Tuesday 19 February 2013

ஈழ இனப்படுகொலைக்கு ஒவ்வொரு தமிழனும் நியாயம் கேட்க வேண்டும்

ஈழ இனப்படுகொலைக்கு ஒவ்வொரு தமிழனும் நியாயம் கேட்க வேண்டும்

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஒவ்வொரு தமிழனும் நியாயம் கேட்க வேண்டும், கேட்போம் என்று மூத்த பத்திரிக்கையாளரும், திரைப்பட இயக்குநருமான புகழேந்தி தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் வெளியிட்ட அறிக்கை,
ஈழ மண்ணில் நிகழ்த்திய திட்டமிட்ட இனப்படுகொலை தொடர்பாக, வருகிற மார்ச் மாதம், ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், சர்வதேசத்தின் எதிர்ப்பைச் சந்திக்க இருக்கிறது இலங்கை. சென்ற ஆண்டு இலங்கை கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாததை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டித்துள்ள நிலையில், உலக அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
இந்த நிலையில், குறுக்குவழிகளில் இலங்கையைக் காப்பாற்றும் எந்த முயற்சியிலும் இறங்கக்கூடாதென்று இந்திய அரசை வலியுறுத்துகிறோம். ஜெனிவாவில் அமெரிக்கா முன்வைக்க உள்ள தீர்மானத்தை நீர்த்துப் போகவைக்கும் வேலையிலும் இறங்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த இக்கட்டான நிலையிலும், இந்தியா தன்னைக் காப்பாற்றிவிடும் என்று இலங்கை நம்புகிறது. அந்த நம்பிக்கையால்தான், சுதந்திர – சர்வதேச விசாரணை தேவையில்லை என்று அடம்பிடிப்பதுடன், இனப்படுகொலைக்கு இணையான அனைத்து அடக்குமுறைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தாய்த் தமிழகத்திலிருந்து, இலங்கையின் போக்குக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் அனைத்து அமைப்புகளையும், தமிழக படைப்பாளிகள் மற்றும் கலைஞர்கள் சார்பில் பாராட்டுகிறோம். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவர்களுடன் சேர்ந்து, எங்கள் தொப்புள்கொடி உறவுகளின் குரலை எதிரொலிக்கவே, நாங்கள் ஒன்று கூடியுள்ளோம். தமிழ்ச் சமூகத்தில் ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் படைப்பாளிகள் – கலைஞர்களுக்குக் கூடுதல் பொறுப்பு இருப்பதை உணர்ந்து, ஈழத்து உறவுகளுக்காக ஒருமித்த குரலில் பேசுகிறோம். தமிழ் ஈழ உறவுகளால் பெரிதும் போற்றப்பட்ட தமிழீழ கலை பண்பாட்டுக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர் – உணர்ச்சிப் பாவலர் – புதுவை ரத்தினதுரை முதலானோரும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் மற்றும் தளபதிகளும் 2009 மார்ச் மாதம் முள்ளிவாய்க்காலில் சரணடைந்தனர். அவர்கள் சித்திரவதைக் கொடுமைகளுக்குத் தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகின. சரணடைந்து 4 ஆண்டுகள் ஆனபிறகும், அவர்களது இருப்பு குறித்த உறுதியான தகவல் எதுவும் இதுவரை இல்லை. அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்கிற அச்சம் அதிகரித்து வருகிறது. அவர்கள் என்ன ஆனார்கள் என்கிற விவரத்தை இலங்கை அரசு உடனடியாக வெளியிடவேண்டும். ஈழத்தமிழரின் தாயகப் பகுதிகளான இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும், அப்பாவி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அளவுக்கு சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டது.
போர் முடிந்துவிட்டதாக இலங்கை அறிவித்தபிறகும், அங்கிருந்து ராணுவம் வெளியேறவில்லை. தமிழர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால், 6 தமிழருக்கு ஒரு சிங்களச் சிப்பாய் என்கிற அளவுக்கு ராணுவம் அங்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. அளவுக்கதிகமான ராணுவ நடமாட்டத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை அச்சத்துடனேயே நகர்கிற நிலை. வடகிழக்கில் ராணுவக் குவிப்பு கூடாது என்று தமிழ்ச் சமூகம் மட்டுமின்றி சர்வதேசமும் கோருகிறது. இலங்கையோ, ராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதாகச் சொல்லிக்கொண்டு, அதிகரித்துவருகிறது. வடக்கில், புதிய ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது இதை உறுதி செய்கிறது.
முள்வேலி முகாம்களிலிருந்து ஊர் திரும்பிய மக்கள், இருப்பதற்கும் விதைப்பதற்கும் கூட நிலமற்று நடுத்தெருவில் நிற்கிற நிலை. இதன்மூலம் அவர்களது வாழ்வாதாரம் முற்றுமுதலாகப் பறிக்கப்பட்டுள்ளது. போர் முடிவடைந்து 4 ஆண்டுகள் ஆகியும் முழுமையாக மீள் குடியேற்றம் நடைபெறவில்லை. இதுபோதாதென்று, தமிழரின் தாய்மண்ணிலேயே அவர்களைச் சிறுபான்மையினராக ஆக்கும் நோக்கில் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன.
தமிழரின் மொழி அடையாளத்தை அழிக்கும் நோக்கில், தமிழ்க் கிராமங்களின் பெயர்கள் சிங்களத்தில் மாற்றப்பட்டு வருகின்றன. தமிழரின் பாரம்பரிய வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்படுகின்றன. தமிழ்மக்களின் தனிப்பட்ட சொந்தக் காணிகள் அரசால் பறிமுதல் செய்யப்படுவதையும், தமிழரின் கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்குடன் செய்யப்படும் கட்டாய சிங்கள – பௌத்த மயமாக்கலையும் கண்டிக்கிறோம்.
இந்த இழிவான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிடும்படி வலியுறுத்துகிறோம். தமிழரின் தாயகப் பகுதிகளில், தமிழ்ச் சகோதரிகள் மீதான பாலியல் வன்முறை தொடர்கிறது. அதிலும் குறிப்பாக, முன்னாள் பெண் போராளிகள் என்று ராணுவத்தால் கருதப்படுவோர் கொடும் வன்முறைக்கு ஆளாகிவருகின்றனர். ´கற்பழிப்பை ஒரு ஆயுதமாகவே இலங்கை ராணுவம் பயன்படுத்துகிறது´ என்று கிரனெடாவின் கிமாலிபிலிப் முதலான பெண்ணியவாதிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் பிரிட்டனிலிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட பெண்அகதிகள் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் கொடுமை சர்வதேசத்தின் மனசாட்சியையும் உலுக்கியிருக்கிறது. பெண் இனத்துக்கு எதிரான இலங்கை இனவெறி ராணுவத்தின் இந்த ஈவிரக்கமற்ற அரக்கத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.
மாவீரர் தின நிகழ்ச்சியை அமைதியாக நடத்திய யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதும், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்ததும், ஆயுதப் போராட்டத்துக்கு மாணவர்களைத் தூண்டிய முந்தைய அரசுகளின் பாதையிலேயே ராஜபக்ஷ அரசு செல்வதைக் காட்டுகிறது. சட்டவிரோதக் கைதுகள், தடுப்புக் காவலில் உள்ளோர் மீதான சித்ரவதை போன்ற இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை இலங்கை இனவாத அரசு இனியாவது கைவிடவேண்டும். யாழ்.தினக்குரல், உதயன் போன்ற தமிழ்ப் பத்திரிகைகளையும், உண்மையை எழுதும் ஆங்கிலப் பத்திரிகைகளையும் இலங்கை அரசு குறுக்குவழிகளில் மிரட்டி வருகிறது. பத்திரிகையாளர்கள் தொடந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கையின் தமிழின அழிப்பு நடவடிக்கையை அம்பலப்படுத்தி வரும் ஸ்ரீதரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மீது பொய்க் குற்றங்களைச் சுமத்தி அச்சுறுத்தி வருகிறது இலங்கை. ஜனநாயகத்தின் மீதான இந்தத் தாக்குதலைக் கடுமையாக எதிர்க்கிறோம். 2009ல் இலங்கையில் நடந்தது போர் அல்ல, இனப்படுகொலை.
நடந்த இனப்படுகொலை தொடர்பான சுதந்திரமான பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை தேவை – என்கிற உலக நாடுகளின் கோரிக்கையை இலங்கை அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அப்படியொரு நடுநிலையான விசாரணையைத் தவிர்ப்பதற்காகத்தான், கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணையம் என்கிற பெயரில் தன் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளை தானே விசாரித்துக் கொள்வதாகப் போக்குக் காட்டி, 4 ஆண்டுகள் இழுத்தடித்திருக்கிறது இலங்கை. நல்லிணக்க ஆணையத்தின் விசாரணை ஒரு மோசடி என்பதை இந்த வாரம் வெளியாகியுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலக அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. உள்நாட்டு அதிகாரிகளின் விசாரணை தெளிவாகவோ நடுநிலையாகவோ நம்பகமானதாகவோ இல்லை – என்று குற்றஞ்சாட்டுகிறது அது. ´அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் – என்று வாக்குறுதி அளித்த இலங்கை, அந்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை´ என்கிறது அது.
இனப்படுகொலையைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டது என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. தடுக்கத் தவறினார்களா, அல்லது தெரிந்தே உதவினார்களா என்கிற கேள்வி வலுவடைந்து வருகிறது. இனப்படுகொலையில் ஐ.நா.வுக்கும் பங்கிருக்கிறது – என்கிற இந்தக் குற்றச்சாட்டு சர்வதேசத்தின் மனசாட்சியையும் தட்டி எழுப்பி இருக்கிறது. தவறிழைத்த ஐ.நா.வின் உயர் பதவிகளில் இருப்போர் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டால்தான் இதுபற்றிய உண்மை வெளியாகும். இலங்கையில் தமிழரும் சிங்களரும் சேர்ந்து வாழவேண்டும், அதே சமயம் அதிகாரப் பகிர்வு எதையும் தமிழர் எதிர்பார்க்கக் கூடாது என்று போதிக்கிறது இலங்கை. கொல்லப்பட்டோர் வாழ முடியுமா கொலைகாரருடன் – என்று திருப்பிக் கேட்கிறது தமிழ்ச் சமூகம்.
உலக நாடுகளின் மேற்பார்வையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களிடமும், புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ்ச் சொந்தங்களிடையேயும் ´தனித் தமிழ் ஈழம்´ தொடர்பான ஒரு பொது வாக்கெடுப்பு காலத்தின் தேவை ஆகிறது. அதற்கான முயற்சிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படவேண்டும். இனவெறி இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், ஜெனிவா மாநாட்டில் அமெரிக்காவும் அதை வலியுறுத்தப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆணவப் போக்குடனேயே நடந்துகொள்ளும் இலங்கையை வழிக்குக் கொண்டுவர, பொருளாதாரத் தடை விதிப்பது அவசியம் என்று கருதுகிறோம். உலக நாடுகளுக்கு வழிகாட்டும் விதத்தில், இலங்கைக்கு இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க தமிழக அரசு முழுமூச்சோடு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார் தங்கராஜ்.

No comments:

Post a Comment