலில் கூறப்பட்டுள்ளது.
கடந்த
ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் அவை கூறிய முடிவுகளை இலங்கை அரசு எவ்வளவு தூரம்
கடைபிடித்துள்ளது என்பது பற்றிய நடுநிலையான ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட
வேண்டும் என்றும் இம்மடலில் கோரப்பட்டுள்ளது.
6. Libreville அமைதி ஒப்பந்தம் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் முற்றிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் - ஆப்ரிக்க ஆயர்கள்
பிப்.22,2013. இவ்வாண்டு சனவரி 11ம் தேதி மத்திய ஆப்ரிக்காவில் நிறைவேற்றப்பட்ட Libreville அமைதி ஒப்பந்தம் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் முற்றிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆப்ரிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
போராடும் இனங்கள் ஆயுதங்களைக் களைந்து, அமைதியைத் தேடவும், இன
மோதல்களால் துன்புறும் மக்களின் வேதனைகள் முடிவுக்கு வரவும் அனைவரும்
ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய ஆப்ரிக்க ஆயர்கள் பேரவை வேண்டுகோள்
விடுத்துள்ளது.
மத்திய ஆப்ரிக்காவின் பெரும்பான்மையான பகுதிகள் போராடும் வன்முறை கும்பல்களின் கைவசம் இருப்பதால், அங்கு மருத்துவமனைகள், பள்ளிகள் பெரிதும் சேதமடைந்துள்ளன என்றும், பெண்கள் தினமும் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
பெரும் கலவரங்கள் வெடிப்பதற்கு முன், அனைத்துலக நாடுகள் தலையிட்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்றும் ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
7. Ulema இஸ்லாமிய அமைப்புடன் பாகிஸ்தான் அரசு நல்லுறவை வளர்த்திருப்பது நாட்டுக்கு நல்லது – பாகிஸ்தான் அமைச்சர்
பிப்.22,2013. பாகிஸ்தானில் ஒற்றுமையை வளர்க்க பாடுபடும் Ulema இஸ்லாமிய
அமைப்புடன் பாகிஸ்தான் அரசு நல்லுறவை வளர்த்திருப்பது நாட்டுக்கு நன்மை
விளைவிக்கும் ஒரு முயற்சி என்று பாகிஸ்தான் அரசில் பணிபுரியும் கிறிஸ்தவத்
தலைவர் ஒருவர் கூறினார்.
"வேற்றுமையின்
நடுவே இணைந்து வாழ்வது" என்ற தலைப்பில் இப்புதனன்று இஸ்லாமபாதில் நடைபெற்ற
ஒரு கருத்தரங்கில் பேசிய பாகிஸ்தான் நாட்டு நல்லிணக்கத் துறையின் தலைவர் Paul Bhatti இவ்வாறு கூறினார்.
பாகிஸ்தானில் கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்றுவரும் பல்வேறு வன்முறைகளின் விளைவாக, தன் சகோதரர் Shahbaz Bhatti உட்பட, 30,000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்று கூறிய அமைச்சர் Paul Bhatti, வெறுப்பை வளர்க்கும் மனப்பான்மையை நாட்டிலிருந்து வேரோடு களைவது அனைவரின் கடமை என்று வலியுறுத்தினார்.
Ulema போன்ற இஸ்லாமிய அமைப்புக்கள் வன்முறைக்கு எதிராக எப்போதும் போராடி வருகின்றனர் என்று கூறிய அமைச்சர், நாட்டில் வறுமையும், கல்வியின்மையும் நீங்கினால் பரந்த மனப்பான்மையும் வளரும் என்று எடுத்துரைத்தார்.
8. சிரியாவில் தொடர்ந்துவரும் போரினால் மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குழந்தைகளே - UNICEFன் தலைவர்
பிப்.22,2013.
சிரியாவில் தொடர்ந்துவரும் போரினால் மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
குழந்தைகளே என்று இத்தாலியில் இயங்கிவரும் ஐ.நா.வின் கல்வி கலாச்சார
அமைப்பான UNICEFன் தலைவர் James Guerrera கூறினார்.
சிரியாவின் போர் முடிவின்றி தொடர்ந்து வருவது ஒரு தலைமுறையையே அழிக்கும் ஆபத்து உள்ளதென்று கூறிய Guerrera, இந்நாட்டின்
குழந்தைகளுக்கு உடனடி உதவிகள் செய்யாவிடில் அவர்கள் வாழ்நாள் முழுவதும்
மனக் காயங்களைத் தாங்கி வாழ்வார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஏனைய பிறரன்பு அமைப்புக்களுடன் சேர்ந்து UNICEF அமைப்பு ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிகள் செய்து வந்தாலும், அந்நாட்டின் தேவைகளை நிறைவேற்ற இன்னும் மிக அதிகமான நிதியும் பணியாளர்களும் தேவைப்படுகின்றனர் என்று Guerrera எடுத்துரைத்தார்.
தற்போது நிலவிவரும் குளிர்காலத்தில் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளே என்பதையும் UNICEF தலைவர் வருத்தத்துடன் அறிவித்தார்.
No comments:
Post a Comment