Thursday 14 February 2013

Catholic News in Tamil - 13/02/13

1. நிலத்தில் உழைக்கும் மனிதரை மையமாக்கியே தன் கருத்துக்களை வழங்கியுள்ளது திருஅவை - திருத்தந்தை

2. தவக்காலத்தில் மேற்கொள்ளப்படும் 'Fraternity Campaign' முயற்சிக்குத் திருத்தந்தையின் வாழ்த்துக்கள்

3. இம்மாதம் 27ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் இறுதி புதன் பொது மறைபோதகத்தை வழங்குவார்- திருப்பீடப் பேச்சாளர்

4. நெற்றியில் பூசப்படும் சாம்பல், தாழ்ச்சியில் வளர நமக்கு அழைப்பு விடுக்கிறது - கர்தினால் Filoni

5. ராஞ்சியில் Constant Lievens மருத்துவமனைக்கு கர்தினால் Filoni அடிக்கல் நாட்டினார்

6. திருஅவையின் தலைவர் என்பது பணிக்கென கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பே என்பதைப் புரிந்துகொள்ள திருத்தந்தையின் முடிவு உதவுகிறது - பேராயர் Williams

7. திருஅவைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக திருத்தந்தை அறிவித்ததுபற்றி இயேசு சபை தலைவர்

8. பிப்ரவரி 13ம் தேதி - உலக வானொலி நாள்

------------------------------------------------------------------------------------------------------

1. நிலத்தில் உழைக்கும் மனிதரை மையமாக்கியே தன் கருத்துக்களை வழங்கியுள்ளது திருஅவை - திருத்தந்தை

பிப்.13,2013. வேளாண்மையைப்பற்றி திருஅவை பேசியபோதெல்லாம், நிலத்தில் உழைக்கும் மனிதரை மையமாக்கியே தன் கருத்துக்களை வழங்கியுள்ளது என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வேளாண்மை வளர்ச்சியின் அகில உலக நிதி அமைப்பான IFAD, பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய இருநாட்கள் உரோம் நகரில் நடத்தும் கூட்டத்திற்குத் தன் செய்தியை அனுப்பியுள்ளத் திருத்தந்தை, வளர்ச்சி, முன்னேற்றம் என்ற கருத்துக்கள் மனிதரை மையப்படுத்தியதாக அமைவதே உண்மையான வளர்ச்சியைத் தரும் என்று கூறினார்.
மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத்.25: 40) என்ற இயேசுவின் சொற்களை ஆழமாக நினைவுறுத்தும் தவக்காலத்தின் துவக்கத்தில் இக்கூட்டம் ஆரம்பமாவது பொருத்தமாக உள்ளது என்று திருத்தந்தை தன் செய்தியின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.
IFAD அமைப்பு ஆப்ரிக்காவின் கிராமப்புற விவசாயிகளின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதைப் பாராட்டுவதாகக் கூறியத் திருத்தந்தை, biodiversity எனப்படும் பன்முக உயிர்களின் பாதுகாப்பிலும் நமது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உலகின் வறுமை, பசி ஆகியவற்றைப் போக்குவதில் IFAD அமைப்பு காட்டி வரும் அக்கறையைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, மிகவும் வறுமைப்பட்டவர்களுக்கு நிதி உதவிகள் செய்வது அவர்களது பசியைப் போக்குவதோடு, உழைக்கும் வசதிகளையும் செய்து கொடுத்து, அவர்கள் மதிப்புடன் வாழ உதவுகிறது என்பதையும் எடுத்துரைத்தார்.
பன்னாட்டு அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படும் IFAD அமைப்பைக் குறித்து திருப்பீடம் எப்போதும் மதிப்பு கொண்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, பசியையும் வறுமையும் பின்னே தள்ளி, நீதியையும் அமைதியையும் நிலைநாட்டும் சமுதாயத்தை உருவாக்க IFAD அமைப்பு தொடர்ந்து செயல்பட தன் சிறப்பு வாழ்த்துக்களையும் இச்செய்தியின் இறுதியில் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. தவக்காலத்தில் மேற்கொள்ளப்படும் 'Fraternity Campaign' முயற்சிக்குத் திருத்தந்தையின் வாழ்த்துக்கள்

பிப்.13,2013. நற்செய்தியின் அடிப்படையில் மனித நேயத்துடன் வளரும் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இளையோரைத் தூண்டும் தவக்கால முயற்சிக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் வாழ்த்துக்களையும் ஆசீரையும் அனுப்பியுள்ளார்.
பிரேசில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையால் ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில் 'Fraternity Campaign' என்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 1964ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியின் 50ம் ஆண்டுக்கென 'இளையோரும் சமுதாயமும்' என்ற தலைப்பில் இவ்வாண்டு கொண்டாடப்படும் இம்முயற்சிகளுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்வாண்டு பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் இளையோர் உலக நாள் கொண்டாட்டங்களுடன் இத்தவக்கால முயற்சிகளும் இணைந்து, பிரேசில் இளையோரை நற்செய்தியின் தூதர்களாக மாற்றும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.
காக்கும் கடவுள் இளையோரின் வாழ்வை முற்றிலும் ஆட்கொள்ளவும், இவ்விதம் உலகில் உள்ள ஏனைய இளையோருக்கு நற்செய்தியை எடுத்துச்செல்லும் கருவிகளாக அவர்களை மாற்றவும் அன்னை மரியா துணைபுரிய வேண்டும் என்று திருத்தந்தை தன் செய்தியில் வாழ்த்தியுள்ளார்.


3. இம்மாதம் 27ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் இறுதி புதன் பொது மறைபோதகத்தை வழங்குவார்- திருப்பீடப் பேச்சாளர்

பிப்.13,2013. தான் பதவி விலகுவதாக திருத்தந்தை அறிவித்தது பல நாட்கள் ஆழ்ந்து சிந்தித்து எடுக்கப்பட்ட ஒரு முடிவு என்றும், இம்முடிவை அறிவித்தபின் திருத்தந்தை மிகுந்த அமைதியோடு காணப்படுகிறார் என்றும் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பதவி விலகுவதாக அறிவித்தபின், மீண்டும் ஒருமுறை இச்செவ்வாயன்று செய்தியாளர்களைச் சந்தித்த அருள்தந்தை Lombardiபிப்ரவரி மாதம் இறுதிவரை திருத்தந்தை கலந்துகொள்வதாய் அறிவிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் எவ்வித மாற்றமும் இருக்காது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
திருத்தந்தையின் இந்த அறிவிப்புக்குப் பின், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மக்கள் அதிக அளவில் பங்கேற்பர் என்ற காரணத்தால், வழக்கமாக புனித Sabina கோவிலில் நடைபெறும் திருநீற்றுப் புதன் திருப்பலி, இப்புதன் மாலை புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்று அறிவித்தார் அருள்தந்தை Lombardi.
இம்மாதம் 27ம் தேதி புதனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் இறுதி புதன் பொது மறைபோதகத்தை வழங்குவதால், அன்றைய மறைபோதகத்திற்கு ஏராளமான மக்கள் வருவதை எதிர்பார்த்து, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் இந்த இறுதி புதன் மறைபோதகம் நடைபெறும் என்றும் அருள்தந்தை Lombardi கூறினார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் நாள் நிகழ்ச்சிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதையும், இந்நிகழ்ச்சிகளில் புதிதாகப் பொறுப்பேற்கவிருக்கும் திருத்தந்தை கலந்துகொள்வார் என்பதையும் அருள்தந்தை Lombardi தெளிவுபடுத்தினார்.


