Friday 22 February 2013

Catholic News in Tamil - 21/02/13

1. Conclave கர்தினால்கள் அவை பற்றிய திருஅவைச் சட்டங்களில் மாற்றம்

2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கானில் செலவிடும் இறுதி நாள் நேரடி ஒளிபரப்பு

3. Conclave கர்தினால்கள் அவையில் ஆசிய கர்தினால்களில் ஒருவர் இடம் பெறப்போவதில்லை

4. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய 14 கட்டுரைகள் ஒரு நூலாக விரைவில் வெளியாகும்

5. திருத்தந்தை ஆற்றிய உரைகளைக் கேட்டபின்னர், கடவுள் நம்பிக்கையற்ற தனக்கு கிறிஸ்தவத்தின் மீது ஓர் ஈர்ப்பு உருவானது - Lenin Raghuvanshi

6. திருத்தந்தையின் முடிவு, பதவி மீது பற்றற்ற நிலைபற்றிய நல்லதொரு பாடம் - புத்தமதப் பேராசிரியர்

7. "அகில உலக தினை ஆண்டு" துவக்க விழா

8. கொசுக்கள், வேதியல் பொருட்களுக்கு விரைவில் பழகிக் கொள்வதால் மருந்துகள் பயனற்று போகின்றன

------------------------------------------------------------------------------------------------------

1. Conclave கர்தினால்கள் அவை பற்றிய திருஅவைச் சட்டங்களில் மாற்றம்

பிப்.21,2013. புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் Conclave கர்தினால்கள் அவையை எப்போது துவக்கலாம் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் திருஅவைச் சட்டமாற்றம் ஒன்றை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வெளியிடலாம் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
Conclave எப்போது துவங்கும் என்று பத்திரிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் எழுப்பி வரும் கேள்விக்கு விடையளிக்கும்வண்ணம் இப்புதனன்று பேசிய அருள்தந்தை Lombardi,  கர்தினால்களின் கூட்டத்தைப் பற்றிய திருஅவைச் சட்டங்களில் திருத்தந்தை ஒரு சில மாற்றங்களைச் செய்வார் என்று எதிர்பார்க்கலாம் என்பதை மட்டும் தெளிவுபடுத்தினார்.
திருத்தந்தை இந்த மாற்றங்களை வெளியிடும்போது, Conclave கூடவேண்டிய நாள், இன்னும் Conclave குறித்த சில கேள்விகள் பற்றிய தெளிவுகள் கிடைக்கும் என்று அருள்தந்தை Lombardi எடுத்துரைத்தார்.


2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கானில் செலவிடும் இறுதி நாள் நேரடி ஒளிபரப்பு

பிப்.21,2013. பிப்ரவரி 28, வருகிற வியாழன், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கானில் செலவிடும் இறுதி நாள் என்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்பதால் அன்று திருத்தந்தை மேற்கொள்ளும் அனைத்து நிகழ்வுகளையும் உலக மக்கள் காணும்படி, அவற்றை ஒளிப்பதிவு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று வத்திக்கான் தொலைக்காட்சி நிறுவன இயக்குனர் கூறினார்.
பிப்ரவரி 28ம் தேதி மாலை 5 மணி முடிய திருத்தந்தை கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்ய 26 காமிராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தொலைக்காட்சி நிறுவன இயக்குனர் பேரருள் தந்தை Edoardo María Viganó கூறினார்.
திருத்தந்தையின் தனிமனித சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் பாதிப்பை உருவாக்காத வண்ணம் இந்த முக்கிய நிகழ்வு பதிவு செய்யப்படும் என்றும், இதனைக் காண உலக மக்கள் பலரும் ஆவலாக இருப்பதை உணர முடிகிறது என்றும் அருள்தந்தை Viganó எடுத்துரைத்தார்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நாளை பிற்காலத்தில் ஆய்வு செய்பவர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் பயன்படும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் அருள்தந்தை Viganó விளக்கம் அளித்தார்.
பிப்ரவரி 28ம் தேதி, வியாழனன்று மாலை 5 மணி அளவில் வத்திக்கானில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்ஃபோவை அடைந்ததும், அங்கு, அல்பானோ மறைமாவட்டத்தின் ஆயர் Marcello Semeraro வும், அந்நகர மக்களும் திருத்தந்தையை வரவேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


3. Conclave கர்தினால்கள் அவையில் ஆசிய கர்தினால்களில் ஒருவர் இடம் பெறப்போவதில்லை

பிப்.21,2013. திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடவிருக்கும் Conclave கர்தினால்கள் அவையில், 117 கர்தினால்களுக்குப் பதில் 116 பேரே பங்கேற்பர் என்று ஆசிய செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரும், ஆசிய கர்தினால்களில் ஒருவருமான கர்தினால் Julius Riyadi Darmaatmadja, உடல்நிலை காரணமாக Conclave அவையில் இடம் பெறப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
78 வயதான கர்தினால் Darmaatmadja, பார்வைத்திறன் மிகவும் குறைந்த நிலையில் இருப்பதால், Conclave அவையில் வழங்கப்படும் முக்கிய ஆவணங்களை வாசிக்க இயலாமல் இருப்பதை, தான் எடுத்த முடிவுக்கு முக்கிய காரணமாகக் கூறியுள்ளார்.
உடல்நிலை காரணமாக ஒருவர் பணியிலிருந்து விலகிக் கொள்வதை தான் நேரடியாக உணர்ந்தவர் என்ற முறையில், திருத்தந்தை அறிவித்த முடிவையும் தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று கர்தினால் Darmaatmadja எடுத்துரைத்தார்.


4. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய 14 கட்டுரைகள் ஒரு நூலாக விரைவில் வெளியாகும்

பிப்.21,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்குமுன், 1972ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை மனித இயலை மையமாக்கி, அவர் எழுதிய 14 கட்டுரைகள் ஒரு நூலாக விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Joseph Ratzinger ஒரு குருவாக, பேராயராக, பின்னர் கர்தினாலாக பணியாற்றிய ஆண்டுகளில் அகில உலக கத்தோலிக்க இதழான "Communio"வில் வெளியான அவரது கட்டுரைகள், மற்றும் உரைகளின் தொகுப்பிலிருந்து 14 கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
Hans Urs von Balthasar, Henri de Lubac, Jean-Luc Marion மற்றும் Joseph Ratzinger ஆகிய இறையியல் அறிஞர்கள் இணைந்து "Communio" என்ற இறையியல் இதழை 1972ம் ஆண்டு உருவாக்கினர்.
ஆண்டுக்கு நான்கு முறை வெளியாகும் இவ்விதழில் திருஅவை, மனித இயல், இறையியல் மறுமலர்ச்சி ஆகிய தலைப்புக்களில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.


5. திருத்தந்தை ஆற்றிய உரைகளைக் கேட்டபின்னர், கடவுள் நம்பிக்கையற்ற தனக்கு கிறிஸ்தவத்தின் மீது ஓர் ஈர்ப்பு உருவானது - Lenin Raghuvanshi

பிப்.21,2013. ஆன்மீகத் தலைவரான திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் படிப்பினைகளுக்கு செவிமடுப்பது மனித சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம் என்று மனித நல சிந்தனையாளரான ஓர் இந்தியர் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் பற்றிய கண்காணிப்புக் கழகம் என்ற அமைப்பை இந்தியாவின் வாரணாசியில் நடத்திவரும் மனித நல சிந்தனையாளர் Lenin Raghuvanshi, ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
தான் இந்து மதத்தில் பிறந்தவர் என்றாலும், அம்மதத்தில் சாதி முறைகள் பெரிதும் வலியுறுத்தப்பட்டு, தலித் மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதைக் கூறியதால் தான் இந்து மதத்தைவிட்டு விலகியதாகக் கூறிய Raghuvanshi, மதங்கள் மீது தனக்கிருந்த வெறுப்பு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் ஒரு சில உரைகளைக் கேட்ட பிறகு குறைந்தது என்று கூறினார்.
மனித உரிமைகளைப்பற்றி பேசுவதற்கு முன், ஒவ்வொரு மனிதருக்கும் உரிய அடிப்படை மதிப்பை அளிக்கவேண்டும் என்று ஐ.நா. அவையில் திருத்தந்தை பேசியது, தன்னைப் பெரிதும் கவர்ந்ததென்று கூறிய Raghuvanshi, திருத்தந்தை ஆற்றிய பல்வேறு உரைகளைக் கேட்டபின்னர் கடவுள் நம்பிக்கையற்ற தனக்கு கிறிஸ்தவத்தின் மீது ஓர் ஈர்ப்பு உருவானது என்பதையும் எடுத்துரைத்தார்.
அன்பும் பரிவும் நீதியோடு இணைந்து செல்லவேண்டும் என்று திருத்தந்தை தன் உரைகளில் சொல்லிவருவது கிறிஸ்துவின் மீது தனக்குள்ள மதிப்பைக் கூட்டியுள்ளது என்றும் Raghuvanshi கூறினார்.


6. திருத்தந்தையின் முடிவு, பதவி மீது பற்றற்ற நிலைபற்றிய நல்லதொரு பாடம் - புத்தமதப் பேராசிரியர்

பிப்.21,2013. பதவி மீது பற்றற்ற நிலையை உலகிற்கு எடுத்துரைக்கும் வண்ணம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமைப் பொறுப்பை விட்டு விலகுவது உலகிற்கு நல்லதொரு பாடம் என்று புத்த மதத்தைச் சார்ந்த பேராசிரியர் ஒருவர் கூறினார்.
தன் வலுவின்மையை உலகிற்கு பறைசாற்றி, ஒரு தலைவர் விலகுவது அனைவருக்குமே வழிகாட்டுதலாய் அமைந்துள்ளது என்று தாய்லாந்தைச் சேர்ந்த புத்தமத அறிஞரும் பேராசிரியருமான Channarong Boonnoon கூறினார்.
தனி மனிதர் மீது செலுத்தப்படும் கவனம், திருஅவை மீது திரும்ப வேண்டுமென்று திருத்தந்தை அறிவித்தது, தனி மனிதரின் எல்லைகளை நமக்கு மீண்டும் நினைவுறுத்துகிறது என்று பேராசிரியர் Boonnoon சுட்டிக் காட்டினார்.
திருத்தந்தையின் முடிவு தாய்லாந்து கிறிஸ்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், அவரது பணிவும், செப வாழ்வும் மக்களுக்கு ஓர் உந்து சக்தியாக உள்ளது என்று  ராஜ்ஜபுரி (Rajchaburi) மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்தந்தை Wongsawad Kaewsaenee கூறினார்.


7. "அகில உலக தினை ஆண்டு" துவக்க விழா

பிப்.21,2013. உணவற்ற நிலையால் உருவாகும் நோய்கள், பட்டினி, வறுமை ஆகிய குறைகளை நீக்க தினை என்ற தானிய வகை முக்கிய பங்காற்ற முடியும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் தலைமை இயக்குனர் José Graziano da Silva கூறினார்.
"அகில உலக தினை ஆண்டு" என்ற பெயரில் இப்புதனன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற துவக்க விழாவில், ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், பொலிவியாவின் அரசுத் தலைவர் Evo Morales, பெரு நாட்டின் அரசுத் தலைவரின் மனைவி Nadine Heredia Alarcón de Humala ஆகியோர் கலந்துகொண்டனர்.
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தினை, மக்களின் பசியைப் போக்கும் ஓர் எளிய, அதிக விலையற்ற தானிய வகை என்று FAO இயக்குனர் எடுத்துரைத்தார்.
4000 ஆண்டுகளுக்கு முன்னரே தென் அமெரிக்கப் பழங்குடியினர் மத்தியில் பழக்கத்தில் இருந்த இந்த தானிய வகையினால் மக்கள் மிகுந்த நலமுடன் வாழ்ந்தனர் என்ற வரலாற்று குறிப்புக்களும் இந்த விழாவில் கூறப்பட்டன.
பல்வேறு சுற்றுச்சூழலுக்கும், காலநிலை மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து வளரக்கூடிய தானிய வகை தினையென்றும், தற்போது ஆப்ரிக்காவின் கென்யா, மாலி நாடுகளில் இதன் வளர்ச்சி நம்பிக்கை அளிக்கிறது என்றும் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
"அகில உலக தினை ஆண்டில்" தினையைப்பற்றிய பொதுஅறிவை வளர்க்கும்வண்ணம் கல்வி மற்றும் கலை வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று FAO இயக்குனர் Graziano da Silva அறிவித்தார்.


8. கொசுக்கள், வேதியல் பொருட்களுக்கு விரைவில் பழகிக் கொள்வதால் மருந்துகள் பயனற்று போகின்றன

பிப்.21,2013. கொசுக்களை விரட்ட நாம் தோல்மீது பூசிக்கொள்ளும் பாதுகாப்பு மருந்துகளுக்கு கொசுக்கள் விரைவில் பழகிக் கொள்வதால் இந்த மருந்துகள் பயனற்று போகின்றன என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மஞ்சள் காய்ச்சல், டெங்கு போன்ற வியாதிகளைப் பரப்பும் Aedes aegypti என்ற கொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் Deet எனப்படும் பாதுகாப்பு மருந்தைக் குறித்து London School of Hygiene and Tropical Medicine நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கை இவ்வியாழனன்று வெளியானது.
கொசுக்களுக்கு எதிராக ஐக்கிய நாட்டு படைவீரர்கள் பயன்படுத்திய Deet எனப்படும் மருந்துக்கு Aedes aegypti வகை கொசுக்கள் விரைவில் பழகிக்கொள்வதால், அவை மனிதரை மீண்டும் தாக்கும் ஆபத்து உள்ளதென்று இந்த ஆய்வில் வெளியானது.
கொசுக்கள் பயன்படுத்தும் Antenna வகை நுண்ணுணர்வுக் கருவிகள் பல்வேறு வேதியல் பொருட்களுக்குப் பழக்கமடைந்துவிடுவதால், தடுப்பு மருந்துகள் பயனின்றி போகின்றன என்று இந்த ஆய்வை மேற்கொண்ட முனைவர் James Logan  கூறினார்.

No comments:

Post a Comment