Sunday 17 February 2013

Catholic News in Tamil - 15/02/13


1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ருமேனிய அரசுத்தலைவர் சந்திப்பு

2. Pro Petri Sede கழகத்தினருக்குத் திருத்தந்தை நன்றி

3. I.O.R நிறுவனத்தின் புதிய தலைவர் வழக்கறிஞர்  Ernst von Freyberg

4. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தனிப்பட்ட செயலர் திருத்தந்தையுடன் காஸ்தெல் கந்தோல்ஃபோ செல்வார்

5. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு இந்தியத் திருஅவையின் ஆழ்ந்த நன்றி

6. மாரனைட்ரீதி கர்தினால் : திருத்தந்தையின் பதவி விலகல் அறிவிப்பு திருஅவைக்கும் உலகுக்கும் அதிர்ச்சி

7. WCC தலைவர் : திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்த பார்வை

8. சாவை வருவிக்கும் போலிமருந்துகள் வியாபாரத்தைத் தடை செய்வதற்கு ஐ.நா முயற்சி


------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ருமேனிய அரசுத்தலைவர் சந்திப்பு

பிப்.15,2013. ருமேனிய அரசுத்தலைவர் Traian Basescuஐ இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் ருமேனிய அரசுத்தலைவர் Traian Basescu.
ஐரோப்பாவில் பொதுவான விழுமியங்களைப் பாதுகாப்பது உட்பட திருப்பீடத்துக்கும், ருமேனிய நாட்டுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், ருமேனியக் கத்தோலிக்கத் திருஅவைக்கும் அந்நாட்டுக்கும் இடையே, குறிப்பாக, இவ்விரு தரப்புக்கும் இடையே கல்வித்துறையில் ஒத்துழைப்பு போன்ற விடயங்களும், ருமேனியாவில் கத்தோலிக்கச் சமூகங்களைப் பாதிக்கும் விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
நல்ல இதமான சூழலில் இடம்பெற்ற இச்சந்திப்புக்களில், வெளிநாடுகளில் வாழும் ருமேனியச் சமுதாயத்தை ஒன்றிணைப்பதில் கத்தோலிக்கத் திருஅவையின் பங்கும் நினைவுகூரப்பட்டது.

2. Pro Petri Sede கழகத்தினருக்குத் திருத்தந்தை நன்றி

பிப்.15,2013. பிறரன்புக்குச் சான்று பகர்வதை இன்னும் ஆழமாக வாழ்வதற்கு நல்ல வாய்ப்பாக நம்பிக்கை ஆண்டு இருக்கின்றது என்று Pro Petri Sede என்ற கழகத்தினரிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்தின் தேவைகளுக்கு நிதி உதவி செய்யும் பெல்ஜியத்தின் Pro Petri Sede என்ற கழகத்தின் 45 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, விசுவாசமின்றி பிறரன்பு எந்தப் பலனையும் கொடுக்காது என்றும், விசுவாசமும் பிறரன்பும் எப்பொழுதும் ஒன்றிணைந்தே செல்கின்றன என்றும் தெரிவித்தார்.
பொருளாதார அளவில் உதவி செய்வதில் பிறரன்பு முழுமை அடையாது, மாறாக, கிறிஸ்துவின் அன்பில் பங்குகொண்டு பிறரன்பைச் செய்யும்போதுதான் அது முழுமை அடைகின்றது என்றும் கூறிய திருத்தந்தை, Pro Petri Sede கழகம், திருப்பீடத்துக்குச் செய்துவரும் உதவிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.
3. I.O.R நிறுவனத்தின் புதிய தலைவர் வழக்கறிஞர்  Ernst von Freyberg

பிப்.15,2013. I.O.R என்ற திருப்பீடச் சமயப் பணிகள் நிறுவனத்தின் மேற்பார்வைக் குழுவின் புதிய தலைவராக, வழக்கறிஞர்  Ernst Freiherr von Freyberg என்பவரை, I.O.R நிறுவனத்தின் கர்தினால்கள் குழு  இவ்வெள்ளியன்று நியமித்துள்ளது.
வத்திக்கான் வங்கி என பரவலாக அழைக்கப்படும் I.O.R. நிறுவனத்தின் மேற்பார்வை குழுவிலுள்ள மற்ற நால்வரும் தங்கள் பணிகளைத் தொடர்ந்து செய்வார்கள் என்று கர்தினால்கள் குழு  கூறியது.
I.O.R. நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம் குறித்த நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்ன, திருப்பீடச் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, இத்தலைவர் பதவிக்கென பரிந்துரைக்கப்பட்ட பலரின் தொழில் மற்றும் அறநெறி வாழ்வைப் பல மாதங்களாகப் பரிசீலித்த பின்னர், Ernst von Freyberg நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.
1958ம் ஆண்டில் ஜெர்மனியில் பிறந்த Ernst von Freyberg, Knights of Malta பிறரன்பு அமைப்பில் ஆர்வமுடன் செயல்படுபவர். வழக்கறிஞராகிய இவர், இன்னும் பல முக்கிய பதவிகளைக் கொண்டிருப்பவர்.

4. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தனிப்பட்ட செயலர் திருத்தந்தையுடன் காஸ்தெல் கந்தோல்ஃபோ செல்வார்

பிப்.15,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தனிப்பட்ட செயலர் பேராயர் Georg Ganswein  உட்பட வத்திக்கானில் திருத்தந்தைக்கு உதவி செய்துவரும் பணியாளர்கள் இம்மாதம் 28ம் தேதி மாலை திருத்தந்தையுடன் காஸ்தெல் கந்தோல்ஃபோ செல்வார்கள் என்று நிருபர் கூட்டத்தில் அறிவித்தார் இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி.
வத்திக்கான் தோட்டத்திலுள்ள Mater Ecclesiae அடைபட்ட துறவு இல்லம் சீரமைக்கப்பட்ட பின்னர் திருத்தந்தை அங்கு வந்து தங்கும்போது பேராயர் Gansweinம் திருத்தந்தையுடன் தங்குவார் என்றும், அதேசமயம் வத்திக்கானின் பாப்பிறை இல்ல நிர்வாகத் தலைவராகப் புதிய திருத்தந்தைக்கும் அவர் பணி செய்வார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.  
திருத்தந்தைக்குத் தற்போது உதவி செய்துவரும் Memores Domini என்ற அர்ப்பணிக்கப்பட்ட பொதுநிலை சகோதரிகள் கழகத்தைச் சார்ந்த சகோதரிகளும் காஸ்தெல் கந்தோல்ஃபோ செல்வார்கள் என்றும் அருள்தந்தை லொம்பார்தி அறிவித்தார்.
திருஅவை வரலாற்றில் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது திருத்தந்தை ஒருவர் பதவி விலகலை அறிவித்திருப்பதால் இது சார்ந்த நடைமுறை பிரச்சனைகளுக்குத் தெளிவும் விளக்கமும் அளிக்கும் பணியில் கர்தினால்கள் அவையும், திருஅவை சட்ட வல்லுனர்களும், பிற வத்திக்கான் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
கான்கிளேவ் என்ற திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் கூட்டம் வருகிற மார்ச் 15க்கும் 20க்கும் இடைப்பட்ட நாள்களில் நடைபெறும் எனவும் நிருபர்களிடம் கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.

5. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு இந்தியத் திருஅவையின் ஆழ்ந்த நன்றி

பிப்.15,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு இந்தியத் திருஅவை தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கும் விதமாக, இந்தியா முழுவதிலும் இருக்கின்ற கிறிஸ்தவர்கள், தூய பேதுருவின் தலைமைப்பீட விழாவான இம்மாதம் 22ம் தேதியை திருத்தந்தைக்குரிய நாளாகச் செலவழிப்பார்கள் என்று இந்திய ஆயர் பேரவை தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அறிவித்துள்ளார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது எட்டு ஆண்டுகாலப் பாப்பிறைப் பணியில், ஆசியாவுக்கும் இந்தியாவுக்கும் நெருக்கமான பல விவகாரங்களைப் பல்வேறு தருணங்களிலும் பல்வேறு வழிகளிலும் பேசியிருக்கிறார் என்று, மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ்  கூறியுள்ளார்.
திருத்தந்தை தனது அப்போஸ்தலிக்க மடல்கள் மூலம் மட்டுமல்லாமல், தனது அறிவுத் தெளிவு மற்றும் படிப்புத் திறமையைக் கொண்டும் ஆசிய உலகில் பேசியிருக்கிறார் என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ், ஆசியா, உலகில் அதிகமான முஸ்லீம்களைக் கொண்டுள்ளவேளை, அவர் முஸ்லீம்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்தது, உண்மையிலேயே முக்கியமான சவாலாக இருந்தது என்றும் கூறினார்.
2011, 2012ம் ஆண்டுகளின் அனைத்துலக கத்தோலிக்க அமைதி தினச் செய்திகளும் சமய சுதந்திரம் மற்றும் அமைதியைப் பற்றியே இருந்தன என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ், நீதியும் அமைதியும் உலகளாவிய அனுபவம், இவை, பேராசை, சமத்துவமின்மை, வன்முறை ஆகியவற்றின் தனிப்பட்ட மற்றும் அமைப்புமுறையான தீமைகளுக்கு எதிராக இருக்கின்றன என்றும் கூறினார். 

6. மாரனைட்ரீதி கர்தினால் : திருத்தந்தையின் பதவி விலகல் அறிவிப்பு திருஅவைக்கும் உலகுக்கும் அதிர்ச்சி

பிப்.15,2013. வயதைக் காரணம் காட்டி திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பதவி விலகுவதாக அறிவித்திருப்பது, பொறுப்பான நடத்தைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது என்று லெபனன் மாரனைட்ரீதி கர்தினால் Béchara Boutros Raï கூறினார்.
இம்மாதம் 28ம் தேதியோடு திருத்தந்தை பதவி விலகுவதாக அறிவித்திருப்பது, உலகெங்கும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பி இருந்தாலும், நேர்மறையான உணர்வுகளையும் எழுப்பியுள்ளன என்றுரைத்த கர்தினால் Béchara Raï, திருத்தந்தை 16ம் பெனடிக்டின் துணிச்சல் மற்றும் நேர்மைக்கு மாரனைட்ரீதி தலைமை தலைவணங்குகிறது என்று கூறினார். 
திருத்தந்தை தொடங்கி வைத்துள்ள நம்பிக்கை ஆண்டில், அவர் இவ்வாறு அறிவித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்றும் கர்தினாலின் அறிக்கை கூறுகின்றது.
இவ்வாண்டு புனித வெள்ளியன்று உரோம் கொலோசேயத்தில் நடைபெறும் சிலுவைப்பாதைச் சிந்தனைகளைத் தயாரிக்கும் பொறுப்பை லெபனன் இளையோரிடம் திருத்தந்தை கொடுத்திருப்பதையும் அவர் நினைவுகூர்ந்தார். 

7. WCC தலைவர் : திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்த பார்வை

பிப்.15,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காகவும், இந்த முக்கியமான காலத்தில் கத்தோலிக்கத் திருஅவை வழிநடத்தப்படவும் செபிக்குமாறு உலகக் கிறிஸ்தவர்களைக் கேட்டுள்ளார் WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத் தலைவர் பாஸ்டர் Olav Fykse Tveit.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பதவி விலகுவதாக அறிவித்துள்ளது, அவர்மீது மிகுந்த மதிப்பையும், பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பாஸ்டர் Fykse Tveit.
மிகவும் மனிதத்தோடு எடுக்கப்பட்டுள்ள திருத்தந்தையின் இந்தத் தீர்மானத்தை நாம் முழுமையாய் மதிக்க வேண்டும் என்றும், எந்த ஒரு மனிதருக்கும் தன்னைக் கவனித்துக் கொள்ளவேண்டிய தேவை உள்ளது, அதேசமயம், இத்தகைய தீர்மானம் எடுப்பதற்கு ஒரு மனிதருக்கு ஞானமும் பலமும் தேவை என்றும் அவர் சொல்லியுள்ளார்.
சரியான கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல் வழியாக மட்டுமே, கிறிஸ்தவ சபைகளிடையே புரிந்துகொள்ளுதலையும் உறவுகளையும் இயலக்கூடியதாய் ஆக்க முடியும் என்ற கண்ணோட்டத்தைத் திருத்தந்தை கொண்டிருந்தார் என்றும் WCC தலைவர் கூறியுள்ளார்.

8. சாவை வருவிக்கும் போலிமருந்துகள் வியாபாரத்தைத் தடை செய்வதற்கு ஐ.நா முயற்சி

பிப்.15,2013. போலிமருந்துகள் வியாபாரம், திட்டமிட்டக் குற்றக்கும்பல்களின் தொழிலுக்கு பல கோடி டாலர்களை ஈட்டிக் கொடுக்கின்றது என்று சொல்லி, அவ்வியாபாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாறு UNODC என்ற போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் குறித்த ஐ.நா. அலுவலகம் கூறியது.
சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் வியாபாரத்தை நிறுத்துவது குறித்து ஐ.நா.வில் தொடங்கியுள்ள கருத்தரங்கையொட்டி நிருபர்களிடம் பேசிய UNODC அலுவலகம்,  போலி மருந்துகள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கின்றன, சில சமயங்களில் அவை சாவை வருவிக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் சில இடங்களின் சந்தைகளில் ஏறக்குறைய 30 விழுக்காட்டுப் போலிமருந்துகள் விற்கப்படுகின்றன என்று UNODC அலுவலகம் கூறியது.


No comments:

Post a Comment