மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இயேசு சபையை தோற்றுவித்த, புனித இலொயோலா இஞ்ஞாசியார், தாழ்ச்சி என்ற பண்பை நமக்குக் கற்றுத்தருகிறார் என்று, அப்புனிதரின் திருநாளாகிய, ஜூலை 31, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“புனித இலொயோலா இஞ்ஞாசியார் தாழ்ச்சியை நமக்குக் கற்றுத்தருகிறார், இறையாட்சியை கட்டியெழுப்புவது நாம் அல்ல, மாறாக, நமக்குள் எப்போதும் இருந்து செயலாற்றும் ஆண்டவரின் திருவருளால் அதனை நாம் கட்டியெழுப்புகிறோம் என்ற விழிப்புணர்வை, தாழ்ச்சி நம்மில் ஏற்படுத்துகின்றது, நாம் உடைந்துபோகும் மண்கலங்கள், ஆயினும், நாம் அளப்பரிய கருவூலத்தைத் தாங்குகிறோம் மற்றும், அதை மற்றவருக்கு அறிவிக்கிறோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், புனித இக்னேஷியஸ் என்ற ஹாஷ்டாக்குடன், இவ்வெள்ளியன்று பதிவாகியிருந்தன.
இயேசு சபையைச் சார்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், மற்ற இயேசு சபையினருக்கும், பல்வேறு கத்தோலிக்கத் தலைவர்கள், தங்களின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இஸ்பெயின் நாட்டின் இலயோலாவில் 1491ம் ஆண்டு பிறந்த புனித இஞ்ஞாசியார், தன் பதினேழாவது வயதில் இஸ்பெயின் நாட்டு இராணுவத்தில் பணியாற்றத் தொடங்கினார். 1521ம் ஆண்டில் இஸ்பெயினின் கோட்டை நகரான பாம்பலோனாவை, பிரெஞ்சுப் படைகள் தாக்க முற்பட்டபோது, இப்புனிதர், போர்க்களம் இறங்கினார். போரில் பீரங்கிக் குண்டுகள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர், பாம்பலோனா அரண்மனையிலே சிகிச்சை பெற்றார். முப்பது வயது நிரம்பியிருந்த அவர், அச்சமயத்தில் இயேசு கிறிஸ்துவுக்காகத் தன்னை அர்ப்பணிக்கத் தீர்மானித்தார்.1522ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி, மோன்சராட் என்னும் இடத்தில் அமைந்துள்ள அன்னை மரியாவின் ஆலயம் சென்று செபித்தார். தனது போர் வாள், மற்றும், ஏனைய ஆயுதங்களை, அன்னையின் பீடத்திற்கு முன் துறந்தார். வெளியில் வந்து, தனது விலையுயர்ந்த ஆடைகளை, ஓர் ஏழைக்குத் தந்தார். முரட்டுத் துணிமணிகளை அணியத் துவங்கினார், இஞ்ஞாசியார்.
புனித இஞ்ஞாசியார், 1534ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, இயேசு சபையைத் தொடங்கினார். இவர் 1556ம் ஆண்டு, ஜூலை 31ம் தேதி இறைவனடி சேர்ந்தார். 1609ம் ஆண்டு, ஜூலை 27ம் தேதி, அருளாளர் என்றும், 1622ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி, புனிதர் என்றும், இவர் அறிவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment