Tuesday 19 February 2013

Catholic News in Tamil - 19/02/13

1. ஜோர்டனிலுள்ள சிரியா நாட்டுப் புலம் பெயர்ந்த மக்களைச் சந்திக்கச் செல்கிறார் கர்தினால் சாரா

2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தங்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து பிரிட்டன் இளையோர் பகிர்வு

3. தலித் கிறிஸ்தவர்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் அகற்றப்படுவதற்கு 10 இலட்சம் அஞ்சல் அட்டைகள்

4. இலங்கையின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்படுமாறு கிறிஸ்தவக் குருக்கள் ஐ.நா.விடம் கோரிக்கை

5. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த வரலாற்று சிறப்புமிக்க அறிக்கை ஒன்றில் போலந்து கிறிஸ்தவத் தலைவர்கள் கையொப்பம்

6. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மாபெரும் சுற்றுச்சூழல் பேரணி

7. ஆர்டிக் பெருங்கடல் பாதுகாக்கப்படுமாறு ஐ.நா. வலியுறுத்தல்

8. டான்சானியா, வெனெசுவேலா நாடுகளில் குருக்கள் கொலை

9. மியான்மார் இராணுவம், சிறார்ப் படைவீரர்களை விடுதலை செய்திருப்பதற்கு ஐ.நா. பாராட்டு

------------------------------------------------------------------------------------------------------


1. ஜோர்டனிலுள்ள சிரியா நாட்டுப் புலம் பெயர்ந்த மக்களைச் சந்திக்கச் செல்கிறார் கர்தினால் சாரா

பிப்.19,2013. மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவுக்கான காரித்தாஸ் நிறுவனம் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கென, திருப்பீட Cor Unum பிறரன்பு அவைத் தலைவர் கர்தினால் Robert Sarahவும், அந்த அவைச் செயலர் பேரருட்திரு Giampietro Dal Tosoவும் இச்செவ்வாயன்று ஜோர்டன் சென்றுள்ளனர்.
ஜோர்டனில் இச்செவ்வாய் முதல் வியாழன்வரை நடைபெறும் இக்கூட்டத்தில், மத்திய கிழக்குப் பகுதியில் கத்தோலிக்க உதவி நிறுவனங்கள் ஆற்றிவரும் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாள்களில் ஜோர்டன் அரசரையும் சந்திக்கும் கர்தினால் Sarah, அந்நாட்டிலுள்ள சிரியா நாட்டுப் புலம் பெயர்ந்த மக்களையும் சந்திப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் 20 மாதங்களாக இடம்பெற்றுவரும் சண்டை குறித்து அறிக்கை வெளியிட்ட Cor Unum பிறரன்பு அவை, சிரியாவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளது.
சிரியாவிலிருந்து 10 இலட்சம் முதல் 25 இலட்சம் வரையிலான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர் மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் இடம்பெறும் வன்முறையில் ஒரு இலட்சம்பேர் வரை இறந்துள்ளனர் என்று சில புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

 
2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தங்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து பிரிட்டன் இளையோர் பகிர்வு

பிப்.19,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆழமான விசுவாசத்தின் அன்பு ஆசிரியர், மனித உரிமைகள் மற்றும் மனித மாண்பைத் துணிச்சலுடன் பாதுகாத்தவர், செப மனிதர், தாழ்ச்சியும் ஞானமும் மிக்கவர் என்று புகழ்ந்துள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு பால்ட்டிமோர் பேராயர் வில்லியம் லோரி.
திருத்தந்தையின் பதவி விலகல் குறித்து அறிக்கை வெளியிட்ட, அந்நாட்டின் பழமையான உயர்மறைமாவட்டப் பேராயர் லோரி, தனது பாப்பிறைப் பணியை நிறைவு செய்யும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காகவும், அவரின் வழித்தோன்றலைத் தேர்ந்தெடுக்க எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்காகவும் செபிக்குமாறு கத்தோலிக்கரைக் கேட்டுள்ளார்.
மேலும், பிரிட்டனில், இந்தத் தவக்காலத்தின் ஒவ்வொரு நாளும் ஓர் இளையோர், திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தங்களின் வாழ்விலும் விசுவாசத்திலும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.
இந்த நடவடிக்கை திருநீற்றுப்புதனன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


3. தலித் கிறிஸ்தவர்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் அகற்றப்படுவதற்கு 10 இலட்சம் அஞ்சல் அட்டைகள்

பிப்.19,2013. இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து  இடம்பெற்றுவரும் பாகுபாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 10 இலட்சம் அஞ்சல் அட்டைகள் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர் இந்தியக் கிறிஸ்தவர்கள்.
இந்திய தேசிய கிறிஸ்தவ சபைகளின் அவை, இந்திய தலித் கிறிஸ்தவர்கள் அவை ஆகியவற்றுடன் இணைந்து இந்திய ஆயர் பேரவை தொடங்கியுள்ள இந்தப் புதிய திட்டம் குறித்துப் பேசிய, இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் ஆயர் நீதிநாதன் அந்தோணிசாமி, இவ்விவகாரம் குறித்து மத்திய அரசிடமிருந்து திட்டவட்டமான பதிலை வலியுறுத்துகிறோம் என்று கூறினார்.
தலித் கிறிஸ்தவர்கள் குறித்த விவகாரம் இந்திய உச்சநீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது, இந்த விவகாரம் கடந்த சனவரி 11ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது, அது வருகிற மார்ச் 4ம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என்பதால், அரசிடமிருந்து ஒரு முடிவை எதிர்பார்க்கிறோம் என்றும் ஆயர் மேலும் கூறினார்.
மேலும், இந்தத் திட்டம் குறித்துப் பேசிய இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் செயலர் அருள்பணி தேவசகாயராஜ், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் ஒவ்வொரு நாளும் குறைந்தது 100 அஞ்சல் அட்டைகள் வீதம் தபாலில் அனுப்பப்படும், இவ்வாறு 10 இலட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.


4. இலங்கையின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்படுமாறு கிறிஸ்தவக் குருக்கள் ஐ.நா.விடம் கோரிக்கை

பிப்.19,2013. இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்றதாகச் சொல்லப்படும் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு, ஒரு தனிப்பட்ட அனைத்துலக விசாரணைக் குழு உருவாக்கப்படுமாறு, இலங்கையின் வடபகுதி கிறிஸ்தவக் குருக்கள், ஐ.நா. மனித உரிமைகள் அவையைக் கேட்டுள்ளனர்.  
இலங்கையின் கத்தோலிக்க, ஆங்லிக்கன் மற்றும் மெத்தோடிஸ்ட் கிறிஸ்தவ சபைகளின் 133 குருக்கள் இணைந்து தயாரித்துள்ள அறிக்கையில்,  ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 22வது அமர்வில் உறுதியான செயல்திட்டத்தை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுமாறு கேட்கப்பட்டுள்ளது.
போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு இலங்கை அரசுக்கு விருப்பம் இல்லை என்றும், உள்நாட்டுப் போரின்போது அனைத்துலக விதிகள் மீறப்பட்டதை விசாரிப்பதற்கு ஒரு தனிப்பட்ட அனைத்துலக விசாரணைக் குழு தேவை என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது. 
ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 22வது அமர்வு, இம்மாதம் 25 முதல் மார்ச் 22 வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.


5. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த வரலாற்று சிறப்புமிக்க அறிக்கை ஒன்றில் போலந்து கிறிஸ்தவத் தலைவர்கள் கையொப்பம்

பிப்.19,2013. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த அறிக்கை ஒன்றில், போலந்து கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரோடு சேர்ந்து பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் முதன்முறையாக கையெழுத்திட்டுள்ளனர்.
கடித வடிவில் அமைந்துள்ள இந்த அறிக்கையில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த பொதுவான இறையியல் கூறுகளும், சில நடைமுறைக் கூறுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
இயற்கையை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது குறித்தும், இயற்கைக்கும் நமக்கும் உள்ள உறவு எப்படி இருக்கின்றது என்பது குறித்தும் சிந்திக்குமாறு இந்த அறிக்கை அனவைருக்கும் அழைப்பு விடுக்கிறது. 
போலந்து கிறிஸ்தவத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட இவ்வறிக்கை, போலந்து கிறிஸ்தவத்தின் வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.


6. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மாபெரும் சுற்றுச்சூழல் பேரணி

பிப்.19,2013. தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த பேரணி ஒன்றை நடத்தினர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஏறக்குறைய 50 ஆயிரம் மக்கள், மனிதரால் ஏற்படுத்தப்படும் இப்பூமியின் வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தினர்.
சமய மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த குழுக்களினால் இஞ்ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணி, அந்நாட்டு வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெரிய சுற்றுச்சூழல் பேரணி என்று சொல்லப்படுகிறது. 


7. ஆர்டிக் பெருங்கடல் பாதுகாக்கப்படுமாறு ஐ.நா. வலியுறுத்தல்

பிப்.19,2013. ஆர்டிக் பெருங்கடலில் பனிப்பாறைகள் உருகி வருவதையும், கடல்வளங்கள் அதனால் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி, ஆர்டிக் பெருங்கடல் சேதப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு, ஐக்கிய நாடுகள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. 
ஆர்டிக் பெருங்கடலில் பனிப்பாறைகள் உருகுவது அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வருவதாகவும், 2012ம் ஆண்டில் 34 இலட்சம் சதுர கிலோ மீட்டர் அளவில் பனிப்பாறைகள் உருகி இருப்பதாகவும் ஐ.நா.சுற்றுச்சூழல் நிறுவனம் கூறுகிறது.
உலகில் ஆய்வுகள் நடத்தப்படாத இயற்கை வாயுவில் 30 விழுக்காடு, ஆர்டிக் பெருங்கடலில் இருப்பதாக அமெரிக்க ஐக்கிய நாட்டு புவியியல் புள்ளிவிபரக் கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.


8. டான்சானியா, வெனெசுவேலா நாடுகளில் குருக்கள் கொலை

பிப்.19,2013. ஆப்ரிக்க நாடான டான்சானியாவில் ஒருவர், இலத்தீன் அமெரிக்க நாடான வெனெசுவேலாவில் ஒருவர் என இரண்டு கத்தோலிக்க குருக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
José Ramón Mendoza என்ற 44 வயதான அருள்பணியாளர் இஞ்ஞாயிறன்று கொலை செய்யப்பட்டுள்ளார். 2013ம் ஆண்டில் இதுவரை இலத்தீன் அமெரிக்காவில் 4 குருக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், டான்சானியாவின் சான்சிபார் பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்துவதற்காகச் சென்று கொண்டிருந்த 55 வயதான அருள்பணி Evarist Mushi என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்றுரைத்த சான்சிபார் ஆயர் Augustine Shao, காவல்துறை இது குறித்து விசாரித்து வருகிறது என்று ஃபிதெஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக உள்ளூர் தினத்தாள்களில் ஆயர்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் எதிராக, கொலை மிரட்டல்கள் வெளியாகிக் கொண்டிருப்பதையும் ஆயர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் அன்று சுடப்பட்ட Ambrose Mkenda என்ற அருள்பணியாளர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறிய ஆயர் Shao, 2012ம் ஆண்டில், 3 கத்தோலிக்க ஆலயங்களுக்கும் பிற கிறிஸ்தவ சபைகளின் பல ஆலயங்களுக்கும் தீ வைக்கப்பட்டன என்றும் கூறினார்.


9. மியான்மார் இராணுவம், சிறார்ப் படைவீரர்களை விடுதலை செய்திருப்பதற்கு ஐ.நா. பாராட்டு

பிப்.19,2013. மியான்மாரின் தேசிய இராணுவம், 24 சிறார்ப் படைவீரர்களை விடுதலை செய்திருக்கும் நடவடிக்கையை வரவேற்றுள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனம்.
மியான்மாரின் தேசிய இராணுவத்திலுள்ள சிறார்ப் படைவீரர்களை விடுதலை செய்யவும், அவர்களை மீண்டும் சமுதாயத்தோடு இணைக்கவும், எதிர்காலத்தில் சிறார்ப் படைவீரர்களைப் படையில் சேர்க்காதிருக்கவுமான செயல்திட்டம் ஒன்றில், ஐ.நா.வும், மியான்மார் அரசும் கடந்த ஜூனில் கையெழுத்திட்டன.
மியான்மார் அரசு, இந்தச் செயல்திட்டத்தின்படி தொடர்ந்து செயல்படுமாறு கேட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனம், சிறார் உரிமைகளை அதிகமாக மீறும் 14 நாடுகளில் மியான்மாரும் ஒன்று எனக் கூறியுள்ளது.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...