4. நெற்றியில் பூசப்படும் சாம்பல், தாழ்ச்சியில் வளர நமக்கு அழைப்பு விடுக்கிறது - கர்தினால் Filoni

பிப்.13,2013. திருநீற்றுப் புதனன்று நமது நெற்றியில் பூசப்படும் சாம்பல் நாம் பாவிகள் என்பதை நினைவுறுத்தி, தாழ்ச்சியில் வளர நமக்கு அழைப்பு விடுக்கிறது என்று வத்திகான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இம்மாதம் 9ம் தேதி முதல் 16ம் தேதி முடிய இந்தியாவில் தன் மேய்ப்புப் பணி பயணத்தை மேற்கொண்டுள்ள நற்செய்தி அறிவிப்புப் பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni, இப்புதன் மாலை ராஞ்சி பேராலயத்தில் நிகழ்த்திய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
பாவத்தை விட்டு விலகவேண்டும் என்பது தவக்காலம் நம் ஒவ்வொருவருக்கும் தரும் சிறப்பு அழைப்பு என்று கூறிய கர்தினால் Filoni, ஆன்மீக வாழ்வில் புத்துணர்வு பெறுவதும் நமக்கு விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பு என்று கூறினார்.
ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாக இத்தவக்காலத்தில் அடிக்கடி கிறிஸ்துவைச் சந்திக்கவேண்டும் என்பதை நினைவுறுத்திய கர்தினால் Filoni, நமது அயலவருடன் ஒப்புரவு பெறுவதும் தவக்காலம் நம்மீது சுமத்தும் கடமை என்று கூறினார்.
நம்பிக்கை ஆண்டில் அருள் பணியாளர்கள் தங்கள் செப வாழ்வை இன்னும் ஆழப்படுத்தவும், மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றவும் வேண்டும் என்று கூடியிருந்த குருக்களுக்குச் சிறப்பாக எடுத்துரைத்தார் கர்தினால் Filoni.


5. ராஞ்சியில் Constant Lievens மருத்துவமனைக்கு கர்தினால் Filoni அடிக்கல் நாட்டினார்

பிப்.13,2013. இந்தியாவில், நலப் பணிகளில் பின்தங்கியுள்ள ஒரு பகுதியில் மருத்துவ மனையையும் மருத்துவ கல்லூரியையும் ஆரம்பிக்க இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை முடிவெடுத்திருப்பது பாராட்டுக்குரியதேன்று கர்தினால் Fernando Filoni கூறினார்.
நற்செய்தி அறிவிப்புப் பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் Filoni, இந்தியாவில் மேற்கொண்டுள்ள தன் மேய்ப்புப்பணி பயணத்தின் ஓர் அங்கமாக, இப்புதன் காலையில் ராஞ்சியில் Constant Lievens மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்த ஒரு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும்போது இவ்வாறு கூறினார்.
மனித துன்பத்தை, முக்கியமாக, உடல் நலக் குறைவால் எழும் துன்பத்தைத் துடைக்க கத்தோலிக்கத் திருஅவை உலகெங்கும் உழைத்து வருவது அனைவரும் அறிந்த ஓர் உண்மை என்று கூறிய கர்தினால் Filoni, இந்தியாவில் கத்தோலிக்கத் திருஅவையின் தனிப்பட்ட ஓர் அடையாளமாக நலப்பணிகள் அமைந்துள்ளன என்பதை பெருமையுடன் எடுத்துரைத்தார்.
1885ம் ஆண்டு சோட்டா நாக்பூர் பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் மத்தியில் உழைக்க வந்த இறையடியாரான இயேசு சபை அருள்தந்தை Constant Lievens அவர்களின் பணியையும் வாழ்வையும் புகழ்ந்து பேசிய கர்தினால் Filoni, அவரது நினைவை மக்கள் மனதில் அழியாமல் பதிக்க இந்த நலப்பணி நிறுவனம் பெரிதும் உதவும் என்று எடுத்துரைத்தார்.


6. திருஅவையின் தலைவர் என்பது பணிக்கென கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பே என்பதைப் புரிந்துகொள்ள திருத்தந்தையின் முடிவு உதவுகிறது - பேராயர் Williams

பிப்.13,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பதன் மூலம், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் என்ற பொறுப்பைக் குறித்த இன்னும் தெளிவான கண்ணோட்டத்தைத் வழங்கியுள்ளார் என்று ஆங்கலிக்கன் சபையின் தலைவராக இருந்து ஒய்வு பெற்றுள்ள பேராயர் Rowan Williams கூறினார்.
முன்னாள் Canterbury பேராயராகப் பணியாற்றிய Williams, திருத்தந்தையின் பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, வத்திக்கான் வானொலிக்கு இச்செவ்வாயன்று அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
தங்களையே கடவுள்கள் என்று எண்ணி அரியணையில் அமர்ந்த மன்னர்களைப் போல இல்லாமல், திருஅவையின் தலைவர் என்பது பணிக்கென கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பே என்பதைப் புரிந்துகொள்ள திருத்தந்தையின் இந்த முடிவு உதவுகிறது என்று பேராயர் Williams கூறினார்.
2012ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ஆங்கிலிக்கன் சபையின் தலைமைப் பதவியிலிருந்து விலகிய பேராயர் Williams, தான் பதவி விலகும் முடிவைக் குறித்து திருத்தந்தையுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும், அப்போது திருத்தந்தையும் தன் தனிப்பட்ட எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறினார்.
பிரித்தானியாவில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மேற்கொண்ட திருப்பயணத்தை இப்பேட்டியில் நினைவுகூர்ந்த பேராயர் Williams, பதவி விலகலுக்குப் பின் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் இறையியல் சிந்தனைகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்வார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.


7. திருஅவைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக திருத்தந்தை அறிவித்ததுபற்றி இயேசு சபை தலைவர்

பிப்.13,2013. "ஏனையோர் செல்ல இயலாத அல்லது செல்லத் தயங்கும் இடங்களுக்கு இயேசு  சபையினராகிய நீங்கள் செல்ல வேண்டும் என்பதே உங்களுக்கு விடுக்கப்படும் சவால்" என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஐந்தாண்டுகளுக்கு முன் இயேசு சபையினருக்கு அளித்த உரையை இயேசு சபை தலைவர் அருள்தந்தை Adolfo Nicolas நினைவு கூர்ந்தார்.
திருத்தந்தை அவர்கள் திருஅவைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இத்திங்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, இயேசுசபை அங்கத்தினர்களுக்கு இச்செவ்வாயன்று அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், திருத்தந்தை இயேசு சபைமீது கொண்டிருந்த சிறப்பான அன்பை நினைவுகூர்ந்தார்.
இந்த முடிவை திருத்தந்தை எடுப்பதற்கு அவர் கொண்டிருந்த ஆழ்மனச் சுதந்திரத்தையும், திருஅவை மீது அவர் கொண்டிருந்த அன்பையும், அவரது தாழ்ச்சியையும் தான் பாராட்டுவதாகக் கூறினார் இயேசு சபைத் தலைவர் அருள்தந்தை Nicolas.


8. பிப்ரவரி 13ம் தேதி - உலக வானொலி நாள்

பிப்.13,2013. தொலைத்தொடர்பு, ஒலிபரப்பு, மற்றும் கணனித் தொழில்நுட்பம் ஆகியவை இணைந்துவருவது தொடர்புகளில் புரட்சியை உருவாக்குகிறது என ITU எனப்படும் அகில உலக தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் பொதுச்செயலர் Hamadoun Touré கூறினார்.
1946ம் ஆண்டு, பிப்ரவரி 13ம் தேதி, ஐ.நா.வானொலி உருவாக்கப்பட்டதன் நினைவாக, கடந்த ஆண்டு ஐ.நா.வின் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனமான UNESCO, பிப்ரவரி 13ம் தேதியை உலக வானொலி நாள் என அறிவித்தது.
உலக வானொலி நாளின் முதல் ஆண்டு நாள் நிகழ்வையொட்டி, இச்செவ்வாயன்று ஜெனீவாவில் ITUவின் அறிக்கையை வெளியிட்ட Touré, வானொலியின் தாக்கம் குறித்துப் பேசினார்.
தொடர்புத்துறையில் உலகம் வியத்தகு வழிகளில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், தொடர்பு உலகில் வானொலி இன்னும் ஒரு சிறப்பு இடம் வகிக்கிறது என்று ITUவின் இவ்வறிக்கை கூறுகிறது.
 

No comments:

Post a Comment