மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
மனித சமுதாயம் என்ற உடலில் காயமாகப் பதிந்திருக்கும் மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்கும், அதில் பலியானவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கும், அர்ஜென்டீனா நாட்டு ஆயர் பேரவை மேற்கொண்டுவரும் முயற்சிகளை ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜென்டீனா நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு நடத்திய, மனித வர்த்தகம் குறித்த மெய்நிகர் கருத்தரங்கிற்கு, திருத்தந்தையின் பெயரில் செய்தி அனுப்பிய திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், மனித வர்த்தகம் குறித்த திருத்தந்தையின் கருத்துக்களை, அதில் குறிப்பிட்டுள்ளார்.
மனித வர்த்தகம், சமுதாயத்தில் பலவீனமான சகோதரர், சகோதரிகளின் மாண்பில் காயங்களை ஏற்படுத்தும் சவுக்கடி என்று விளக்கியுள்ள திருத்தந்தை, மனிதரை வர்த்தகம் செய்வது, நிலையான வியாபாரமாகியுள்ள இக்காலத்தில், இதனை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு, தன் ஆதரவை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 30, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட, மனித வர்த்தகத்தை எதிர்க்கும் உலக நாளை முன்னிட்டு, அர்ஜென்டீனா ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு, "மனித வர்த்தகத்திற்கு எதிராக ஒன்றுசேர்ந்து செயல்படுவோம்" என்ற தலைப்பில், இந்த கருத்தரங்கை நடத்தியது.
அர்ஜென்டீனா சமுதாயத்தில் மனித வர்த்தகத்திற்கு எதிராக உழைக்கும் வழக்கறிஞர்கள், பொதுநலக் கொள்கை அமைப்பாளர்கள், மனிதாபிமான அமைப்புகள், தலத்திருஅவையின் பிரதிநிதிகள் போன்ற பல்வேறு நிலைகளைச் சார்ந்த ஏறத்தாழ 600 பேர், இந்த கணனிவழி மெய்நிகர் கருத்தரங்கில் பங்குபெற்றனர்.
கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் நடைபெற்ற இந்த மெய்நிகர் கருத்தரங்கு மிகவும் பலனுள்ளதாக அமைந்திருந்தது என்று, இதில் பங்குபெற்றோர் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, தென் அமெரிக்க நாடான அர்ஜென்டீனாவில் மனித வர்த்தகத்திற்குப் பலியாகுவோரில், ஏறத்தாழ 64 விழுக்காட்டினர் பாலியல் நோக்கத்திற்காகவும், ஒரு விழுக்காட்டினர் பிச்சையெடுக்கவும், மேலும் ஒரு விழுக்காட்டினர் துணிக்கடைகளில் வேலைசெய்யவும், 5 விழுக்காட்டினர் கிராமங்களில் வேலைசெய்யவும் பயன்படுத்தப்படுகின்றனர். மேலும், பாலியல் நோக்கத்திற்காக வர்த்தகம் செய்யப்படுவோரில் ஏறத்தாழ 77 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment