ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இன்றைய கொள்ளைநோய் உருவாகியுள்ள நெருக்கடியானச் சூழலுக்கு மிகவும் தேவையான ஓர் ஆய்வறிக்கையை, இந்தியாவில், மக்களின் பணிக்கென தங்களையே அர்ப்பணித்திருக்கும் மூன்று நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டிருப்பது போற்றுதற்குரியது என்று, இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.
கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பான இந்திய காரித்தாஸ் நிறுவனம், IGSSS என்றழைக்கப்படும் இந்திய உலக சமுதாயப்பணிக் கழகம், ஆகிய இரு நிறுவனங்களின் உதவியுடன், இயேசுசபையினர், பெங்களூருவில் அமைத்துள்ள இந்திய சமுதாய மையம் (Indian Social Institute) மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள், ஓர் அறிக்கையாக வெளியிடப்பட்டன.
"கோவிட்-19 கொள்ளைநோயைத் தாண்டி, குடிபெயர்ந்தோருடன் நடக்க" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள 84 பக்க அறிக்கையை, இந்திய சமுதாய மையத்தின் இயக்குனரான இயேசுசபை அருள்பணி ஜோசப் சேவியர் அவர்கள் தொகுத்துள்ளார்.
நான்கு பிரிவுகளாக அமைந்துள்ள இவ்வறிக்கையில், இந்தியத் தொழில் உலகமும், கோவிட்-19 கொள்ளைநோயும், சமுதாயப் பாதுகாப்பு மற்றும் குடிபெயர்ந்தோர் உரிமைகள், எதிர்காலத்திற்குத் தேவையான வழிமுறைகள் ஆகிய கருத்துக்கள் ஆழமாக அலசப்பட்டுள்ளன.
அருள்பணி ஜோசப் சேவியர் அவர்கள் தலைமையில், ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் அடங்கிய அறிக்கை, ஜூலை 30ம் தேதியன்று மும்பைப் பேராயர், கர்தினால் கிரேசியஸ் அவர்களால் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் நிலவும், முழு, அல்லது, பகுதிநேர அடைப்பால் குடிபெயர்ந்து வாழும் தொழிலாளரின் பிரச்சனைகளை, துல்லியமாகக் கணித்துள்ள இவ்வறிக்கை, எதிர்காலத்தில், இத்தொழிலாளர்கள் மீண்டும் பெருநகரங்களில் தங்கள் வேலைகளைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும்போது, அவர்களுக்குரிய மாண்பு வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என்று, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் இவ்வெளியீட்டு நிகழ்வில் கூறினார்.
கணனி வழியே, மெய் நிகர் முறையில் நடத்தப்பட்ட இவ்வெளியீட்டு நிகழ்வில், உலகின் சில பகுதிகளிலிருந்து சமுதாயச் சிந்தனையாளர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment