Thursday, 7 February 2013

Catholic News in Tamil - 07/02/13

1. மூன்றாம் உலக இளையோர், மேற்கத்தியக் கலாச்சாரத்திற்கு ஒரு சவாலாகவும், படிப்பினையாகவும் உள்ளனர் - திருத்தந்தை

2. புனித சார்லஸ் பொரோமியோ சபையைச் சேர்ந்த பன்னாட்டு உறுப்பினர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு

3. இக்கண்காட்சி, நம்பிக்கையைத் தூண்டுவதோடு, நம் உள்ளங்களில் உறையும் அழகியலையும் ஆழப்படுத்துகிறது - கர்தினால் பெர்தோனே

4. கிறிஸ்துவின் சீடர்கள் என்ற அடிப்படையில், பணிபுரிவதை வேறு எதற்காகவும் நாம் விட்டுக்கொடுக்க இயலாது - கர்தினால் Oswald Gracias

5. 'நோயுற்றோருக்கான உலக நாள்' நிகழ்வுகள் ஜெர்மனியில் ஆரம்பம்

6. ஓரினத் திருமணம் சட்டமாகும்போது, பணிபுரியும் கத்தோலிக்கர்களுக்கு மனசாட்சியின் அடிப்படையில் பல சவால்கள் உருவாகும் - பேராயர் Peter Smith

7. ஒற்றுமையை வளர்க்கும் அம்சங்களையே வலியுறுத்துவோம் - பாகிஸ்தானின்  கிறிஸ்தவ அமைப்புக்கள் அறிவிப்பு

8. ஸ்காட்லாந்தில் உருவாக்கப்பட்டுள்ள நான்கு அடி குறுக்களவு கொண்ட மாபெரும் செபமாலை

------------------------------------------------------------------------------------------------------

1. மூன்றாம் உலக இளையோர், மேற்கத்தியக் கலாச்சாரத்திற்கு ஒரு சவாலாகவும், படிப்பினையாகவும் உள்ளனர் - திருத்தந்தை

பிப்.07,2013. இளையோர் கலாச்சாரம் என்பதை வரையறுக்க, பன்முகக் கண்ணோட்டங்களும், செயல்பாடு யுக்திகளும் தேவை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
பிப்ரவரி 6, இப்புதன் முதல் வருகிற சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறும் கலாச்சாரத் திருப்பீட அவையின் ஆண்டு நிறைவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் உறுப்பினர்களை இவ்வியாழன் மதியம் வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை, இளையோர் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள விழையும் அனைவரின் ஆவலையும் பாராட்டினார்.
அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களால் இளையோர் கலாச்சாரம் ஒரு நிலையற்றத் தன்மையை உணர்ந்து வருகின்றது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, வேலைகள் இல்லாமை என்றச் சூழல் இளையோரின் மனநிலையையும், உறவுகளையும் பாதிக்கும் ஆபத்தையும் எடுத்துரைத்தார்.
இத்தகைய நிலையற்ற தன்மை, இளையோரிடையே போதைப் பொருள் பயன்பாடு, வன்முறை மற்றும் பிற சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளில் ஈடுபட வைக்கிறது என்பதையும் திருத்தந்தை வருத்தத்துடன் எடுத்துக் கூறினார்.
இத்தகையச் சூழலிலும், பல இளையோர் வீரமுடன், தாராள மனதுடன் தேவையில் இருப்போர் துயர் துடைப்பதற்கு முன்வருவதையும் நாம் காண்பது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது என்று கூறினார் திருத்தந்தை.
இளையோரின் கலாச்சாரம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, மாறுபட்ட வகையில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் இளையோரைத் தகுந்த கண்ணோட்டத்துடன் நோக்குவது நமக்குள்ள ஒரு சவால் என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
'மூன்றாம் உலக' இளையோரைப் பற்றி குறிப்பிட்டுப்  பேசியத் திருத்தந்தை, நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கிப் போயிருக்கும் மேற்கத்தியக் கலாச்சாரத்திற்கு மூன்றாம் உலக இளையோர் ஒரு சவாலாகவும், படிப்பினையாகவும் உள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.
திருஅவையும்  திருத்தந்தையரும் இளையோர் மட்டில் கொண்டிருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை, இந்த நம்பிக்கை ஆண்டில் இன்னும் ஆழமாக மாற இந்த ஆண்டுக்கூட்டம் வழிவகுக்கட்டும் என்று கூறியத் திருத்தந்தை, கலாச்சாரத் திருப்பீட அவையின் அங்கத்தினர்களுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.


2. புனித சார்லஸ் பொரோமியோ சபையைச் சேர்ந்த பன்னாட்டு உறுப்பினர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு

பிப்.07,2013. கிறிஸ்துவின் மீது கொண்ட ஆழ்ந்த அன்பினால், புனித சார்லஸ் பொரோமியோ நலிந்தோரைத் தேடி, அவர்களுக்குத் தன் அன்பையும், சேவையையும்  வழங்கியது நமக்கெல்லாம் நல்ல பாடமாக அமைகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புனித சார்லஸ் பொரோமியோ சபையைச் சேர்ந்த பன்னாட்டு உறுப்பினர்களை இப்புதன் மறைபோதகத்திற்குப் பின் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுடன் வந்திருந்த அச்சபையின் புதியத் தலைவர் அருள்திரு Paolo Sottopietra அவர்களைத் தனிப்பட்ட முறையில் வாழ்த்தினார்.
இத்துறவுச் சபையைச் சார்ந்த பலருடன் தனக்குள்ள உறவையும், இச்சபை ஆற்றி வரும் பணிகளில் தனக்குள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்தி மகிழ்ந்த திருத்தந்தை, வந்திருந்த அனைவருக்கும் தன் சிறப்பு ஆசீரையும் வழங்கினார்.


3. இக்கண்காட்சி, நம்பிக்கையைத் தூண்டுவதோடு, நம் உள்ளங்களில் உறையும் அழகியலையும் ஆழப்படுத்துகிறது - கர்தினால் பெர்தோனே

பிப்.07,2013. விவிலியத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் கலைப் படைப்புக்களைத் திரட்டி, அவற்றை மக்கள் பார்வைக்கு கண்காட்சியாக அமைப்பது, நம்பிக்கையை வளர்க்கும் சிறந்த ஒரு முயற்சி என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார்.
உரோம் நகரின் Castel Sant'Angelo என்ற நினைவு மண்டபத்தில், 'பேதுருவின் பாதை' என்ற தலைப்பில் நடைபெறும் ஒரு கண்காட்சியை, இப்புதன் மாலை திறந்துவைத்து உரையாற்றிய கர்தினால் பெர்தோனே, நடைபெறும் நம்பிக்கை ஆண்டின் குறிப்பிடத்தக்க முயற்சிகளில்  இதுவும் ஒன்று என்றுரைத்தார்.
உரோம் நகரில் தன் உதிரம் சிந்தி உயிர்துறந்த பேதுருவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி, நம்பிக்கையைத் தூண்டுவதோடு, நம் உள்ளங்களில் உறையும் அழகியலையும் ஆழப்படுத்துகிறது என்று கூறினார் கர்தினால் பெர்தோனே.
கலைவழியாக ஒவ்வொரு நூற்றாண்டிலும் திருஅவை ஆற்றி வந்துள்ள பணிகளை மீண்டும் நினைவுறுத்தும் இக்கண்காட்சி, நம்மைப் பெருமிதம் அடையவைக்கிறது எனக் கூறி, தன் மகிழ்வையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே.
ஒன்பது நாடுகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியில், நான்காம் நூற்றாண்டிலிருந்து 20ம் நூற்றாண்டு முடிய ஒவ்வொரு நூற்றாண்டிலும் திருஅவையால் பாதுகாக்கப்பட்டுள்ள பல கலைப்பொருட்களும், ஆவணங்களும் இடம்பெறுகின்றன.
பிப்ரவரி 7, இவ்வியாழன் முதல், மே மாதம் முதல் தேதி முடிய நடைபெறும் இக்கண்காட்சி, உரோம் நகரின் முக்கிய நினைவுச் சின்னமான, Castel Sant'Angelo என்ற நினைவு மண்டபத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


4. கிறிஸ்துவின் சீடர்கள் என்ற அடிப்படையில், பணிபுரிவதை வேறு எதற்காகவும் நாம் விட்டுக்கொடுக்க இயலாது - கர்தினால் Oswald Gracias

பிப்.07,2013. திருஅவையின் மையமான விழுமியம் பணிபுரிவதே; எனவே, கிறிஸ்துவின் சீடர்கள் என்ற அடிப்படையில், பணிபுரிவதை வேறு எதற்காகவும் நாம் விட்டுக்கொடுக்க இயலாது என்று இந்திய ஆயர்கள் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias கூறினார்.
"திருஅவை, பணிபுரியும் குடும்பம்" என்ற மையக் கருத்துடன் வேளாங்கண்ணித்  திருத்தலத்தில் இச்செவ்வாய் முதல் நடைபெற்று வரும் இந்திய இலத்தீன் ரீதி கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 25வது கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் Gracias இவ்வாறு கூறினார்.
மத்தேயு நற்செய்தி 20: 28ல் கூறியுள்ள, "மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்ற வார்த்தைகளை மேற்கோளாகக் கூறி, கிறிஸ்துவின் ஒவ்வொரு சீடருக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை மதிப்பீடு பணிபுரிவதே என்று கூறினார் கர்தினால் Gracias.
ஊழல்கள் அற்ற இந்தியாவை உருவாக்குவதும், வறுமை ஒழிப்பு, வேறுபாடுகளை நீக்குதல், கல்வியறிவின்மையைக் களைதல் ஆகியவையே, இந்தியத் திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ள தலையாயப் பணிகள் என்று கர்தினால் Gracias தன் உரையில் வலியுறுத்தினார்.


5. 'நோயுற்றோருக்கான உலக நாள்' நிகழ்வுகள் ஜெர்மனியில் ஆரம்பம்

பிப்.07,2013. ஒவ்வோர் ஆண்டும் திருஅவையால் கொண்டாடப்படும் 'நோயுற்றோருக்கான உலக நாள்' நிகழ்வுகள் இவ்வியாழன் பிற்பகல் மூன்று மணியளவில் ஜெர்மனியின் Eichstätt-Ingolstadt பல்கலைக் கழகத்தில் ஆரம்பமாயின.
'நோயுற்றோருக்கான உலக நாள்' நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று இயேசு கூறிய வார்த்தைகளை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கருத்தரங்கை நலப்பணியாளர் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski, துவக்க உரையாற்றி ஆரம்பித்து வைத்தார்.
பிப்ரவரி 7 இவ்வியாழன் ஆரம்பமாகியுள்ள 21வது 'நோயுற்றோருக்கான உலக நாள்' நிகழ்வுகள், பிப்ரவரி 11, வருகிற திங்களன்று கொண்டாடப்படும் லூர்து அன்னை மரியா விழாவன்று, ஆடம்பரத் திருப்பலியுடன் முடிவடையும்.
1992ம் ஆண்டு மேமாதம் 13ம் தேதி முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் அறிவிக்கப்பட்ட 'நோயுற்றோருக்கான உலக நாள்' 1993ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி லூர்து அன்னை மரியா விழாவன்று முதன் முறையாகக் கொண்டாடப்பட்டது..
இவ்வாண்டு கொண்டாடப்படும் 21வது 'நோயுற்றோருக்கான உலக நாள்', ஜெர்மனியின் புகழ்பெற்ற Altötting அன்னை மரியா திருத்தலத்தில் சிறப்பிக்கப்படுகிறது. இவ்விழாவில் கலந்துகொள்ள திருத்தந்தையின் பிரதிநிதியாக பேராயர் Zimowski சென்றுள்ளார்.


6. ஓரினத் திருமணம் சட்டமாகும்போது, பணிபுரியும் கத்தோலிக்கர்களுக்கு மனசாட்சியின் அடிப்படையில் பல சவால்கள் உருவாகும் - பேராயர் Peter Smith

பிப்.07,2013. திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடைப்பட்ட உறவு என்பதை மனித குலம் துவக்கத்திலிருந்தே புரிந்துகொண்டு வந்திருப்பதையே திருஅவை தன் நிலைப்பாடாகக் கொண்டுள்ளது என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவையின் உதவித் தலைவர் கூறினார்.
ஓரினத் திருமணத்தைச் சட்டமயமாக்கும் ஒரு சட்ட வரைவுக்கு ஆதரவாக, பிரித்தானியப் பாராளுமன்றம் இச்செவ்வாயன்று ஒப்புதல் அளித்ததையடுத்து, பேரவையின் உதவித் தலைவர் பேராயர் Peter Smith, செய்தியாளர்களுக்கு வெளியிட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறினார்.
சமத்துவம் என்ற கருத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த விவாதம், திருமணத்திற்கு வேறுபட்ட ஓர் இலக்கணத்தை வகுத்திருப்பது, பிரித்தானிய சமுதாயத்தில் மேலும் பல சிக்கலான விளைவுகளை உருவாக்கும் என்று பேராயர் Smith கூறியுள்ளார்.
ஓரினத் திருமணம் சட்டமாகும்போது, மருத்துவ உலகில் பணிபுரியும் கத்தோலிக்கர்களுக்கும், கல்வித்துறையில் பணிபுரியும் கத்தோலிக்கர்களுக்கும் மனசாட்சியின் அடிப்படையில் பல சவால்கள் உருவாகும் என்று பேராயர் எச்சரித்துள்ளார்.


7. ஒற்றுமையை வளர்க்கும் அம்சங்களையே வலியுறுத்துவோம் - பாகிஸ்தானின்  கிறிஸ்தவ அமைப்புக்கள் அறிவிப்பு

பிப்.07,2013. இறையரசை அறிவிப்பதில் முனைப்புடன் செயல்படுவோம் என்றும், வேற்றுமைகளுக்குப் பதில் ஒற்றுமையை வளர்க்கும் அம்சங்களையே வலியுறுத்துவோம் என்றும் பாகிஸ்தானின் கத்தோலிக்கத் திருஅவையும் இன்னும் பிற கிறிஸ்தவ சபைகளும் அறிவித்துள்ளன.
சனவரி மாத இறுதியில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துவ ஒன்றிப்பு வாரத்தின் ஒரு விளைவாக, பாகிஸ்தானில் பணிபுரிந்துவரும் கத்தோலிக்கத் திருஅவை, Presbyterian கிறிஸ்தவ சபை, ஆங்கலிக்கன் சபை மற்றும் Salvation Army என்ற நான்கு அமைப்புக்களும் ஒருங்கிணைந்து இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளன.
கிறிஸ்தவர்கள் வலிமைமிகுந்த ஒரு சமுதாயமாக பாகிஸ்தானில் வாழ ஒற்றுமையே சிறந்த வழி; இதன் மூலமே, கிறிஸ்தவர்களின் வாழ்வும் நாட்டின் அமைதியும் வளர முடியும் என்று பாகிஸ்தான் ஆயர்கள் பேரவையின் பல்சமய உரையாடல் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருள்தந்தை Francis Nadeem கூறினார்.
தற்போது கொண்டாடப்படும் நம்பிக்கை ஆண்டின் ஒரு வெளிப்பாடாகவும், புதிய நற்செய்தி அறிவிப்பின் ஒரு வெளிப்பாடாகவும் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை பாகிஸ்தானில் வளர வேண்டும் என்று அருள்தந்தை Nadeem வலியுறுத்தினார்.


8. ஸ்காட்லாந்தில் உருவாக்கப்பட்டுள்ள நான்கு அடி குறுக்களவு கொண்ட மாபெரும் செபமாலை

பிப்.07,2013. நடைபெற்று வரும் நம்பிக்கை ஆண்டின் ஒரு முயற்சியாக, ஸ்காட்லாந்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு மாபெரும் செபமாலை, பிப்ரவரி 8, இவ்வெள்ளிக்கிழமை கர்தினால் Keith O’Brien அவர்களால் அர்ச்சிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான இச்செபமாலை ஒவ்வொரு பள்ளிக்கும், பங்குத்தளத்திற்கும் செல்லும்போது, அவ்விடங்களின் நம்பிக்கை மீண்டும் புத்துயிர் பெறுவது உறுதி என்று கர்தினால் O’Brien கூறினார்.
நம்பிக்கை ஆண்டும், புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியும் இணையும் ஒரு முக்கியமான தளம் கத்தோலிக்கக் குடும்பங்கள் என்று கூறிய ஸ்காட்லாந்து ஆயர்கள் பேரவையின் தலைவர் பேராயர் Philip Tartaglia, இக்குடும்பங்களை இணைக்கும் சிறந்த கருவி செபமாலையே என்றும் எடுத்துரைத்தார்.
ஸ்காட்லாந்தில் உள்ள Mission Matters என்ற ஓர் அமைப்பு, மறைபரப்புப் பணிக்கென நிதிதிரட்டி அதை வத்திக்கானுக்கு அனுப்பி வருகின்றது. இவ்வமைப்பின் ஒரு முயற்சியாக, நான்கு அடி குறுக்களவு கொண்ட ஒரு வட்ட வடிவில் இச்செபமாலை உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் ஐந்து கண்டங்களைக் குறிக்கும்படி, ஐந்து வண்ண மணிகளில் உருவாக்கப்பட்டுள்ள இச்செபமாலையில், ஒவ்வொரு மணியும் ஒரு டென்னிஸ் பந்து அளவில் உள்ளதென்றும், இதன் சிலுவை இரண்டடி உயரம் கொண்டதென்றும் சொல்லப்படுகிறது.
 

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...