Wednesday, 6 February 2013

Catholic News in Tamil - 06/02/13

1. வழிபாடும், செபமும் மக்களை ஒன்றிணைத்து, அவர்களிடையே நம்பிக்கையையும், அன்பையும் வளர்க்கிறது - கர்தினால் Telespore Toppo

2. 'பேதுருவின் பாதை' என்ற தலைப்பில் உரோம் நகரில் நடைபெறும் கண்காட்சி

3. பேராயர் சாக்கோ தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது, ஈராக்கில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும் - அருள்தந்தை Halemba

4. இலங்கையின் சுதந்திரதினத்தையொட்டி, 2000 கிறிஸ்தவர்கள் கடைபிடித்த துக்க நாட்கள்

5. இங்கிலாந்தின் பல்சமயத் தலைவர்கள் மேற்கொள்ளும் Jubilee for Justice முயற்சி

6. குழந்தைகளுக்காக வெளியிடப்பட்ட அன்னை தெரேசா புத்தகம்

7. காடுகளின் பயனை உணராத பல நாடுகளின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது - ஐ.நா. உயர் அதிகாரி

8. கடவுள் எனக்கு கொடுத்த இரண்டாவது வாழ்க்கை: முதன் முறையாக மலாலா பேட்டி

------------------------------------------------------------------------------------------------------

1. வழிபாடும், செபமும் மக்களை ஒன்றிணைத்து, அவர்களிடையே நம்பிக்கையையும், அன்பையும் வளர்க்கிறது - கர்தினால் Telespore Toppo

பிப்.06,2013. வழிபாடும், செபமும் மக்களை ஒன்றிணைத்து, அவர்களிடையே நம்பிக்கையையும், அன்பையும் வளர்க்கிறது; எனவேதான், திருஅவையை ஒரு வழிபடும், செபிக்கும் குடும்பம் என்று அழைக்கிறோம் எனக் கூறினார் இந்திய இலத்தீன் ரீதி கத்தோலிக்க ஆயர்கள் பேரவைத் தலைவரான கர்தினால் Telespore Toppo.
பிப்ரவரி 5, இச்செவ்வாய் முதல் வருகிற ஞாயிறு முடிய தமிழகத்தின் வேளாங்கண்ணி அன்னைமரியா திருத்தலத்தில் நடைபெற்றுவரும் இந்திய இலத்தீன் ரீதி கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 25வது கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் Toppo, இவ்வாறு கூறினார்.
இந்தியாவில் மக்கள்தொகையினால் உருவாகும் சக்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மை அனைத்தையும் ஆயர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர் என்று இக்கூட்டத்தில் பேசப்பட்டது.
கடந்து சென்ற 2012ம் ஆண்டில் இந்திய சமுதாயத்தில் நிகழ்ந்த சம்பவங்களை அலசுகையில், ஊழலை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஜன் லோக்பால் மசோதாவுக்கும், ஆண்-பெண் உறவில் காணவேண்டிய சமத்துவத்திற்கும் மக்கள் அளித்த ஆதரவு, நிறைவைத்தரும் ஒரு போக்கு என்று ஆயர்கள் கூறினர்.
சாதி, மதம், மொழி, கலாச்சாரம் என்ற அனைத்து பாகுபாடுகளையும் கடந்து அனைத்து மக்களுக்கும் பணிபுரியும் வழிகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக, CCBI செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இக்கூட்டத்தின் சிறப்பு அம்சங்களாக, CCBI எனப்படும் இந்திய இலத்தீன் ரீதி கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 25ம் ஆண்டு நிறைவும், வேளாங்கண்ணி அன்னை மரியா திருத்தலம் 1962ம் ஆண்டு மைனர் பசிலிக்கா என அறிவிக்கப்பட்டதன் பொன்விழாவும் கொண்டாடப்படுகின்றன.
இந்தப் பொன்விழாவையொட்டி, வேளாங்கண்ணியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள காலை விடிவெள்ளி ஆலயம் பிப்ரவரி 10, வருகிற ஞாயிறன்று திருத்தந்தையின் பிரதிநிதியாக இக்கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் நற்செய்தி அறிவிப்புப் பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni அவர்களால் அர்ச்சிக்கப்படும்.

2. 'பேதுருவின் பாதை' என்ற தலைப்பில் உரோம் நகரில் நடைபெறும் கண்காட்சி

பிப்.06,2013. விசுவாசம் என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் அர்ப்பணம் மட்டுமல்ல, மாறாக கடவுளைத் தேடும் அனைவர் உள்ளத்திலும் விதைக்கப்பட்டுள்ள ஓர் ஆவல் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பிப்ரவரி 7, இவ்வியாழன் முதல், மே மாதம் முதல் தேதி முடிய உரோம் நகரின் Castel Sant'Angelo என்ற நினைவு மண்டபத்தில், 'பேதுருவின் பாதை' என்ற தலைப்பில் நடைபெறும் ஒரு கண்காட்சியைக் குறித்து, புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella, செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்விதம் கூறினார்.
நம்பிக்கை ஆண்டின் ஒரு முக்கிய முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் நான்காம் நூற்றாண்டிலிருந்து 20ம் நூற்றாண்டு முடிய ஒவ்வொரு நூற்றாண்டிலும் பாதுகாக்கப்பட்டுள்ள பல கலைப் பொருட்களும், ஆவணங்களும் இடம்பெறுகின்றன.
ஒன்பது நாடுகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, அனைத்து வயதினரையும் ஈர்க்கும்வண்ணம் அமைந்துள்ளதென்று பேராயர் Fisichella கூறினார்.
கலைநயம் மிக்க இந்தக் கண்காட்சி, உண்மை அழகு கடந்துசெல்லக் கூடியது அல்ல என்பதை நமக்கு நினைவுறுத்தும் என்றும் பேராயர் எடுத்துரைத்தார்.

3. பேராயர் சாக்கோ தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது, ஈராக்கில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும் - அருள்தந்தை Halemba

பிப்.06,2013. கல்தேய ரீதி கத்தோலிக்கத் திருஅவையின் புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் நியமன ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பேராயர் லூயிஸ் சாக்கோ, அப்பொறுப்பிற்குத் தகுதியான மனிதர் என்று அருள்தந்தை Andrzej Halemba கூறினார்.
பிப்ரவரி 2, கடந்த சனிக்கிழமையன்று திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்ட பேராயர் லூயிஸ் சாக்கொவைக் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய Aid to the Church in Need பிறரன்பு அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அருள்தந்தை Halemba இவ்வாறு கூறினார்.
பேராயர் சாக்கோ தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது, ஈராக்கில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும் என்று கூறிய அருள்தந்தை Halemba, பேராயரின் பணி இன்னும் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எடுத்துரைத்தார்.
1987ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கின்படி, ஈராக்கில் 14 இலட்சம் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். இவ்வெண்ணிக்கை படிப்படியாகக் குறைத்து, பத்தாண்டுகளுக்கு முன்னர் 8 இலட்சமாகவும், தற்போது 3 இலட்சமாகவும் உள்ளதென்று ICN கத்தோலிக்கச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

4. இலங்கையின் சுதந்திரதினத்தையொட்டி, 2000 கிறிஸ்தவர்கள் கடைபிடித்த துக்க நாட்கள்

பிப்.06,2013. பிப்ரவரி 4, இத்திங்களன்று இலங்கையில் கொண்டாடப்பட்ட 65வது சுதந்திரதினத்தையொட்டி, 2000 கிறிஸ்தவர்கள் இத்திங்கள், செவ்வாய் ஆகிய இருநாட்களைத் துக்க நாட்களாகக் கடைபிடித்தனர்.
ஆங்கலிக்கன் கிறிஸ்தவ சபையால், கொழும்புவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட 2000க்கும் அதிகமானோர் அனைவரும் வெள்ளை உடை அணிந்து தங்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தில் புத்தமதக் குருக்கள், கத்தோலிக்க குருக்கள் மற்றும் அருள்சகோதரிகளும் கலந்து கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த அனைத்து மக்களும் இலங்கையில் ஒன்றிணைந்து வாழ்வதே இந்நாட்டில் உண்மையான விடுதலை நிலவுகிறது என்பதற்கு ஓர் அடையாளம் என்று கொழும்புவில் உள்ள ஆங்கலிக்கன் ஆயர் Dhiloraj Canagasabey கூறினார்.
இலங்கையில் தற்போது நிலவும் பாகுபாடுகள் நிறைந்த நிலையைக் கண்டு, கிறிஸ்தவர்கள் அமைதி காப்பது, நமது கிறிஸ்தவ நிலைப்பாட்டைக் காட்டிக் கொடுக்கும் வழியாகும் என்று ஆயர் Canagasabey எடுத்துரைத்தார்.

5. இங்கிலாந்தின் பல்சமயத் தலைவர்கள் மேற்கொள்ளும் Jubilee for Justice முயற்சி

பிப்.06,2013. உலகில் நிலவும் ஏழ்மைக்கு ஏழைகளைக் காரணம் காட்டுவது தவறு; இந்த எண்ணத்திலிருந்து விடுபட்டு, ஏழ்மையை ஒழிக்கும் முயற்சிகளை அனைவரும் இணைந்து மேற்கொள்ளவேண்டும் என்று இங்கிலாந்தின் பல்சமயத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
பிரித்தானியாவிலும், உலகெங்கும் கடன்பட்டிருக்கும் மக்களின் கடனை இரத்து செய்யவேண்டும் என்று பிரித்தானிய பாராளு மன்றத்தில் நடைபெற்று வரும் விவாதங்களில் இச்செவ்வாயன்று பல்வேறு சமயத் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
Jubilee for Justice என்ற தலைப்பில் பல்சமயத் தலைவர்கள் இணைந்து மேற்கொண்டு வரும் முயற்சியின் ஓர் அங்கமாக, பல்சமயத் தலைவர்கள் இணைந்து அரசுத் தலைவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இக்கடிதத்தில் 400க்கும் அதிகமானத் தலைவர்கள் தங்கள் கையொப்பம் இட்டு, ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
வறியோருக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் கடவுள் அளித்த பிறரன்பு கட்டளையின் அடிப்படையில் அல்ல, மாறாக, நீதியின் அடிப்படையில் என்பதை உலக அரசுகள் உணரவேண்டும் என்று இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

6. குழந்தைகளுக்காக வெளியிடப்பட்ட அன்னை தெரேசா புத்தகம்

பிப்.06,2013. CTS (Catholic Truth Society) எனப்படும் கத்தோலிக்க உண்மைக் கழகம் முத்திபேறு பெற்ற அன்னை தெரேசா மற்றும் புனித கிளாரா ஆகியோரின் வாழ்வை விளக்கும் இரு புத்தகங்களைக் குழந்தைகளுக்காக வெளியிட்டுள்ளது.
5 வயது முதல் 7 வயது முடிய உள்ள குழந்தைகள் படித்து பயன்படக் கூடிய வகையில் அமைந்துள்ள இந்நூல்கள் வரிசையில் ஏற்கனவே புனித யோசேப்பு, புனித ஜான் மரியா வியான்னி, முத்திபேறு பெற்ற இரண்டாம் ஜான் பால் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் வெளியாகியுள்ளன.
Elena Pascoletti என்பவரால் எழுதப்பட்டு, Giusi Capizzi என்பவரால் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ள அன்னை தெரேசாவின் கதை, அல்பேனியாவில் வளர்ந்த அவர் குழந்தைப் பருவத்திலிருந்து ஆரம்பமாகிறது.
எளிதான வகையில் புனிதர்களின் வாழ்வை வழங்குவதால், குழந்தைகளை விசுவாச வாழ்வில் வளர்க்க முடியும் என்ற நோக்கத்துடன் இந்நூல்களின் வரிசை வெளியிடப்படுவதாக ICN கத்தோலிக்க செய்திக் குறிப்பு கூறுகிறது.

7. காடுகளின் பயனை உணராத பல நாடுகளின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது - ஐ.நா. உயர் அதிகாரி

பிப்.06,2013. காடுகளைப் பேணி வளர்ப்பது பல குழுமங்களுக்கும், தொழில்களுக்கும் உறுதுணையாக இருக்கும் என்பதை உலகின் பல நாடுகள் இன்னும் உணரவில்லை என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
காடுகளின் பயனை உணராத பல அரசுகள், காடுகளை அழிக்கும் வகையில் சட்டங்கள் இயற்றுவதால் அந்நாட்டின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் (FAO) இயக்குனர்களில் ஒருவரான Eduardo Mansur கூறினார்.
FAO இச்செவ்வாயன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் காடுகளைக் காக்கும் பத்து கூடுதலான வழிகள் கூறப்பட்டுள்ளன.
மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் பயன்படும் எரிபொருள், உணவு, மரங்கள், போன்ற பொருட்களும், அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் காபி, தேநீர், இரப்பர் போன்ற பொருட்களும் இன்னும் சிறந்த முறையில் கிடைக்க, காடுகளைப் பாதுகாப்பது அவசியம் என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

8. கடவுள் எனக்கு கொடுத்த இரண்டாவது வாழ்க்கை: முதன் முறையாக மலாலா பேட்டி

பிப்.06,2013. இது கடவுள் எனக்கு வழங்கியுள்ள இரண்டாவது வாழ்க்கை, இந்த வாழ்க்கையின் மூலம் நான் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்; ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு பெண்ணும் கல்வியறிவை பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று பாகிஸ்தான் இளம் மாணவி Malala Yousufzai கூறினார்.
கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி Malala Yousufzaiவைத் தலிபான்கள் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 9ம் தேதி துப்பாக்கியால் சுட்டனர். உயிருக்குப் போராடிய பாகிஸ்தான் மாணவி மலாலா, இலண்டனில் நடத்தப்பட்ட சிகிச்சைக்குப் பின்பு உடல் தேறி வருகிறார்.
இந்நிலையில், முதன் முதலாக ஊடகத்தினருக்கு மலாலா அளித்த பேட்டி இத்திங்களன்று ஒளிபரப்பட்டது. கீழ் உதட்டுடன் மேல் உதடு சரியாக பொருந்தாத நிலையில் சிரமப்பட்டு, ஆனால், தெளிவாக பேசிய மலாலா, தான் உயிரோடு இருப்பதற்கு முக்கியக் காரணம் உலகெங்கும் மக்கள், சிறப்பாக, பெண்கள் எழுப்பிய செபங்களே என்று கூறினார்.
பெண் கல்விக்காக மலாலா நிதி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய மலாலா, கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்புக்கு, பாகிஸ்தானில் இருந்து மட்டும் ரூ. 53 கோடி நிதி சேர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
மலாலாவின் தலையில் ஏற்பட்ட காயங்களுக்காக மேலும் 2 அறுவை சிகிச்சைகள் கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்தது.
தற்போது, இலண்டனில் வசித்து வரும் 15 வயதான மலாலாவின் பெயர் உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...