Thursday, 27 August 2020

திருத்தந்தையர் வரலாறு --- புனித பேதுரு எனும் சீமோன்

கடல் மீது நடக்க விரும்பிய புனித பேதுரு
திருமறைக்காக தலைகீழாய் சிலுவையில் அறையுண்டு இறந்த புனித பேதுருவின் துன்ப மரணம், திருத்தந்தையரின் வரலாற்றில், பலமுறை, மீண்டும், மீண்டும், நிகழ்ந்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

யோனாவின் மகனாக, கெனசரேத் ஏரிக்கரையின் பெத்சாயிதா ஊரில், சீமோன் என்ற பெயர் தாங்கிப் பிறந்த இவர், புனித அந்திரேயாவின் சகோதரர். திருத்தூதர் புனித பிலிப்புவும் இவர் ஊர்க்காரரே. இயேசு தன் பணிவாழ்வைத் தொடங்கியபோது, இவர் கப்பர்நாகூமிற்கு குடிபெயர்ந்திருந்தார். அங்கு இவருடன் இவர் மாமியாரும் வாழ்ந்து வந்தாக அறிகிறோம். அலெக்சாந்திரியாவின் கிளமென்டின் எழுத்துக்களின்படி பார்த்தால், புனித பேதுரு எனும் சீமோனுக்கு, திருமணம் ஆகி, குழந்தைகளும் இருந்தன. இவர் மனைவி, மறைசாட்சியாக உயிரிழந்தார் எனவும் அறிகிறோம்.

புனித பேதுருவை, இயேசுவுக்கு, அல்லது, இயேசுவை, புனித பேதுருவுக்கு, அறிமுகப்படுத்தி வைப்பவர் அவரின் சகோதரர் புனித அந்திரேயாவே. முதல் பார்வையிலேயே புனித பேதுருவின் தனித்தன்மையை இயேசு புரிந்துகொள்கிறார். பாறை எனும் பொருள்படும்படியாக, தன் தாய்மொழியான அரமேயு மொழியில், ‘கேபா’ என புதுப்பெயர் சூட்டுகிறார் இயேசு. அதுவே, கிரேக்கம், மற்றும் இலத்தீன் மொழிகளில், ‘பேதுரு’வானது.

புனித பேதுருவின் நடவடிக்கைகளை நாம் விவிலியத்தில் பார்க்கும்போது, அவர் எதையும் வெளிப்படையாகப் பேசுபவராக, எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக, எதற்கும் அஞ்சாதவராய் இருப்பதாகத் தோற்றம் கிடைக்கிறது. எடுத்துக்காட்டுகளைப் பார்க்கவேண்டுமானால், நிறையவே உள்ளது. ‘என்னை யாரென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்” எனச் சீடர்களிடம் இயேசு கேட்ட கேள்விக்கு, அவர்கள் சார்பில் முந்திக்கொண்டு பதிலளிக்கும் புனித பேதுரு, ‘நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்கிறார். இயேசுவும், புனித பேதுருவின் மீது, தன் திருஅவையைக் கட்டுவதாக வாக்களிக்கிறார். (மத்.16:18).

மற்றொரு இடத்தில், இயேசு தம் சீடர்களைப் பார்த்து ‘நீங்களும் என்னை விட்டுப்போய் விடுவீர்களா?” எனக் கேட்கும்போது, அங்கும், புனித பேதுருவே முந்திக்கொண்டு “நாங்கள் யாரிடம் செல்வோம்? வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன’ என்று நம்பிக்கை அறிக்கையிடுகிறார். இதே பேதுருதான், இயேசு கடலில் நடப்பதைக் கண்டதும், தானும் நடக்க ஆசைப்படுகிறார். அதே பேதுருதான், இயேசு பாடுகள் படவேண்டாம் என ஆலோசனை கூறி, இயேசுவின் கோபத்துக்கும் உள்ளாகிறார்.

இறுதி இரவுணவின்போது, சீடர்களின் காலடிகளைக் கழுவ இயேசு வந்தபோது, அதற்குச் சம்மதிக்க மறுத்த பேதுரு, ‘அப்படியானால் என்னோடு உனக்குப் பங்கில்லை” என்ற இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவுடன், “என் காலடிகளை மட்டுமல்ல கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்று சிறு குழந்தைபோல் பதிலளிக்கிறார். அந்த சிறு குழந்தைதான், கெத்சமனியில் வாளை உருவி தலைமைக் குருவின் பணியாளரின் காதை வெட்டுகிறார். நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் என இயேசு கூறியபோதும் அதை ஏற்க மறுத்த புனித பேதுருதான், அந்த தவற்றைச் செய்தபின் மனம் வருந்தி அழுது புலம்பினார். கெத்சமனியில், இயேசு, துயரத்தில் ஆழ்ந்திருந்தபோது, செபிக்கும்படி அவர் விடுத்த கட்டளையை மறந்து, அயர்ந்து தூங்கியவரும் இவர்தான். 

சீடர்களுள் முக்கிய இடம், புனித பேதுருவுக்கே இயேசுவால் வழங்கப்பட்டது. இவர் வீட்டிற்கு இயேசு சென்றதாகவும், தனக்கும் சேர்த்து வரி செலுத்தும்படி இவரிடமே இயேசு பணித்ததாகவும், இயேசுவின் தோற்றமாற்றம், இறுதி இறைவேண்டல் என்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அழைத்துச்சென்ற மூன்று சீடருள் இவரும் ஒருவர் எனவும் நற்செய்தியில் பார்க்கிறோம். பேதுருவின் படகிலிருந்துதான் கெனசெரேத் ஏரிக்கரையிலிருந்த மக்களுக்கு இயேசு போதிக்கிறார். இப்படி, பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, புனித பேதுரு, கி.பி.67 அல்லது 68ம் ஆண்டில், அதாவது, மன்னர் நீரோவின் ஆட்சிக் காலத்தில், 13 அல்லது 14வது ஆண்டில், தலைகீழாகச் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார். இயேசுவால் ஏற்கனவே தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டு, 42ம் ஆண்டு உரோமைக்கு வந்த புனித பேதுரு, 25 ஆண்டுகள் உரோமை ஆயராக பணியாற்றினார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அன்றிலிருந்து துவங்கியதுதான், திருத்தந்தையரின் வரலாறு. திருமறைக்காக தலைகீழாய் சிலுவையில் அறையுண்டு இறந்த புனித பேதுருவைப்போல், திருத்தந்தையர் பலர் துன்பம் மிகுந்த மரணங்களைச் சந்தித்தது, வரலாற்றில் பலமுறை மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இவற்றை, இனிவரும் வாரங்களில், ஒவ்வொன்றாக, தொடர்ந்து நோக்குவோம்.

No comments:

Post a Comment