Friday, 14 August 2020

அனைத்துலக இளையோர் நாள் – ஐ.நா. அவை அழைப்பு

 தாய்லாந்தில் இளையோர் இயக்கம்

கொள்ளை நோயின் தாக்கமும், அதன் விளைவாக சுமத்தப்பட்டுள்ள முழு அடைப்பும் இளையோரின் உள்ளங்களில் இன்னும் உறுதியையும், தீவிர அர்ப்பணிப்பையும் உருவாக்கியுள்ளது, மகிழ்வை அளிக்கிறது - ஐ.நா. பொதுச்செயலர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொள்ளை நோயின் தாக்கமும், அதன் விளைவாக சுமத்தப்பட்டுள்ள முழு அடைப்பும் இளையோரின் உள்ளங்களில் இன்னும் உறுதியையும், தீவிர அர்ப்பணிப்பையும் உருவாக்கியுள்ளது மகிழ்வை அளிக்கிறது என்று ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 12, இப்புதனன்று, அனைத்துலக இளையோர் நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, வாழ்த்துச்செய்தியை வெளியிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், இந்த முழு அடைப்பு காலத்திலும், சுற்றுச்சூழல் பிரச்சனைகளை, மக்களின் கவனத்திற்குக் கொணரவும், சமுதாயம், பாலினம் ஆகியவற்றில் சமத்துவத்தை உருவாக்கவும், இளையோர் முன்வந்திருப்பது போற்றுதற்குரியது என்று கூறினார்.

இளையோர் தங்கள் திறமைகளின் சிகரங்களை அடைவதற்கு உலகத் தலைவர்கள் அனைத்து உதவிகளையும் அளிக்கவேண்டும் என்று, அனைத்துலக இளையோர் நாளையொட்டி, ஐ.நா. அவையின் பல உயர் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வருங்கால முன்னேற்றத்திற்கு, பாதை வகுப்பவர்கள் இளையோர் என்று கூறியுள்ள, ஐ.நா. அவையின் தற்போதைய அமர்வின் தலைவரான Tijjani Muhammad-Bande அவர்கள், இவ்விளையோரை சரியான வழிகளில் ஊக்குவிப்பதும், வாய்ப்புக்களை வழங்குவதும் அனைவரின் கடமை என்பதை வலியுறுத்தியுள்ளார்.

1999ன் ஆண்டு, ஐ.நா. பொது அவை, ஆகஸ்ட் 12ம் தேதியை அனைத்துலக இளையோர் நாளாக அறிவித்தது. இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் இவ்வுலக நாளுக்கென, "உலகளாவிய செயல்பாடுகளில், இளையோரின் ஈடுபாடு" என்ற மையக்கருத்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment