Thursday, 27 August 2020

அரண்மனையும் ஒரு சத்திரமே...

 இந்தியாவில், மைசூரில் அமைந்துள்ள அரண்மனை


தங்கிச் செல்லும் சத்திரங்களை, தங்கள் நிரந்தரமான உறைவிடங்களாகக் கருதுவது, அறிவு முதிர்ச்சி அல்ல!

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஆன்மீகத்தில் முதிர்ச்சிபெற்ற ஒரு துறவி, ஒரு நாள், அந்நாட்டின் அரசன் வாழ்ந்துவந்த அரண்மனைக்குள் நுழைந்து, நேரே அரசவைக்குள் சென்றார். அவரைக் கண்ட அரசன், அரியணையிலிருந்து எழுந்து, அவரை வணங்கி, "குருவே, உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். "மன்னா, நான் இந்தச் சத்திரத்தில் சிலநாள்கள் தங்கவேண்டும்" என்று அத்துறவி சொன்னார்.

துறவி, நகைச்சுவையாகப் பேசுகிறார் என்றெண்ணிய அரசன், ஒரு புன்னகையுடன், "நீங்கள் தாராளமாகத் தங்கலாம். ஆனால், இது, சத்திரம் அல்ல. இது, என் அரண்மனை" என்று கூறினார்.

"மன்னா, இவ்வரண்மனை, உனக்குமுன் யாருக்குச் சொந்தமாக இருந்தது?" என்று துறவி கேட்டதும், "என் தந்தைக்குச் சொந்தமாக இருந்தது" என்று பெருமையுடன் கூறினார் அரசன். துறவி உடனே, "சரி, அவர் இப்போது எங்கே?" என்று கேட்க, "அவர் இறந்துவிட்டார்" என்று சிறிது சோகத்துடன் பதில் சொன்னார்.

"உன் தந்தைக்கு முன், இது யாருக்குச் சொந்தமாக இருந்தது?" என்று துறவி மீண்டும் கேட்டார். அதற்கு அரசர், "இந்த அரண்மனை என் தாத்தாவுக்குச் சொந்தமாக இருந்தது. அவரும் இப்போது இல்லை" என்று பதில் சொன்னார்.

துறவி, அரசனை உற்றுநோக்கி, "இந்தக் கட்டடத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாரும், ஒரு சில ஆண்டுகள் இங்கு தங்கிவிட்டு, பின்னர் மறைந்துவிட்டனர். அப்படியானால், இந்தக் கட்டடம், சிலகாலம் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள ஒரு சத்திரம்தானே!" என்று கேட்டபோது, மன்னன் மௌனமானார்.

தங்கிச் செல்லும் சத்திரங்களை, தங்கள் நிரந்தரமான உறைவிடங்களாகக் கருதுவது, அறிவு முதிர்ச்சி அல்ல!

No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...