Thursday, 9 July 2020

கடமையில் தவறவைத்த இரக்க குணம்

சேதமடைந்த, அக்கால கலங்கரை விளக்கு

மூவர் மீது இரக்கம் காட்டியதில், தன் கடமையை மறந்ததால், முந்நூறு பேரின் மரணத்திற்கு காரணமாகிவிட்டார் அந்த நல்லவர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கடற்கரை ஓரம் இருந்த ஊரில் கப்பல் போக்குவரத்து அதிகம் இருந்ததால், ஒரு கலங்கரை விளக்கு இருந்தது. கப்பல்கள், பாறைப் பகுதியைத் தவிர்த்து, பத்திரமாகச் செல்வதற்கு, வழிகாட்டும்வண்ணம், அந்தக் கலங்கரை விளக்கை அமைத்திருந்தார்கள். எண்ணையால் எரியும் விளக்கும் இருந்தது. ஒவ்வொரு வாரமும் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை கப்பல் நிறுவனங்கள் அவருக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன.
கலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளர் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தார். காப்பாளரின் முக்கியமான வேலை, கலங்கரை விளக்கு அணையாமல் ஒளிரவைப்பது மட்டுமே. எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.
ஒரு கடுங் குளிர்கால இரவில், கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ தட்டினார்கள். காப்பாளர்  கதவைத் திறந்து பார்த்தார். பக்கத்து ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.
"தம்பி! என் வீட்டில் விளக்கெரிக்கக் கூட எண்ணை இல்லை. குளிர் நடுக்குகிறது. நீ மிகவும் நல்லவனாகத் தெரிகிறாய். கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக்கொள்வேன். சீக்கிரம் திருப்பிக் கொடுத்துவிடுவேன்" என்று கெஞ்சினார்.
மனமிளகிய காப்பாளர் அவருக்குக் கொஞ்சம் எண்ணை கொடுத்தனுப்பினார்.
அடுத்த நாள் இரவு மறுபடியும் கதவில் "டக்... டக்". கதவைத் திறந்தால் ஒரு வழிப்போக்கர். "அண்ணே! பக்கத்து ஊரில் உங்கள் உதவும் குணத்தைப்பற்றி ரொம்பவும் பெருமையாகப் பேசினார்கள். நான் மிகவும் முக்கியமான வேலையாக, அடுத்த ஊருக்கு போய்க்கொண்டிருக்கிறேன். இங்கே தங்கமுடியாத நிலை. என் கை விளக்கில் எண்ணை தீர்ந்துவிட்டது. பயணத்திற்கு எண்ணை கொடுத்து உதவினால், மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்" என்று வெகு இரக்கமாகப் பேசினார். காப்பாளரும் வழிப்போக்கருக்கு எண்ணை கொடுத்தனுப்பினார்.
மூன்றாம் நாளும், இதே கதை தொடர்ந்தது. இப்போது கதவைத் தட்டியது ஒரு மூதாட்டி. "ராசா. நீ நல்லாயிருக்கணும். வீட்டில் பச்சைக் குழந்தைக்குப் பால் காய்ச்ச அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணை தீர்ந்து போய் விட்டதப்பா! எனக்கு உன்னைவிட்டால் வழியில்லை என்று வந்துவிட்டேன். நீதான் அவசரத்துக்குக் கடவுள் போல் கை கொடுத்து உதவணும்" என்றார். அவருக்கும் காப்பாளர் எண்ணை கொடுத்தார்.
வாரக் கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டு வரும் வண்டி வர இரண்டு நாளாகும். காப்பாளர் வழக்கம்போல விளக்கிற்கு எண்ணை நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தார். பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசிவரை விளக்கை எரியவைப்பதற்குப் போதாது என்று புரிந்தது.
இருந்த எண்ணையை விளக்கில் நிரப்பி அதை எரிய விட்டுவிட்டு பதறிப்போய் ஊருக்குள் ஒடினார். மிக அவசரமாக விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள், திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டார். எல்லாரும் கை விரித்து விட்டார்கள்.
வாரக் கடைசியில் இரவில் எண்ணை தீர்ந்துபோய், விளக்கு அணைந்துவிட்டது. இரண்டு கப்பல்கள் அன்று இரவு கலங்கரை விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில் மோதி, சிதறிவிட்டன.
மூன்று பேருக்கு உதவுவதற்காக தன் முதன்மைக் கடமையில் தவறிய காப்பாளர், முன்னூறு பேரின் உயிர் சேதத்திற்குக் காரணமானார்.

No comments:

Post a Comment

Pope: ‘Synod final document forms part of papal Magisterium’

  Pope: ‘Synod final document forms part of papal Magisterium’ Pope Francis publishes a note accompanying the Final Document of the Synod of...