1. கர்தினால் Giovanni Cheliன் இறப்புக்குத் திருத்தந்தையின் இரங்கல் செய்தி
2. Elysee உடன்படிக்கைக்குத் திருத்தந்தை வாழ்த்து
3. நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் இந்தியாவுக்கான ஒரு வாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்
4. Asia Bibiக்கு மன்னிப்பு வழங்கப்படுமாறு கர்தினால் Etchegaray வேண்டுகோள்
5. மனித வியாபாரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபிக்குமாறு பிரிட்டன் ஆயர்கள் அழைப்பு
6. புதிய பாம்பு ஆண்டை முன்னிட்டு தாய்வான் கிறிஸ்தவர்கள் ஏழைகளுக்கு இலவச உணவு
7. சிரியாவில் நீதியான அமைதிக்காக நோன்பு
8. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனம் எதிர்ப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கர்தினால் Giovanni Cheliன் இறப்புக்குத் திருத்தந்தையின் இரங்கல் செய்தி
பிப்.08,2013. இத்தாலிய கர்தினால் Giovanni Cheli மரணமடைந்ததையொட்டி இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலியின் Asti ஆயர் Francesco Ravinaleக்கு இத்தந்திச் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, இறந்த கர்தினால் Cheliன் ஆன்மா நிறைசாந்தியடையத் தான் செபிப்பதாகவும், அவர் திருஅவையின் பணிகளில் மிகச் சிறந்த ஒத்துழைப்பாளராக இருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வியாழன் இரவு இறைபதம் அடைந்த 94 வயதாகும் கர்தினால் Giovanni Cheli, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், திருப்பீட
குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் அவைத் தலைவர் உட்பட
திருப்பீடத்தில் சில முக்கிய பொறுப்புக்களை வகித்து அவற்றைத் திறமையாகச்
செய்தவர் எனப் பாராட்டப்பட்டுள்ளார்.
கர்தினால் Cheliன் இறப்போடு, திருஅவையில்
மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 209. இவர்களில் திருத்தந்தையைத்
தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக
உள்ளது.
இத்தாலியின் தொரினோவில் 1918ம் ஆண்டு பிறந்த கர்தினால் Cheli, ஆஸ்தி மறைமாவட்டத்துக்கென 1942ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் 1998ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
2. Elysee உடன்படிக்கைக்குத் திருத்தந்தை வாழ்த்து
பிப்.08,2013. கடவுளால் மனித இதயத்தில் பொறிக்கப்பட்டுள்ள இயற்கையான அறநெறிச் சட்டமும்,
நற்செய்தியால் வடிவமைக்கப்பட்ட மனித விழுமியங்களும் உரிமைகளும் ஓர்
அரசியலுக்கு அடிப்படையாக அமைகின்றன என்று திருப்பீடச் செயலர் கர்தினால்
தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.
இத்தகைய அரசியலே, நீதிக்கும், அமைதிக்கும், மனிதக் குடும்பத்தின் முன்னேற்றத்துக்கும் உண்மையிலேயே சேவை செய்யும் எனவும் கர்தினால் பெர்த்தோனே கூறினார்.
பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையே Elysee உடன்படிக்கை ஏற்பட்டதன் 50ம் ஆண்டைச் சிறப்பிப்பதற்கு, உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கை, திருத்தந்தையின் பெயரில் வாழத்திய கர்தினால் பெர்த்தோனே இவ்வாறு கூறினார்.
அரசியல் செயல்பாடுகள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டதாய் இருக்க வேண்டும் என்றுரைத்த கர்தினால் பெர்த்தோனே, நாம் இதுவரை சாதித்தவைகளைப் புதிய சவால்களால் இழந்துவிடக் கூடாது என்றும், அமைதி என்பது, அரசியலின் செயல்பாட்டில் எப்போதும் இணைந்தே செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
இந்த 50வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள், பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் மக்களுக்கு இடையே ஒப்புரவையும் புரிந்துகொள்ளுதலையும் உருவாக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இரண்டாம் உலகப்போர் முடிந்த 18 ஆண்டுகளுக்குப் பின்னர் 1963ம் ஆண்டு சனவரி 22ம் தேதி ஜெர்மனியும் பிரான்சும், பாரிசின் Elysee அரண்மனையில் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டன. இந்த Elysee உடன்படிக்கை ஜூலை 2ம் தேதி அமலுக்கு வந்தது.
3. நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் இந்தியாவுக்கான ஒரு வாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்
பிப்.08,2013. தமிழகத்தின் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னைத் திருத்தலம் மைனர் பசிலிக்காவாக அறிவிக்கப்பட்டதன் பொன்விழா, இந்திய இலத்தீன்முறை ஆயர்கள் பேரவை உருவாக்கப்பட்டதன் வெள்ளிவிழா ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கென, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni இவ்வெள்ளியன்று இந்தியாவுக்கான ஒரு வாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இச்சனிக்கிழமை திருச்சியிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் கர்தினால் Filoni, அன்று
இரவு ஆயர்களோடு உணவருந்திய பின்னர் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
இஞ்ஞாயிறன்று காலை ஆயர்களுக்கு உரை நிகழ்த்துவார். மாலையில்,
வேளாங்கண்ணித் திருத்தலப் பொன்விழாவை முன்னிட்டு புதிதாகக் கட்டப்பட்டுள்ள
விடியற்காலை விண்மீன் ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைப்பார். ஆலயத்துக்கு
முன்புறம் அமைக்கப்பட்டுள்ள முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான்
அவர்களின் திருவுருவத்தையும் திறந்து வைப்பார்.
11ம்
தேதி திங்களன்று சென்னையில் திருத்தூதர் தோமையார் கல்லறையைத் தரிசிப்பார்.
சென்னை-மயிலைப் பேராயர் இல்லத்தில் மதிய உணவு அருந்திய பின்னர், மாலையில் பேராலயத்தில் பொதுநிலையினர்க்கான கருத்தரங்கு ஒன்றைத் தொடங்கி வைப்பார்.
12,13,14,15 தேதிகளில் டெல்லி, ராஞ்சி ஆகிய நகரங்களில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 16ம் தேதி உரோம் திரும்புவார் கர்தினால் Fernando Filoni.
4. Asia Bibiக்கு மன்னிப்பு வழங்கப்படுமாறு கர்தினால் Etchegaray வேண்டுகோள்
பிப்.08,2013. பாகிஸ்தானில், தேவநிந்தனைச் சட்டத்தின்கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள Asia Bibi என்ற கிறிஸ்தவப் பெண்ணுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுமாறு அந்நாட்டு அரசுத்தலைவர் Asif Ali Zardariக்கு கடிதம் அனுப்பியுள்ளார் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர்.
Asia Bibiக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து அரசுத்தலைவர் Zardariக்கு கடிதம் அனுப்பியுள்ள கர்தினால்கள் அவையின் உதவித் தலைவர் கர்தினால் Roger Etchegaray, இப்பெண்ணுக்கு மன்னிப்பு அளிப்பது மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த மன்னிப்பு நடவடிக்கை, முஸ்லீம்களுக்கும்
கிறிஸ்தவர்களுக்கும் இடையே உரையாடலையும் ஒப்புரவையும் பெருமளவில்
ஊக்குவிக்கும் என்றும் கர்தினாலின் கடிதம் கூறுகிறது.
திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் முன்னாள் தலைவரான கர்தினால் Roger Etchegaray, கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சகோதரர்களாக வாழ்வதற்குத் தான் எப்பொழுதும் பணி செய்ததாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டில், தேவநிந்தனைச் சட்டத்தின்கீழ் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையிலிருக்கும் 42 வயதான Asia Bibi ஐந்து பிள்ளைகளுக்குத் தாய் ஆவார்.
5. மனித வியாபாரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபிக்குமாறு பிரிட்டன் ஆயர்கள் அழைப்பு
பிப்.08,2013. ஆப்ரிக்க அடிமைச் சிறுமியாகிய புனித Josephine Bakhitaவின் திருவிழாவான இவ்வெள்ளியன்று, மனித வியாபாரங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் செபிக்குமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் கேட்டுள்ளனர்.
சட்டத்துக்குப் புறம்பேயான ஆயுத வியாபாரத்துக்கு அடுத்தபடியாக, உலகில் அதிக அளவில் இலாபம் சேர்த்துக் கொடுக்கும் பெருங்குற்றம் மனித வியாபாரம் என்று கூறிய ஆயர்கள், திருஅவையில், குறிப்பாக, பெண் துறவிகளின் முயற்சியினால் மனித வியாபாரம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் இந்நடவடிக்கை குறித்து வத்திக்கான் வானொலியில் பேசிய, அப்பேரவைத் தலைவர் Westminster பேராயர் Vincent Nichols, அடிமைத்தனத்தின் நவீன வடிவமாகிய மனித வியாபாரத்துக்கு எதிரானப் போராட்டத்தில் திருஅவை முக்கிய அங்கம் வகிக்கின்றது என, காவல்துறை கருதுகின்றது என்று தெரிவித்தார்.
சூடான் நாட்டைச் சேர்ந்த புனித Josephine Bakhita, 9
வயதில் கடத்தப்பட்டு அடிமையாக விற்கப்பட்டவர். அவரின் 35வது வயதில்
இத்தாலிய தூதரக அதிகாரியால் வாங்கப்பட்டு இத்தாலிக்கு அழைத்துவரப்பட்டார்.
பின்னர் கத்தோலிக்கத்தைத் தழுவி, கனோசியன்
துறவு சபையில் 1896ம் ஆண்டில் சேர்ந்தார். 50 வருடங்கள் எளிய செப தப
வாழ்வை மேற்கொண்டு 1947ம் ஆண்டில் இறந்தார். 2000மாம் ஆண்டு அக்டோபரில்
புனிதர் என அறிவிக்கப்பட்டார் அருள்சகோதரி Josephine Bakhita.
6. புதிய பாம்பு ஆண்டை முன்னிட்டு தாய்வான் கிறிஸ்தவர்கள் ஏழைகளுக்கு இலவச உணவு
பிப்.08,2013. சீனப் புத்தாண்டு தொடங்கவிருப்பதையொட்டி, தாய்வானிலுள்ள பல்வேறு கிறிஸ்தவ நிறுவனங்களும் கழகங்களும் ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு இலவச உணவுகளை வழங்கி வருகின்றன.
இம்மாதம் 10ம் தேதியன்று பாம்பு ஆண்டு என்ற பெயரில் தொடங்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு. தாய்பேய் நகரின் சமூகநல நிறுவனம், தாய்வான் முழுவதும் 30 ஆயிரம் பேருக்கு இலவச உணவுகளை வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய தாய்பேய் நகர அருள்பணி மத்யூ, இந்த இலவச உணவு விருந்து தாய்வானின் 14 பகுதிகளில் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
7. சிரியாவில் நீதியான அமைதிக்காக நோன்பு
பிப்.08,2013. சிரியாவில் அப்பாவி குடிமக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை உலகினரின் கவனத்துக்குக் கொண்டு வரவும், சிரியாவிலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் துன்புறும் அகதிகளுடன் ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டவுமென, இவ்வாண்டு தவக்காலத்தில் ஒரு புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றது பன்னாட்டு Pax Christiஅமைப்பு.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தோடு இணைந்துவரும் விதத்தில், இம்மாதம் 13ம் தேதி முதல் வருகிற மார்ச் 31ம் தேதிவரை, “உணவே வாழ்வு” என்ற செயல்முறையை நடத்தத் திட்டமிட்டுள்ளது Pax Christi அமைப்பு.
செபம் மற்றும் நோன்பு மூலம் இந்தத் தங்களது முயற்சியை செயல்படுத்தவிருப்பதாகக் கூறும் இவ்வமைப்பு, இதற்கு உலகினர் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுள்ளது.
கடின வாழ்வை எதிர்நோக்கும் சிரியாவின் 6 இலட்சத்துக்கு மேற்பட்ட அகதிகளுக்கு உதவுமாறு, ஐ.நா., ஐரோப்பிய சமுதாய அவை மற்றும் பிற அரசுகளையும் அரசு சாரா நிறுவனங்களையும் கேட்டுள்ளது Pax Christi அமைப்பு.
சுதந்திரத்தை
வலியுறுத்தும் மக்களைத் தண்டிப்பதற்காக சிரியா அரசு மக்களுக்கு உணவு
நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது என்றும் இவ்வமைப்பு குறை கூறியது.
8. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனம் எதிர்ப்பு
பிப்.08,2013. இலங்கையில், மனித உரிமை மீறல்கள் நடப்பதால், அந்நாட்டில் இவ்வாண்டில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மற்றொரு நாட்டில் நடத்த வேண்டும் என, ஓர் அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நியூயார்க்கில் உள்ள அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனம், இது குறித்து, காமன்வெல்த் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இலங்கையில், 2009ம் ஆண்டில், தமிழ் விடுதலைப்புலிகளுடன் நடந்த சண்டையில், போர்க் குற்றம் புரிந்த வீரர்கள்மீது, அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், அந்நாட்டின் தலைமை நீதிபதி, கண்டனத் தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவை போன்ற மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு நிறுத்தாவிட்டால், காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில், வருகிற நவம்பரில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக, வருகிற ஏப்ரலில் காமன்வெல்த் நாடுகளின் அதிகாரிகள் கூட்டம் நடக்கவுள்ளது.
இலங்கை அரசு போர்க் குற்றவாளிகளை விசாரிக்கத் தவறியது தொடர்பாக, அவ்வரசுக்கு எதிராக, மற்றொரு கண்டனத் தீர்மானத்தை, ஐ.நா.வின் அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனத்தில் தாக்கல் செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடருவதால், காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக, கனடா அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறியுள்ளது.
No comments:
Post a Comment