Tuesday, 12 February 2013

Catholic News in Tamil - 12/02/13

1. வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தையின் திருநீற்றுப்புதன் திருப்பலி

2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பாப்பிறைப் பணிக்காலம் எப்பொழுதும் விண்மீனாகச் சுடர்விடும் கர்தினால் சொதானோ

3. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பதவி விலகல் அறிவிப்பு, உலகின் தலைவர்கள் அதிர்ச்சி

4. மும்பை கர்தினால் : திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பதவி விலகல் அறிவிப்பு கேட்டு அதிர்ச்சி, கவலை

5. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பதவி விலகல் அறிவிப்பு குறித்து முஸ்லீம் தலைவர்கள்

6. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பல்சமய உரையாடலுக்கு அர்ப்பணித்திருந்தவர், ஐ.நா.பொதுச் செயலர் பாராட்டு

7. புனித ஆல்பர்ட் கல்லூரி திருஅவையின் தேவைகளுக்குத் தொடர்ந்து பணியாற்ற கர்தினால் ஃபிலோனி வாழ்த்து

8. தண்ணீரை நிர்வகிப்பதில் நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பு அவசியம், ஐ.நா.

------------------------------------------------------------------------------------------------------

1. வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தையின் திருநீற்றுப்புதன் திருப்பலி

பிப்.12,2013. பிப்ரவரி 13, இப்புதனன்று தொடங்கும் திருநீற்றுப்புதன் திருப்பலியை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இப்புதன் உரோம் நேரம் மாலை 5 மணிக்குத் தொடங்குவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் Aventino குன்றிலுள்ள புனித Sabina ஆலயத்தில் திருநீற்றுப்புதன் திருப்பலியை வழக்கமாக நிகழ்த்தும் திருத்தந்தை இவ்வாண்டின் இத்திருப்பலியை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் நிகழ்த்துவார் எனத் திருப்பீடம் அறிவித்துள்ளது.
முதுமை காரணமாக, தான் பாப்பிறைப் பதவியிலிருந்து விலகுவதாக இத்திங்களன்று அறிவித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இம்மாதம் 28ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணிக்கு பதவி விலகுகிறார். தினமும் இரவு 8 மணிக்கு, தனது அன்றாடப் பணிகளை முடிக்கும் திருத்தந்தை, அதன்பின்னர் செபம், தியானம், வாசிப்பு ஆகிய தனிப்பட்ட காரியங்களைச் செய்து உறங்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
மார்ச் முதல் தேதியிலிருந்து புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் தற்போதைய திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே தலைமையில் தொடங்கப்படும். திருப்பீடம் திருத்தந்தையின்றி காலியாக இருக்கும்போது அதனை நிர்வாகம் செய்வதற்குப் பொறுப்புடைய Camerlengoவாகச் செயல்படுவதற்கு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கர்தினால் பெர்த்தோனே அவர்களை 2007ம் ஆண்டில் நியமித்தார்.


2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பாப்பிறைப் பணிக்காலம் எப்பொழுதும் விண்மீனாகச் சுடர்விடும் கர்தினால் சொதானோ

பிப்.12,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பாப்பிறைப் பணிக்காலம் எப்பொழுதும் விண்மீனாகச் சுடர்விடும் என்று கர்தினால் ஆஞ்சலோ சொதானோ கூறினார்.
இத்திங்கள் காலை 11 மணிக்குத் திருப்பீடத்தில் தொடங்கிய, மூன்று பேரை புனிதர் நிலைக்கு உயர்த்துவது குறித்த கர்தினால்கள் அவை கூட்டத்தின் முடிவில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது பதவி விலகலை வாசித்து முடித்தவுடன் இவ்வாறு தெரிவித்தார் கர்தினால் சொதானோ. வானிலுள்ள விண்மீன்கள் எப்பொழுதும் சுடர்விட்டுக் கொண்டிருக்கும், அதேபோல் திருத்தந்தையே, உமது பாப்பிறைப் பணிக்காலம் எம் மத்தியில் எப்பொழுதும் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.
திருத்தந்தையின் இந்த அறிவிப்பை ஆச்சரியத்துடனும், ஏறத்தாழ நம்பமுடியா நிலையிலும் தான் கேட்டுக் கொண்டிருந்ததாக உரைத்த, கர்தினால்கள் அவைத் தலைவராகிய கர்தினால் சொதானோ, கடவுளின் புனிதத் திருஅவை மீது திருத்தந்தை எப்பொழுதும் மிகுந்த பாசம் வைத்திருப்பதை உணர முடிகின்றது என்றும் தெரிவித்தார்.
2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதியன்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அதை அவர் ஏற்றுக்கொள்கிறாரா என்று தான் கேட்டதை நினைவுகூர்ந்த கர்தினால் சொதானோ, மரியாவைப் போன்று ஆகட்டும் என்று சொல்லி, திருஅவையின் 2000 ஆண்டு வரலாற்றில் 265வது திருத்தந்தையாகப் பிரகாசமான பாப்பிறைப் பணியை அவர் தொடங்கியதையும் குறிப்பிட்டார்.


3. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பதவி விலகல் அறிவிப்பு, உலகின் தலைவர்கள் அதிர்ச்சி

பிப்.12,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது பதவி விலகலை அறிவித்ததைக் கேட்டு ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஓசியானியா, அமெரிக்கா என அனைத்துக் கண்டங்களின் சமய மற்றும் அரசியல் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
85 வயதாகும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் நலவாழ்வுக்காகச்  செபிப்பதாக உரைத்துள்ள கத்தோலிக்கத் தலைவர்கள், அவர் திருஅவைக்கு ஆற்றியுள்ள மகத்தான பணிகளைப் பாராட்டியுள்ளனர்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருஅவை மீது கொண்டிருக்கும் அன்பே அவர் இந்த முடிவை எடுக்க முக்கிய காரணமாக இருக்கின்றது எனவும் உலகின் கத்தோலிக்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
திருஅவை சந்திக்கும் சவால்களையும், அத்திருஅவையை வழிநடத்தவும், நற்செய்தியை அறிவிக்கவும் உடலும் மனமும் வலிமையோடு இருக்க வேண்டியது அவசியம் என்பதையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நன்றாக அறிந்து வைத்துள்ளார் என்றுரைத்த இங்கிலாந்து பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ், அவரின் துணிச்சலுக்கும் இந்தத் தீர்மானத்துக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், இது விசுவாசத்தின் தீர்மானம் என்று ஹொண்டூராஸ் கர்தினால் Oscar Rodriguez Maradiaga கூறியுள்ளார்.


4. மும்பை கர்தினால் : திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பதவி விலகல் அறிவிப்பு கேட்டு அதிர்ச்சி, கவலை

பிப்.12,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனது பதவி விலகலை அறிவித்ததைக் கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்ததாக, இந்திய ஆயர் பேரவைத் தலைவரான மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
திருத்தந்தை தனது பதவி விலகலுக்குக் கொடுத்திருக்கும் காரணம், அவர் திருஅவை மீது கொண்டிருக்கும் அன்பைத் தெளிவாகக் காட்டுகின்றது என்று, கர்தினால் கிரேசியஸ் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.
கடந்த 600 ஆண்டுகளில் நடந்திராத ஒன்றை திருத்தந்தை செய்திருப்பது அவரின் துணிச்சலையே காட்டுகின்றது என்றும், அவர் ஒரு திறமையான இறையியல் வல்லுனர், அவரது ஒவ்வோர் உரையும் புதிய உள்தூண்டுதல்களைக் கொடுத்துள்ளன என்றும் கர்தினால் கிரேசியஸ் கூறியுள்ளார்.
சமய மற்றும் உலக விவகாரங்களில் தெளிவான எண்ணத்தைக் கொண்டிருப்பவர் என்றும், விசுவாசம், அறநெறி சார்ந்த விவகாரங்களில் உண்மையைப் பேசுவதில் அஞ்சாதவர் மற்றும் துணிச்சலானவர் என்றும், இந்நவீன காலத்தில் மாபெரும் ஆன்மீகத் தலைவர் என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்டைப் பாராட்டியுள்ளார் மும்பை கர்தினால் கிரேசியஸ்.


5. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பதவி விலகல் அறிவிப்பு குறித்து முஸ்லீம் தலைவர்கள்

பிப்.12,2013. இந்தோனேசிய கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் தலைவர்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பதவி விலகல் அறிவிப்பு கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பல்சமய உரையாடலுக்கு கொடுத்த ஆதரவு, அவர்மீது இந்தோனேசிய முஸ்லீம்களுக்குப் பெரும் மதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், புதிய திருத்தந்தையும் பல்சமய உரையாடலுக்கு ஊக்கம் அளிப்பார் எனத் தாங்கள் நம்புவதாகவும்  முஸ்லீம் தலைவர்கள் கூறியுள்ளனர்.
திருத்தந்தை 16ம் பெனடிக்டின் தீர்மானம் நேர்மையானது, அது மிகுந்த மதிப்போடும் பாராட்டோடும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


6. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பல்சமய உரையாடலுக்கு அர்ப்பணித்திருந்தவர், ஐ.நா.பொதுச் செயலர் பாராட்டு

பிப்.12,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பல்சமய உரையாடலுக்கும், அனைத்துலக அமைதிக்கும் தன்னை அர்ப்பணித்திருந்தவர் என ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் பாராட்டியுள்ளார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் பொறுப்பிலிருந்து இம்மாத இறுதியில் விலகும் செய்தி குறித்த தனது கருத்தை வெளியிட்ட பான் கி மூன், 2008ம் ஆண்டு ஏப்ரலில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஐ.நா. தலைமையகத்துக்குச் சென்று உரையாற்றியதை நினைவுகூர்ந்துள்ளார்.
நாடுகள் மற்றும் சமூகங்கள் மத்தியில் நிலவும் சமத்துவமின்மையை நீக்கவும், சமூகப் பாதுகாப்பை அதிகரிக்கவும் முக்கிய யுக்தியாக இருப்பது மனித உரிமைகளை ஊக்குவிப்பதே என, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஐ.நா.வில் உரையாற்றியதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார் பான் கி மூன்.


7. புனித ஆல்பர்ட் கல்லூரி திருஅவையின் தேவைகளுக்குத் தொடர்ந்து பணியாற்ற கர்தினால் ஃபிலோனி வாழ்த்து

பிப்.12,2013. திருஅவையின் மிக முக்கிய திருப்பணிகளில் ஒன்றாக, துறவற மற்றும் பொதுநிலையினர் பயிற்சிகளோடு, வருங்கால குருக்களை உருவாக்கும் குருத்துவப் பயிற்சியும் இருக்கின்றது என்று கர்தினால் பெர்னாண்டோ ஃபிலோனி கூறினார்.
இம்மாதம் 9ம் தேதி முதல் இந்தியாவில் ஒரு வாரச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவரும் திருப்பீட நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் கர்தினால் ஃபிலோனி, இராஞ்சி புனித ஆல்பர்ட் குருத்துவக் கல்லூரியின் நூறாவது ஆண்டு விழாவில் இச்செவ்வாயன்று உரையாற்றிய போது இவ்வாறு கூறினார்.
புனித ஆல்பர்ட் குருத்துவ கல்லூரியின் குருத்துவ மாணவர்களுக்கு உரையாற்றிய கர்தினால் ஃபிலோனி, பல கலாச்சாரங்கள் அழியும் ஆபத்தை எதிர்நோக்கி வரும் இக்காலத்தில் குருக்கள் தங்களது சொந்தக் கலாச்சாரத்திலும் நற்செய்தி விழுமியங்களிலும் வேரூன்றி இருப்பது மிகவும் முக்கியம் எனவும் கூறினார்.
Chota Nagpur பகுதிக்கும், வட இந்தியா முழுவதற்குமான இராஞ்சி புனித ஆல்பர்ட் குருத்துவக் கல்லூரி இதுவரை 2,000த்துக்கு மேற்பட்ட புதிய குருக்களை உருவாக்கியிருக்கின்றது. இவர்களில் 35 பேர், ஆயர்களாகவும் பேராயர்களாகவும் உயர்ந்துள்ளனர். ஒருவர் கர்தினாலாகவும் ஆகியிருக்கிறார் என்ற தகவல் கேட்டுத் தான் மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார் கர்தினால் ஃபிலோனி.


8. தண்ணீரை நிர்வகிப்பதில் நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பு அவசியம், ஐ.நா.

பிப்.12,2013. உலகின் அமைதிக்கும் வளர்ச்சிக்குமான நடவடிக்கைகளில் விலைமதிப்பற்ற ஆதாரமாக இருக்கும் தண்ணீரை நிர்வகிப்பதில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு தருவதற்கு அழைப்பு விடுத்து அனைத்துலக தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டை இத்திங்களன்று தொடங்கியுள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனம்.
2013ம் ஆண்டு, அனைத்துலக தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு ஒலி-ஒளிச் செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், இந்தப் பூமி மற்றும் மக்களின் நல்வாழ்வுக்கு மையமாக விளங்கும் தண்ணீரைப் பாதுகாத்து கவனமுடன் நிர்வகிக்குமாறு கேட்டுள்ளார்.
உலகில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் தங்களது அன்றாட வாழ்வுக்கு நீர்ஆதாரங்களை நம்பியிருக்கின்றனர் என்றும், ஆறுகள் அல்லது ஏரிகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் உலகின் 90 விழுக்காட்டு மக்கள் வாழ்கின்றனர் என்றும் பான் கி மூனின் செய்தி கூறுகின்றது.
எனினும், உலகின் 276 பன்னாட்டு ஆற்றுப்படுகைகளின் 60 விழுக்காட்டுப் பகுதி, எந்தவிதமான நிர்வாக ஒத்துழைப்பு இன்றி இருப்பதாகவும்  ஐ.நா.பொதுச்செயலரின் செய்தி கூறுகின்றது.
வருகிற மார்ச் 22ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக தண்ணீர்த் தினத்துக்கும், தண்ணீர் விவகாரங்கள் குறித்த ஒத்துழைப்பே மையப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...