Tuesday 19 February 2013

மாற்றமடையும் இராஜதந்திரமும் – சிறிலங்கா மீதான இந்தியாவின் அழுத்தமும்

மாற்றமடையும் இராஜதந்திரமும் – சிறிலங்கா மீதான இந்தியாவின் அழுத்தமும்

சிறிலங்கா மீது இந்தியா கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா விவகாரம் தொடர்பில் கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த இந்தியா, சிறிலங்கா அரசாங்கத்துக்கு தற்போது சில எச்சரிக்கைகளை அனுப்ப ஆரம்பித்துள்ளது.
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 22வது கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது மற்றொரு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளமையும், சிறிலங்காவின் 65வது சுதந்திரதின நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆற்றிய உரையும் இந்தியாவை இவ்வாறு விழிப்படைய வைத்துள்ளது.
ஜெனிவாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா மீதான தீர்மானம் தொடர்பில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் மீளாய்வு செய்யப்படவுள்ளது. இதன் போது சிறிலங்கா மீது மற்றொரு தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வரவுள்ளதாக கடந்த மாதம் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்டக் குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், 13வது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கும் வகையில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை முற்றாக மறுத்து சிறிலங்காவின் 65வது சுதந்திரதின நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றியிருந்தார். இதன் போது இன ரீதியாக நாட்டை பிளவுபடுத்தும் எத்தகைய முயற்சிக்கும் இடமளிக்கமாட்டோம் எனவும் சிறிலங்கா ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்சவின் இந்த உரை காரணமாகவே அவர் அண்மையில் திருப்பதிக்கு சென்றிருந்த வேளை, அவரை RAWவின் பணிப்பாளர் அலோக் ஜோசி சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போது, இந்தியாவின் தரப்பில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கடுமையான செய்தி ஒன்று பரிமாறப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
சிறிலங்காவின் 65வது சுதந்திரதின நிகழ்வில் மஹிந்த ராஜபக்ச ஆற்றிய உரை மற்றும் 13வது திருத்தச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த தவறியமை தொடர்பிலான இந்தியாவின் அதிருப்தியை அலோக் ஜோசி சிறிலங்கா ஜனாதிபதியிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் மீது இந்தியா கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருகிறது.
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாது விட்டால், சிறிலங்கா மீது கொண்டு வரப்படும் எந்தத் தீர்மானத்துக்கும் இந்தியா ஆதரவு வழங்கும் என அந்நாட்டின் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கடந்த வாரம் கூறியிருந்தார்.
அதேவேளை, சிறிலங்கா மீதான தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கக் கோரி தி.மு.க வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் சிறிலங்கா மீதான புதிய தீர்மானம் தொடர்பில் என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து மத்திய அரசு குழப்பம் அடைந்துள்ளது.
இந்தியாவில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படவுள்ள சிறிலங்கா மீதான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகள் அழுத்தங்களை பிரயோகிக்க முடியும்.
சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு சமமான உரிமை வழங்கப்படும் வரை அந்நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கும் வகையில் ஐ.நாவில் இந்தியா தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் கவன ஈர்ப்புத் தீர்மானங்களைக் கொண்டுவர தி.மு.க அழுத்தம் கொடுக்க உள்ளதாகவும், சிறிலங்கா விவகாரம் குறித்து விவாதம் நடத்த அ.தி.மு.க கோரிக்கை விடுக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment