Wednesday, 12 August 2020

தென் ஆப்ரிக்காவில், மதுபானத்தால், 80 விழுக்காட்டு மரணங்கள்

 இந்தியாவில் மதுபானம் வாங்க வரிசையில் காத்திருப்போர்

மரணங்கள், ஊனமுறுதல், வன்முறை, பால்வினை நோய்கள் ஆகியவை அதிகரிப்புக்கு மதுபான பயன்பாடு காரணமாகின்றது என, தென் ஆப்ரிக்கா ஆயர்கள் அறிக்கை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தென் ஆப்ரிக்காவில், மதுபானங்கள் எல்லைமீறி பயன்படுத்தப்படுவதால் விளையும் தீமைகள், தாங்கள் நினைத்ததைவிட மிகப்பெரிய அளவில் இருப்பதாக, அந்நாட்டு ஆயர்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.

தென் ஆப்ரிக்க ஆயர் பேரவையின் நீதி, மற்றும்,அமைதி அவையினால் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, மதுபான விற்பனையால் கிட்டும் இலாபத்தைவிட, மதுபானம் அருந்துதல் விளைவிக்கும் தீமைகளினால் வரும் செலவு, சில மாவட்டங்களில் அதிகம் எனக்கூறும் ஆயர்கள், இதுமட்டுமல்ல, மக்கள், போதைக்கு அடிமையாவதும் அதிகாரித்து வருகிறது என கூறியுள்ளனர்.

மதுபான உற்பத்தியில் தென் ஆப்ரிக்காவில் மூன்று இலட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 200 கோடி யூரோக்களை தேசிய வருமானமாக கொண்டுவருவதாகவும் உரைக்கும் ஆயர்கள், மதுபானங்கள் மீதான கட்டுப்பாடுகள் சரியான முறையில் அமல்படுத்தப்படுவதில்லை எனவும், கவலையை வெளியிட்டுள்ளனர்.

மரணங்கள், ஊனமுறுதல், வன்முறை, பால்வினை நோய்கள் ஆகியவை அதிகரிப்புக்கு மதுபான பயன்பாடு காரணமாகின்றது எனவும், ஆயர்களின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் 80 விழுக்காட்டு மரணங்களுக்கு, மதுபானம் அருந்துதல் காரணமாக இருக்கின்றது.

No comments:

Post a Comment