தாஜ் மஹால்
முகலாயப் பேரரசன் "ஷாஜஹான்" தனது மனைவி " மும்தாஜ் மஹல் " நினைவாகக் கட்டிய அன்பின் சின்னமே 'தாஜ் மஹால்'. யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள தாஜ் மஹால், ஓர் உலக அதிசயமாகவும், காதல் சின்னமாகவும், உலக கலாச்சார சின்னமாகவும் இருந்து வருகின்றது. 1631ம் ஆண்டு மும்தாஜ் தனது 14 வது பிள்ளையை பிரசவிக்கும் வேளையில் மரணத்தை தழுவிக்கொண்டபோது,
அந்த இழப்பைத் தாங்க முடியாமல் பலகாலம் துக்கத்தில் ஆழ்ந்திருந்த
ஷாஜஹானின் மனதில் இந்த நினைவுச்சின்னம் தோன்றியிருக்க வேண்டும். மும்தாஜ்
இறக்கும் முன்பாக தனது இறுதி ஆசையாக ஷாஜஹானிடம் கேட்டுக் கொண்டதுவே இந்த
"தாஜ் மஹால்" என சொல்பவர்களும் உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ் மஹால், 42 ஏக்கர் நிலப் பகுதியில் மிகவும் அரிதான வெள்ளை சலவைக் கற்களால் 1632 முதல் 1653ம் ஆண்டிற்கு இடைப்பட்ட 21 ஆண்டு காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. 22,000 வேலையாட்கள் , ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள், பல நிபுணர்கள் இரவுபகலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கியக் கட்டிடப்பணி 1648ம் ஆண்டும், சுற்றியுள்ள தோட்டமும் சிறு கட்டிடங்களின் பணிகளும் 1653ம் ஆண்டும் நிறைவுக்கு வந்தன.
இந்த மாபெரும் கட்டிடத்தின் அடித்தளம் 186 அடி சதுர பரப்பிலும் நிலத்தில் இருந்து 22 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மையான கோபுரம் 186 அடியும், நான்கு மூலைகளிலுமுள்ள கோபுரங்கள் 137 அடி உயரமும் உள்ளன.
தாஜ் மஹால் வெளிப்பகுதி முழுமையாக வெள்ளை சலவைக் கற்களாலும் உட்பகுதி 30 வித்தியாசமான நிறங்கள் கொண்ட கற்களின் கலை வேலைப்பாட்டுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
தாஜ்மஹால் முகப்பில் "குரான்" வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. முகப்பில் உள்ள இந்த புனித வரிகள் சாதாரண கண்களுக்கு ஒரே அளவில், அடியில் இருந்து 30 அடி மேலான உயரத்திலும் புலனாகும் வண்ணம் அற்புத கலை நுணுக்கம் கையாளப்பட்டுள்ளது.
1983ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், கலாச்சார மையம் (UNESCO) இதனை உலக்க் கலாச்சார சின்னமாக அறிவித்துள்ளது.
இந்த உலக அதிசயத்தினைப் பார்வையிட ஒவ்வோர் ஆண்டும் 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர்.
No comments:
Post a Comment