மேரி தெரேசா: வத்திக்கான்
மல்யுத்த வீரர் ஒருவர் இருந்தார். அவரைத் தோற்கடிக்க யாராலும் முடியாது என்கிற அளவுக்கு அவர், அந்த விளையாட்டில் சாம்பியனாகத் திகழ்ந்தார். அவரை வீழ்த்த அவரது எதிரிகள் பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்திப் பார்த்தனர். வெளிநாடுகளிலிருந்து விலையுயர்ந்த மதுபாட்டில்களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அந்த பாட்டில்களை அவர்களின் கண்முன்னே போட்டு உடைத்துவிட்டு, இங்கே பாருங்க, நான் எனது இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன், என்னை யாராலும் வீழ்த்த முடியாது என்று அவர் சவால்விட்டார். அந்த அளவுக்கு அவர் தன் திறமை மீது, தன் குறிக்கோள் மீது மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். எதிரிகளின் பல்வேறு பரிசோதனை யுக்திகளும் அவர்முன் தோற்றுப்போயின். இறுதியாக, அவரது எதிரிகள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து ஒரு திட்டம் தீட்டினர். அந்த சாம்பியனை வீழ்த்துபவருக்கு பத்து இலட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்தனர். அப்போது, மல்யுத்த பயிற்சியில் இருந்த இளைஞன் ஒருவன், அதற்கு முன்வந்தான். இரண்டு நாள்களில் போட்டி ஆரம்பமாக இருந்தவேளை, அந்த இளைஞன் தன் நண்பர்களை அழைத்து, தனது யுக்திகளை அவர்களிடம் விளக்கி, இந்த உதவியை மட்டும் நீங்கள் எனக்குச் செய்தால் போதும் என்று கேட்டுக்கொண்டான். நண்பர்களும் அதற்கு ஒத்துக்கொண்டனர்.
எதிர்மறை வார்த்தைகளால் தோல்வியைத் தழுவிய வீரர்
அடுத்த நாள், அந்த இளைஞன், ஒரு கூடை நிறைய சுவையான நல்ல பழங்களுடன், தன் நண்பர்களில் ஒருவனை, அந்த சாம்பியன் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அந்த பழக்கூடையை அந்த சாம்பியனிடம் கொடுத்த அந்த நண்பன், சார், வாழ்த்துக்கள், இந்தப் போட்டியிலும் நீங்கள்தான் நிச்சயமாய் வெற்றிபெறப் போகிறீர்கள், இது எனக்கு நன்றாகவே தெரியும் என்று, அவரைப் புகழ்ந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தான். அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென அவன், சார் நீங்க இப்ப பேசும்போது கொஞ்சம் மூச்சு வாங்குறதுபோலத் தெரியுது, உடம்பு பலவீனமா இருக்கோ, கொஞ்சம் உடம்பைக் கவனிங்க சார், அப்படின்னு சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அவன் சென்றபின், நான் நன்றாகத்தானே இருக்கிறேன், அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்று சிந்திக்கத் தொடங்கினார், அந்த சாம்பியன்.
அடுத்தநாள் அந்த சாம்பியன் ஒரு பூங்காவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். பின் அவர் ஓடத்தொடங்கினார். அப்போது மற்றொரு நண்பன், அந்த பூங்காவிற்குச் சென்று, அவரோடு சேர்ந்து ஓடினான். ஓடிக்கொண்டிருக்கும்போதே அவன், சார் வாழ்த்துக்கள், நீங்க இந்தப் போட்டியில் கலந்துகொள்ளப் போறீங்க, அவன் சின்னப்பய சார், அவனை மிக எளிதாக நீங்க தோற்கடித்துவிடலாம், ஆனா சார், இப்போ நீங்க ஓடும்போது கொஞ்சம் வேகம் குறைஞ்சது மாதிரி தெரியுது, நான் உங்களை தினமும் கவனித்துக்கொண்டுதான் வர்றேன், வழக்கமாக நீங்க ரொம்ப வேகமாக ஓடுவீங்க, இன்னிக்கு என்னமோ கொஞ்சம் தளர்ந்தது மாதிரி இருக்கே, உடம்பைக் கவனிச்சுக்கோங்க சார், உடம்பில் ஏதும் பிரச்சனையா என்று கேட்டான். அவ்வளவுதான். இரண்டாவது ஆளும் இப்படி சொல்றானே, இவ்வாறு மனதிற்குள்ளே குழம்பினார் அந்த மல்யுத்த வீரர். அடுத்த நாள் போட்டி ஆரம்பமானது. எல்லாரும் போட்டியைப் பார்க்க, கைதட்டி ஆராவாரத்துடன் அமர்ந்திருந்தனர்.
அந்த மல்யுத்த வீரர் மேடையில் ஏறப்போகும்போது, அந்த இளைஞனின் இன்னொரு நண்பன் மலர்க்கொத்தோடு வந்து அவரை வாழ்த்தினான். சார், வாழ்த்துக்கள், இப்போ போட்டியில நீங்கதான் ஜெயிக்கப்போறீங்க, கையைக் குடுங்க சார் என்று கேட்டான். அவரது கையைப் பிடித்தவுடன், அந்த நண்பன் அவரிடம், சார், வழக்கமா உங்க கையைப் பிடிச்சா உடும்புப்பிடி மாதிரி முரடா இருக்கும், ஆனா இப்போ உங்க கை ரொம்ப மிருதுவா இருக்கு, என்ன சார் உங்களுக்கு உடம்பில... என்று சொல்லிவிட்டு போய்விட்டான். இதைக் கேட்டுக்கொண்டே மேடை ஏறிய அந்த சாம்பியன் ஆக்ரோஷமாக விளையாட்டை ஆரம்பித்தார். ஆனால் கடந்த சில நாள்களாக தன்னிடம் சொல்லப்பட்ட எதிர்மறையான வார்த்தைகள், அவரது மனதிற்குள் ஆழமாக வேலைசெய்துகொண்டு இருந்தன. எனவே முதல் சுற்றிலேயே அவர் கீழே விழுந்தார், வீழ்த்தப்பட்டார். மல்யுத்த பயிற்சியில் இருந்த இளைஞன் வெற்றி பெற்றான். இந்த இளைஞன் எப்படி வெற்றிபெற்றான் என்ற ஆச்சரியத்தில், எல்லாரும் கைதட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த இளைஞன் மட்டும், தன் நண்பர்களைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தான்.
கொரோனா தொற்றுக்கிருமி அச்சம்
கடந்த பல மாதங்களாக, எந்த ஊடகத்தைத் திறந்தாலும், யாரிடம் பேசினாலும் கொரோனா கொரோனா என்பதே முதல் சொல்லாக வெளிவருகிறது. இந்த சொல் இன்று ஏறத்தாழ எல்லாரையுமே ஒருவித அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இலேசாக காய்ச்சல் இருமல் வந்தால்கூட, அய்யோ உனக்கு கொரோனா வந்துருச்சு என்று, மற்றவர் மரண பயத்தை உருவாக்குகின்றனர். அந்நாள்வரை நண்பர்கள் போல பழகி உறவாடி வந்த அண்டை வீட்டார், அதிலிருந்து அந்நியராகி விடுகின்றனர். கொரோனா என்ற சொல்லை வைத்து, எதிர்மறையான மற்றும், அச்ச உணர்வுகளை, நம்மில் ஆழமாகப் பதித்து விடுகின்றனர். வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பிய ஒருவர், தன் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார். நான் இந்தியா திரும்பியபின், என்னை 14 நாள்கள் தனித்திருத்தலில் வைத்திருந்தனர். அந்த வீட்டில் கொரோனா தொற்று உள்ளது, எச்சரிக்கை என்ற அறிவிப்பையும் அதிகாரிகள் ஒட்டிவிட்டனர். நான் இறந்துவிடுவேன் என்றே, ஏறத்தாழ எல்லாரும் நினைத்தனர். ஆனால் அடுத்த நாள், எனது பக்கத்து வீட்டிலிருந்த ஒரு சகோதரி மட்டும், என் மகனின் பெயரைச் சொல்லி, என்னைக் கூப்பிட்டு, உங்களுக்கு எதுவும் செய்யாது என்று சொன்னார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்குள் உற்சாகத்தை ஊட்டின. கொரோனா, தொற்றுக்கிருமி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் நம் மனிதாபிமானம் எங்கே, தமிழர் பண்பாடு எங்கே, ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்று சொன்னால் ஓடிவந்து உதவுவதுதானே, தமிழரின் பண்பாடு. ஒருவர் கொரோனாவிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து திரும்பி வரும்போது கைதட்டி மத்தள ஆரவாரத்தோடு அவரை வரவேற்பது முக்கியமல்ல, ஆனால் அவர் மருத்துவமனைக்குச் செல்கையில், உங்களுக்கு எதுவும் ஆகாது, நல்ல சுகத்தோடு திரும்பி வருவீர்கள் என்ற நேர்மறை வார்த்தைகளைச் சொல்லி அனுப்புங்கள். நேர்மறையாகப் பேசுங்கள், நேர்மறையாகச் சிந்தியுங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக நம்மைப் படைத்த கடவுள்மீது நம்பிக்கை வையுங்கள். நம் உயிரை எப்போது எடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.
மரணதண்டனை கைதியும் அச்சமும்
அமெரிக்க ஐக்கிய நாட்டில் மரண தண்டனைக்குத் தீர்ப்பிடப்பட்ட ஒரு கைதியிடம், அறிவியலாளர்கள் சிலர், ஆய்வு ஒன்றை நடத்த முடிவு செய்தனர். அந்த கைதியிடம், நீ தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலைசெய்யப்படமாட்டாய், மாறாக, நச்சு நிறைந்த ஒரு பாம்பினால் நீ கொல்லப்படுவாய் என்று சொன்னார்கள். மரண தண்டனை நிறைவேற்றப்படும் நேரத்தில், அந்த கைதிக்கு முன்பாக, நல்ல பாம்பு ஒன்று கொண்டுவரப்பட்டது. பின்னர் அவர்கள் அந்த கைதியின் கண்களைக் கட்டிவிட்டனர். அவனையும் நாற்காலியோடு சேர்த்து கட்டினர். ஆனால் அந்த நேரத்தில் அவன் அந்த பாம்பினால் கடிக்கப்படவில்லை. அதற்கு மாறாக, அவன் உடம்பில் இரண்டு ஊசிகளால் குத்தினர். அவர்கள் குத்திய சில விநாடிகளுக்குள் அந்த கைதி இறந்தான். அவன் உடம்பை பரிசோதித்தபோது, பாம்பின் நச்சுபோன்ற நஞ்சு, அவன் உடம்பில் பரவியிருந்தது கண்டறியப்பட்டது. ஆக, அந்த கைதிக்கு அந்த நஞ்சு எப்படி உடம்பில் பரவியது என்று நாம் சிந்திப்போம். அவன் அந்த நச்சு பாம்பு பற்றி, தன் மனதில் உருவாக்கிய பயமும், கலக்கமுமே, அந்த நஞ்சு அவனது உடம்பில் பரவியிருந்ததற்கு காரணமாக அமைந்திருந்தது.
எனவே, நாம் மனதளவில் எடுக்கும் தீர்மானங்களே, நம்மில் நேர்மறை அல்லது எதிர்மறை சக்தியை உருவாக்குகின்றன, அதற்கேற்றால்போல் உடம்பும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. நம்மைத் தாக்கும் நோய்களில் 90 விழுக்காட்டிற்கு, நம் எதிர்மறை எண்ணங்களே அடிப்படை காரணம் என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து முற்றிலும் மீண்டு வந்துள்ள 100 வயது நிரம்பிய, சென்னையில் வாழ்கின்ற பாட்டி வேலம்மாள் அவர்கள், கொரோனா பாதிப்பு வந்தால், யாரும் கலக்கம் அடைய வேண்டாம் மனத்துணிவுடன், ஒவ்வொரு நாளும் சத்தான உணவு வகைகளைச் சாப்பிட்டால், நோயிலிருந்து மீண்டுவிடலாம் என்று சொல்லியுள்ளார். இந்த நோய் குறித்த அச்ச உணர்வின்றி, நலமடைவேன் என்ற நேர்மறை எண்ணத்தோடு மருத்துவமனை செல்பவர்கள், பரிசோதனை முடிவில் இந்த நோய் தாக்கம் இல்லை என்பதைக் கேட்டு மகிழ்கிறார்கள் என்பதே உண்மை. இக்காலக்கட்டத்தில் உலகெங்கும், ஒவ்வொரு நாளும், இதயம் சார்ந்த நோய்கள், புற்றுநோய்கள், சுவாசம் சார்ந்த நோய்கள் போன்ற பலவற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை, கொரோனோவால் இறப்பவர்களைவிட அதிகம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் ஓர் ஆண்டில் சாலை விபத்தால் இறப்பவர்கள் ஏறத்தாழ 15 ஆயிரம் பேர். இந்தியாவில், பாம்புக்கடியால் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேர் இறக்கின்றனர். எனவே, கோவிட்-19ஆல் இறந்தவர்களில் பெரும்பான்மையினோர் மருத்துவமனைகளில் இறந்தவர்கள். அதற்கு மருத்துவமனைகளின் சூழலும், அந்நோயாளிகளின் மனதில் உருவாகிய அச்சமுமே காரணங்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அச்சமே நோய்தான். எனவே, அச்சம் தவிர்த்து நோயின்றி வாழ்வோம். நம் வாழ்வை கடவுள் கரத்தில் கையளிப்போம்.
No comments:
Post a Comment