Wednesday 20 February 2013

சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்றது பிரித்தானியா! அம்பலப்படுத்தியது ‘இன்டிபென்டென்ட்‘ நாளேடு

சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்றது பிரித்தானியா! அம்பலப்படுத்தியது ‘இன்டிபென்டென்ட்‘ நாளேடு


மோசமான மனிதஉரிமைமீறல்கள் இடம்பெற்ற போதிலும், சிறிலங்காவுக்கு மில்லியன் கணக்கான பவுண்ட்ஸ் பெறுமதியான சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பிரித்தானியா கடந்த ஆண்டு விற்பனை செய்துள்ளதாக, பிரித்தானியாவின் ‘இன்டிபென்டென்ட்‘ நாளேடு குற்றம்சாட்டியுள்ளது.
இன்று வெளியாகியுள்ள ‘இன்டிபென்டென்ட்‘ நாளேட்டின் தலைப்புச் செய்தியிலேயே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கப் புள்ளிவிபரங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, குறைந்தது, 3 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான ஆயுதங்கள் கொழும்புக்கு விற்கப்பட்டுள்ளது.
கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகள், குண்டுதுளைக்காத உடற்கவசங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிறிலங்காவுக்கு விற்கப்பட்டுள்ளன.
மனிதஉரிமை மீறல்கள் காரணமாக, கவலைக்குரிய நாடாக சிறிலங்காவை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு பட்டியலிட்டுள்ள போதிலும் இந்த ஆயுதங்கள் விற்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட, கடந்த ஜுலை தொடக்கம் செப்ரெம்பர் வரையிலான காலாண்டுத் தரவுகளில் இருந்தே சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் விற்கப்பட்ட விபரம் தெரியவந்துள்ளது.
இதன்படி சிறிலங்காவுக்கு 3.741 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான ஏற்றுமதிக்கு பிரித்தானியா அனுமதி அளித்துள்ளது.
இதில் 3 மில்லியின் பவுண்ட்ஸ் இராணுவ தளபாடங்களாகும்.
2 மில்லியன் பெறுமதியான விற்பனை, “ML1” என்ற அடையாளத்தின் கீழ், சிறிய ஆயுதங்கள், என்ற வகைக்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜுலையில் ஒரு தடவையும், ஓகஸ்ட் மாதம் மூன்று தடவைகளும் என நான்கு சந்தர்ப்பங்களில் இந்த ஏற்றுமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மொத்தமாக, 600 தாக்குதல் துப்பாக்கிகள், 650 துப்பாக்கிகள், 100 கைத்துப்பாக்கிகள், 50 தாக்குதல் சொட் கண்கள், என்பனவற்றை விற்க பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் சிறிலங்காவுக்கு 330,000 பவுண்ட்ஸ் பெறுமதியான வெடிபொருட்களையும், 665,000 பவுண்ட்ஸ் பெறுமதியான குண்டு துளைக்காத உடற்கவசங்களையும் விற்கவும்,அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2008 தொடக்கம் 2012 ஜுன் வரையில், சிறிலங்காவுக்கு 12 மில்லியன் பவுண்டஸ் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசமான மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவுக்கு பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதை கண்டிக்கும் வகையிலும், சிறிலங்காவின் மோசமான மீறல்களை விபரித்தும் ‘இன்டிபென்டென்ட்‘ நாளேடு தனது இன்றைய விரிவான தலைப்புச்செய்தியை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment